tamilnadu

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1873 - ட்ரோஜான் போர் நடந்த ட்ராய் நகரின் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள், ஜெர்மானிய வணிகரும், தொல்லியல் ஆர்வலருமான ஹீன்ரிச் ஷ்லீமேன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ராய் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பொருட்களான இவற்றை பிரயமின் பொக்கிஷம் என்று ஷ்லீமேன் அழைத்தார். பிரயம் என்பவர் ட்ரோஜான் போர்க்காலத்தில் ட்ராயை ஆண்ட புகழ்பெற்ற அரசர். ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய காப்பியங்கள் ட்ரோஜான் போரையொட்டி எழுதப்பட்டிருப்பதுடன், வேறு இலக்கியங்களிலும் ட்ராய் நகர், அதன் மக்களான ட்ரோஜான்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ட்ராய் நகர் இருந்த சரியான இடம் என்பது தெரியவில்லை. சொல்லப்போனால், ட்ராய் பற்றிய அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் என்பதான கருத்தும்கூட நிலவியது. 16-17ஆம் நூற்றாண்டுக்காலப் பயணிகளான பிரான்சின் பியரி பெலோன், இத்தாலியின் பியட்ரோ டெல்லா வல்லே முதலானோர், ட்ராய், அக்காலத்திய கிரேக்க நகரமான அலெக்சாண்ட்ரியா ட்ரோவாஸ் ஆகியவை இருந்த இடமாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தைக் குறிப்பிட்டனர். 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தொல்லியல் ஆய்வாளரான ஜீன் பாப்டிஸ்டே லெ-செவாலியே, தற்போதைய இடத்திற்கு 5 கி.மீ. தொலைவிலுள்ள மற்றோரிடத்தைக் குறிப்பிட்டார். 1822இல் ஸ்காட்லாந்து இதழியலாளரான சார்லஸ் மக்லாரென்தான் முதல்முதலில் தற்போதைய இடத்தை அடையாளம்கண்டார். 1866இல் பிராங்க் கால்வெர்ட் என்ற ஆங்கிலேயர், இப்பகுதிகளில் மிகப்பெரிய ஆய்வை மேற்கொண்டு, புதிய இலியம் மலைப்பகுதியில்தான் ட்ராய், ஹிசார்லிக் ஆகிய நகரங்களிருந்ததாக உறுதிப்படுத்தினார். இலியம் என்பது ட்ராயின் மற்றொரு பெயர் என்பதும், இலியட் காப்பியம், இலியத்தின் பாடல் என்று கிரேக்கத்தில் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டு கண்டுபிடித்த பிரயமின் பொக்கிஷத்தில் சில பொருட்களை ஷ்லீமேன் ஒட்டோமான் பேரரசிடம் விற்றுவிட, மீதம், பின்னாளில் பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது காணாமல்போன அவற்றை மாஸ்கோவின் புஷ்கின் அருங்காட்சியகத்தில் 1993இலிருந்து வைத்திருக்கிற ரஷ்யா, ரஷ்யாவின் அருங்காட்சியகங்களில் நாஸிப்படைகள் அழித்தவற்றுக்கு மாற்று என்றுகூறித் திருப்பித்தர மறுத்துவிட்டது.அறிவுக்கடல்

;