tamilnadu

img

இந்நாள் மே 24 இதற்கு முன்னால்

1683 - உலகின் முதல் பல்கலைக்கழக அருங்காட்சியகமான, ‘கலை, தொல்லியல் ஆகியவற்றுக்கான ஆஷ்மோலியன் அருங்காட்சியகம்’, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்பது பொதுவாக, உயர்கல்விக்கு உதவும் வகையில், பல்கலைக்கழகத்தில் திரட்டப்பட்டுள்ள கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் முதலானவற்றைக்கொண்டு, பல்கலைக்கழகத்திற்குள்ளேயே செயல்படுவதாகும். பொதுவாக ஆய்வுக்காகத் திரட்டப்பட்ட பொருட்களும், ஆதாரங்களும் இந்த அருங்காட்சியகங்களில் முக்கிய இடம்பெறும். ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு, அவற்றுக்கான ஆதாரங்களை இந்த அருங்காட்சியகங்கள் அளிக்கின்றன. மாணவர்களுக்கு பொழுதுபோக்காகவும், கற்பதற்கு உதவியாகவும் அமையும் இந்த அருங்காட்சியகங்கள், பொதுமக்களுக்கும் அரிய பொருட்களை காண்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் தொல்பொருட்கள், நுண்கலைப் பொருட்கள் முதலானவற்றைக் கொண்டிருக்கிறது. இது உட்பட பதினோரு அருங்காட்சியகங்களும், ஓர் ஓவியக் காட்சியகமும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ளன. நடுக்கால பல்கலைக்கழகங்கள் தாவரவியல், உடற்கூறியல் ஆகியவற்றைப் போதிக்க அரங்கங்கள் என்ற பெயரில் அவை தொடர்பான திரட்டல்களை வைத்திருந்ததே, பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கான தொடக்கமாகக் கூறப்படுகிறது. முதல் தாவரவியல் அரங்கம் 1540இல் இத்தாலியின் பைசா அல்லது படோவா நகரிலும், மருத்துவம் பயிற்றுவிக்க முதல் உடற்கூறியல் அரங்கம் படோவாவிலும் தொடங்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்படி திரட்டல்களைப் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை விரைவில் ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள் முதலானோருக்குக் கற்பிப்பதிலும் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, வேதியியலுக்கும் பரவியது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் சர்ச் ஓவியக் காட்சிக்கூடம் 1546இலேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஸ்விட்சர்லாந்தின் பேசல் பல்கலைக்கழகம், தங்களிடமிருந்த திரட்டல்களை 1671இல் பொதுமக்கள் பார்வையிட அனுமதித்துவிட்டாலும்கூட, ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே முதல் முழுமையான பல்கலைக்கழக அருங்காட்சியகமாக ஏற்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பெரும்பாலான பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மட்டும் பயன்படுபவையாக இருந்தநிலைமாறி, பொதுமக்களுக்கும் தங்கள் துறைபற்றிய கல்வியை அளிப்பதையும் நோக்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்று உலகெங்கும் ஏராளமான பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்தியாவில் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்திலும், கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் உள்ளன.

- அறிவுக்கடல்

;