tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 02 இதற்கு முன்னால்

1942 - இரண்டாம் உலகப் போரின் போது, 10 ஆயிரம் அமெரிக்க வீரர்களை ஏற்றிச்சென்ற இங்கிலாந்து பயணிகள் கப்பலான குயின் மேரி, அதன் பாதுகாப்புக்குச் சென்ற   போர்க்கப்பலான குரகோவா என்பதை எதிர்பாராமல் மூழ்கடித்தது. முதல் உலகப்போர்க் காலத்தில் கட்டப்பட்ட போர்க்கப்பலான குரகோவா, பெரும்பகுதிப் பணிக்காலத்தில் கொடிக் கப்பலாகவே(ஃப்ளாக் ஷிப்) இருந்துள்ளது. கப்பல்களின் அணிக்கு உத்தரவிடும்  தலைமைப் பொறுப்பிலுள்ளவர் ஒரு தனிச்சிறப்பான கொடியைப் பயன்படுத்துவார் என்பதால், ஃப்ளாக் ஆஃபிசர் என்றும், அவர் பயன்படுத்தும் கப்பல் ஃப்ளாக் ஷிப் என்றும் அழைக்கப்படும்.

ஃப்ளாக் ஷிப் என்பது, அந்த அணியிலேயே பெரியதாகவும், வேகமானதாகவும், அதிக ஆயுதபலம் கொண்டதாகவும் இருக்கும் என்பதால், பிற்காலத்தில் பிற துறைகளிலும் முக்கியமானவற்றை அப்பெயரால் அழைக்கும் பழக்கம் உருவாயிற்று. ஜெர்மனியின் யு-போட் நீர்மூழ்கிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, குவின் மேரியும், அதன் பாதுகாப்புக் கப்பல்களும், எண்.8 ஜிக்ஜாக் முறைப்படி பயணித்தன. கப்பல் செல்லும் வழிகுறித்து எதிரியைக் குழப்புவதற்காக திசையை மாற்றிமாற்றிப் பயணிப்பது ஜிக்ஜாக் முறை என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணத்திலும் தனிப்பட்ட ஜிக்ஜாக் முறை உருவாக்கப்பட்டு, அந்த அணியிலுள்ள அனைத்துக் கப்பல்களின் தளபதிகளிடமும் தரப்படும். அக்காலத்தில் தகவல்தொடர்பு வசதிகள் குறைவாக இருந்ததாலும், எதிரிகள் ஒட்டுக்கேட்க முடியும் என்பதாலும், ஒவ்வொரு முறை திரும்பும்போதும் தெரிவிக்காமல், ஒலியெழுப்பி எச்சரிக்க ஜிக்ஜாக் கடிகாரங்கள் என்பவையும் பயன்படுத்தப்பட்டன.

குறுக்கும், நெடுக்குமாக மாறிமாறிப் பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் குரகோவா குறுக்கே வருவதுபோலத் தோன்றினாலும், போர்க்கப்பல் என்பதால் உரிய நேரத்தில் விலகிச்சென்றுவிடும் என்று குயின் மேரியின் தளபதி கருதிவிட்டார். ஆனால், முற்காலத்திய கப்பல்களின் முன்பகுதியின் அடியில், எதிரிக் கப்பல்களைத் தாக்குவதற்காக, 6-12 அடி நீளத்திற்குப் பொருத்தப்படும் (ரேம்) பகுதி மோதியதில், இரண்டு துண்டுகளாக உடைந்து, 6 நிமிடங்களில் மூழ்கிப்போனது குரகோவா. எதிரிகளால் தாக்கப்படலாம் என்பதால், நிறுத்தாமல் சென்ற குவின் மேரி, மற்றொரு பாதுகாப்புக்கப்பலுக்குத் தெரிவித்தது. சில மணிநேரம் கழித்து வந்த அக்கப்பலால் 101 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 337 கடற்படையினர் பலியான இந்நிகழ்வு ரகசியமாக வைக்கப்பட்டதுடன், தப்பியவர்கள் இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பின்னாளில்  குவின் மேரி கப்பலின் உரிமையாளர் நிறுவனத்தின்மீது கடற்படை வழக்குத் தொடர, தவறு குரகோவாவினுடையது என்று தீர்ப்பளித்து பிரச்சனை முடிக்கப்பட்டுவிட்டது.

- அறிவுக்கடல்

;