tamilnadu

img

உயர்ந்த அதிகார முஷ்டியை இறக்கிய பிரான்ஸ் மக்கள்

பதவிக்கு வந்தபிறகு மக்களின் கருத்தைக் கேட்க அவசியமில்லை என்ற நிலையை எடுத்த ஏராளமான அரசியல் தலைவர்களின் வரிசையில் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இணைந்திருந்தார். பறந்து கொண்டிருந்த அவரை “மஞ்சள் அங்கி” போராட்டம் தரையில் இறக்கி வேடிக்கை பார்த்துள்ளது. 


கடந்த 23 வாரங்களாக பிரான்ஸ் மக்கள் அரசின் வரிக்கொள்கைக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்தும் போராடி வருகிறார்கள். நாட்கள் கடந்தால் போராட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும் என்று மக்ரோன் தலைமையிலான அரசு நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்க முடிவு செய்தது. இடையில், காவல்துறையை வைத்து உருட்டல், மிரட்டல் வேலையெல்லாம் செய்து பார்த்தது. அதெல்லாம் பலிக்கவில்லை. தேச நலனுக்கு எதிரானவர்கள் என்று அங்கும் “மோடி”யிசத்தை அவிழ்த்துவிட்டார்கள். எடுபடவில்லை.


இப்போது வேறு வழியில்லாமல் சில அறிவிப்புகளை மக்ரோன் வெளியிட்டுள்ளார். அதில் வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. முதலில் வரி விதிப்புக்கான போராட்டமாகத் துவங்கிய மஞ்சள் அங்கி எதிர்ப்பலை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குப் பரவியது. இதுகுறித்து தொடர்ந்து விவாதிப்பது போன்று மக்ரோன் தலைமையிலான அரசு காட்டிக் கொண்டாலும், நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை. நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் செல்வாக்கு படுவீழ்ச்சி அடைந்ததாகப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறின. மேலும் அவர் அகங்காரம் பிடித்தவர் என்ற தோற்றம் மக்களிடையே உருவாகியது. அந்தத் தோற்றத்தை விரைவில் போக்காவிட்டால் தொடர்ந்து பதவியில் நீடிப்பதே சிரமம் என்ற முடிவுக்கு வந்ததால்தான் போராடுபவர்களின் கோரிக்கைகள் சிலவற்றையாவது நிறைவேற்றவிருக்கிறார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே போராட்டக்காரர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பேசத் துவங்கியதும் அவரது தலைவலியை அதிகரித்தது.


தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், வரிக்குறைப்பு, குடிமைப்பணி சீர்திருத்தம் உள்ளிட்டவை மக்ரோனின் அறிவிப்பில் இடம் பிடித்துள்ளன. மேலும், அவரது அறிவிப்புகளில், வருமான வரிக்குறைப்பு, விலைவாசிப் புள்ளிகளோடு ஓய்வூதியத்தை இணைத்தல், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மூடப்படுவதை நிறுத்துதல் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


போராட்டக்காரர்களோடு பேச முடியாது என்று நாற்காலியை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த மக்ரோனின் பிடிவாதத்தை மக்கள் தளர்த்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்கினார்கள். எதிர்த்தாக்குதல் நடக்கும், அதைப் பயன்படுத்திக் கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று நிர்வாகம் நினைத்தது. போராட்டக்காரர்களின் நிதானம் அதில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.


மேலும், ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் வீரியம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நடுத்தர ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களின் போராட்டத்தில் இணைந்தனர். புதிய, புதிய கோரிக்கைகளும் இணைக்கப்பட்டன. போராட்டம் தொடர்ந்தால், கோரிக்கைகளும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிர்வாகத்திற்கு தொற்றியது.


இதனால்தான் தற்போது சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் வரவிருப்பதும் மக்ரோன் இறங்கி வந்ததற்குக் காரணம் என்கிறார்கள். எப்படியோ, தனது அதிகார முஷ்டியை உயர்த்தி மக்களை மிரட்டி வந்த மக்ரோனை, மக்கள், ஜனநாயகம் என்ற ஆயுதத்தைக் காட்டி பணிய வைத்திருக்கிறார்கள். அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் தாக்கம் அதில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;