tamilnadu

img

இந்நாள் பிப். 04 இதற்கு முன்னால்

2004 - ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது! ‘ஃபேஸ் புக்’ என்பது, ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் படங்கள், அவர்களைப்பற்றிய விபரங்களுடன், சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும், ‘தொலைபேசி டைரக்டரி’யைப் போன்ற பட்டியலாகும். 2000களின் தொடக்கத்தில், சில கல்வி நிறுவனங்கள், கடவுச்சொல் பாதுகாப்புடன், தங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பதிவேற்றுதல் உள்ளிட்ட வசதிகளுடன் இவற்றை ஆன்லைனில் வெளியிடத்தொடங்கின. பொதுவாக ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் தனித்தனியாக வெளியிடப்பட்டுவந்த நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களுக்கும் சேர்த்து இதை வெளியிடத் திட்டமிடப்பட்டு, தாமதமாகிக்கொண்டிருந்தது. தன்னால் விரைவில் அதைச் செய்யமுடியும் என்று நண்பரிடம் கூறிய மார்க் ஸக்கெர்பர்க், இரண்டு (பெண்களின்) படங்களை அருகருகே வைத்து, இரண்டில் கவர்ச்சியானதைத் தேர்ந்தெடுக்கும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தைப்போன்ற ஒன்றை, 2003 நவம்பரில் ‘ஃபேஸ்மாஷ்’ என்ற பெயரில் உருவாக்க, நான்கு மணிநேரத்தில் 450 பேர் இணைந்து, 22,000 படங்களைப் பார்வையிட்டனர். சில நாட்களில் இத்தளத்தை முடக்கிய ஹார்வர்ட் நிர்வாகம், தனிப்பட்ட உரிமைகளில் தலையிட்டதற்காக அவர்மீது நடவடிக்கையும் எடுத்தது.

த-ஃபேஸ்புக் என்ற புதிய தளத்தை உருவாக்கிய ஸக்கெர்பர்க், பிப்ரவரி 4இல் ‘thefacebook.com’ என்ற முகவரியில் அதைத் தொடங்கினார். ஒரு மாதத்திற்குள் ஹார்வர்டின் பெரும்பகுதி மாணவர்கள் இணைந்துவிட, மார்ச்சில் கொலம்பியா, ஸ்டான்ஃபோர்ட், யேல் பல்கலைக்கழகங்களுக்கு விரிவாக்கப்பட்டு, அடுத்த மாதத்தில் பெரும்பாலான அமெரிக்க, கனடிய பல்கலைக்கழகங்களும் இணைக்கப்பட்டன. முதலீடுகள் வரத்தொடங்க, மற்றொரு நிறுவனத்திடமிருந்த ‘facebook.com’ முகவரி, 2005இல் 2 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டது. 2005 செப்டம்பரில் பள்ளி மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்டு, ஆப்பிள், மைக்ரோசாஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களும், பின்னர் 2006 செப்டம்பரில் 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். 2009 செப்டம்பரில்தான் முதன்முதலாக லாபமீட்டத் தொடங்கிய ஃபேஸ்புக், 2012இல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதுவரை மதிப்பிடப்பட்டதிலேயே மிகஅதிகமாக  சுமார் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டது. 237 கோடிப் பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக்கை, விளையாட்டாகத் தொடங்கிய ஸக்கெர்பர்கின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ஐந்தே முக்கால் லட்சம் கோடி ரூபாய்!

;