tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 06 இதற்கு முன்னால்

1600 - இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பழைய ஓப்பேரா-வான, ஜேக்கோப்போ பெரி எழுதிய, யூரிடைஸ், இத்தாலியின் பிளாரன்சிலுள்ள பேலசோ பிட்டி அரண்மனையில் முதல்முறையாக நிகழ்த்தப் பட்டது. ஓப்பேரா என்பது பெரும்பாலும் பாடல்களைக் கொண்ட ஒரு மேற்கத்திய நாடக வடிவமாகும். இதன் பெரும்பாலான பகுதிகளை, இசைக் குழுவின் உதவியுடன், பாடகர்களே நிகழ்த்தினாலும், இது இசை நாடகத்திலிருந்து மாறுபட்டது. வழக்கமான நாடகத்தின் கூறுகளான பின்னணி அமைப்புகள், உடையலங்காரம், நடிப்பு, வசனம் ஆகிய வற்றையும் கொண்டிருந்தாலும், நிகழ்ச்சியின்(கதையின்) பெரும்பகுதியை இசையும், நடனமுமே விளக்குமாறு ஓப்பேரா இருக்கும்.

ஓப்பேரா என்ற இத்தாலியச் சொல்லுக்கு, படைப்பு என்று பொருள். ஓப்பஸ் என்ற லத்தீன் சொல் வேலையைக் குறித்தாலும், அதன் பன்மைச் சொல்லான ஓப்பேரா பொதுவாக (கலை) படைப்புகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல், வசனம், இசை, நடனம் என்று பல்வேறு கலைகளை உள்ளடக்கியதாக இருப்பதால், பன்மைச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஓப்பேரா, 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இத்தாலியில் உரு வானது. 1597இல் ஜேக்கோப்போ பெரி-யால் எழுதப்பட்டு, 1598இல் பேலசோ கோர்சி அரண்மனையில் நிகழ்த்தப்பட்ட, டாஃபைன் என்பதே, தற்போதைய இலக்கணங்களுக்குப் பொருந்துகிற முதல் ஓப்பேராவாகும். அதனால், ஓப்பேரா என்ற வடிவத்தைக் கண்டுபிடித்தவராக ஜேக்கோப்போ பெரி-யே குறிப்பிடப்படுகிறார்.  இந்த முதல் ஓப்பேராவான டாஃபைன் 1627இல் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டதைத் தொடர்ந்து, ஓப்பேரா என்ற வடிவம், பிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்ய மொழிகளுக்கும் சென்று, மேற்கத்திய நாடு களெங்கும் பரவியது.

அரண்மனைகளின் கலை வடிவமாக இருந்த ஓப்பேரா, 1637இல் முதன்முதலாக, நாடக விழா போன்று தொடராக, வெனிசில், நுழைவுக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடத்தப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, ஓப்பேரா ஹவுஸ் என்றும் அரங்கங்கள் தோன்றின. அரச குடும்பத்தினரின் ரசனைக் குரியதாகவே இத்தாலிய ஓப்பேரா உருவாக்கப்பட்ட நிலையில், எளிய மக்களின் ரசனைக்குரி யதாக ஜெர்மன் ஓப்பேரா உருவானது. இத்தாலிய ஓப்பேரா வடிவமே மிகப் புகழ்பெற்றதாக விளங்கினாலும், ஸ்பெயின், ரஷ்யா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கென்று தனிச்சிறப்பான வடிவ ஓப்பேராக்களை உருவாக்கியுள்ளன. தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் வரவு, நாடகம் போன்றே ஓப்பேராவுக்கும் பரவலான ஒளிபரப்பு போன்ற உதவிகளையும், நேரடிப் பார்வையாளர் இன்மை போன்ற இடையூறுகளையும் அளித்திருக்க, பல நாடுகள் ஓப்பேராவுக்கு மானியம் வழங்கிப் பாதுகாக்கின்றன.

- அறிவுக்கடல்

;