tamilnadu

img

இந்நாள் மே 11 இதற்கு முன்னால்

2018 - ஜேம்ஸ் கிறிஸ்டொஃபர் ஹாரிசன் என்ற ஆஸ்திரேலியர் கடைசி முறையாக இரத்த தானம் செய்தார். அப்போது 81 வயதான அவருக்கு, அது 1173ஆவது இரத்த தானம்! ஆம்! உலகிலேயே மிக அதிக இரத்த தானம் செய்த ஹாரிசன், அப்போதும்கூட, 81 வயதுக்குமேல் இரத்த தானம் செய்ய ஆஸ்திரேலியச் சட்டங்களில் இடமில்லாததாலேயே, இரத்த தானம் அளிப்பதிலிருந்து ‘‘ஓய்வு பெற்றார்’’! 1936இல் பிறந்த ஹாரிசனுக்கு, 14 வயதில் நுரையீரல் அறுவை செய்ய நேர்ந்தது. அந்தச் சிகிச்கைக்கு 13 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. இரத்த தானம் தன் உயிரைக் காத்ததால், இரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயதான 18 வயதையடைந்ததும், இரத்த தானம் செய்து பிறரைக்காக்க உறுதியேற்றதுடன், 1954இல் 18ஆவது வயதில் இரத்த தானம் செய்யவும் தொடங்கினார் ஹாரிசன். சிலமுறை இரத்த தானம் செய்த பின்பே, அவரது இரத்த ப்ளாஸ்மாவில் தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்ப் பொருட்கள் (ஆண்ட்டிபாடி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எதிர்ப் பொருட்களைக் கொண்டு, பிறந்த குழந்தைகளின் ஆர்எச்-டி வகை ஹீமோலிட்டிக் (இரத்தச் சிவப்பணு சிதைவு) நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான இரத்த தானத்தைப் போலல்லாமல், இரத்தப் ப்ளாஸ்மாவை இரண்டு வாரங்களுக்கொருமுறை தானம் செய்யலாம் என்பதால், 57 ஆண்டுகளில் (2011இல்) ஆயிரம் தானங்களைக் கடந்தார் ஹாரிசன். 63 ஆண்டுகளில் தன் மகள் உட்பட, 24 லட்சம் தாய்களின் கருவிலிருந்த குழந்தைகளைக் காத்திருக்கிறார் ஹாரிசன். இவரது இரத்தத்தின் தனித்தன்மை கண்டறியப்பட்டதும், இவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.5 கோடி) காப்பீடு செய்யப்பட்டது. தான் சாதனையாளராக இருப்பதைவிட, தன்னைவிட அதிகமாக வேறு யாராவது தானம் செய்து, அதிக உயிர்களைக் காக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்கிறார் ஹாரிசன். அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 2007இல் இரத்த ப்ளாஸ்மா தானத்தில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முயற்சித்தபோது, இரத்த தானம் வணிகமயமாகவிடும் என்று கடுமையாக எதிர்த்த ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்!அறிவுக்கடல்

;