tamilnadu

img

மாற்றம்... நிதானம்... முன்னேற்றம்...

“மிஸ்டர் மொரேல்ஸ், இறையாண்மை மற்றும் விடுதலை பற்றி பிரசங்கம் செய்வது எளிது. வந்து ஆட்சி செய்து பாருங்கள். ஒரு நாட்டை ஆள்வதுஎன்றால் என்னவென்று அப்போது தெரியும்” என்று சவால் விட்டார் பொலிவியாவின் அப்போதைய ஜனாதிபதிகார்லோஸ் மெசா. 2005 ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது பதவி விலகலின்போது மெசா இவ்வாறு பேசினார். அந்தத் தேர்தலில் இவோ மொரேல்ஸ் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.ஆனால் தற்போது பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார் மெசா. கடந்த 13 ஆண்டுகளில் பொலிவியாவின் வரலாற்றில்எப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் மொரேல்ஸ். பெரும் கடனாளி என்றிருந்த பொலிவியாவை,தென் அமெரிக்கப் பகுதியில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான வளர்ச்சித் திட்ட அமைப்பு, பொலிவியாவின் மாதிரியைப் புகழ்ந்திருக்கிறது. அந்த அமைப்பின் பிரதிநிதியான லூசியானா மெர்மெட், “புதிய வளர்ச்சிக் கட்டத்தை பொலிவியா எட்டியிருக்கிறது. சமூகத்தில் சம அந்தஸ்து, அனைவருக்குமான நலன், சமூக நீதி மற்றும் செல்வப் பகிர்வு ஆகியவற்றில் பெரும்முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள்”

என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதைஅழுத்தந்திருத்தமாக இவோ மொரேல்ஸ் பதிவு செய்கிறார். நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கேந்திரமான தொழில்கள் ஆகியவற்றை நாட்டுடைமையாக்கியதுதான் பெரும் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் அவர். இடதுசாரி அரசின் இத்தகையநடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 லட்சத்து 44 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்தை பொலிவியா இழந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நாட்டை நிரந்தரமான சிக்கலில் அது ஆழ்த்தியிருக்கும் என்பது அவர்களின் கருத்தாகும்.தங்குதடையற்ற சந்தை, தாராளமான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தனியார் மயம் ஆகியவைதான் வெற்றிக்கான சூத்திரங்கள் என்று அமெரிக்காவும் அதன்கட்டளைப்படி இயங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை பரிந்துரைத்தன. வெறுமனே தலையைஆட்டி நின்றுவிடாமல், அந்தப் பரிந்துரைகளை அப்படியேநடைமுறைப்படுத்தினார்கள் தென் அமெரிக்க ஆட்சியாளர்கள். பொலிவியாவில், 200க்கும் மேற்பட்ட பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு, அதிலும் குறிப்பாகஅந்நிய பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. 

பெரும் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கைகள் பொலிவியாவின் பொருளாதாரத்தைச் சூறையாடின. கொதித்தெழுந்த மக்கள் இடதுசாரிக்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்புக்கு ஆதரவாகத் திரண்டனர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவோமொரேல்ஸ் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிவியாவின் பொருளாதாரம் மூன்று மடங்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.வலதுசாரிகளின் ஆட்சியின்போது பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலான மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள்தெருக்களில் உழன்றனர். தற்போது 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்ல வைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டு சாதாரண மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கியூபாவுடன் இணைந்து லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி சரி செய்யப்பட்டது. நாட்டின் அந்நியக்கடனானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவிகிதமாக வலதுசாரிகளின் ஆட்சியில்இருந்தது. தற்போது இடதுசாரி ஆட்சியின் நடவடிக்கையால் 28 சதவிகிதத்திற்குக் கீழ் சென்றுவிட்டது.

முத்தாய்ப்பாக

மக்கள் நல அரசாகத் திகழும் மொரேல்ஸ் தலைமையிலான அரசு, வேறு எந்த அரசும் செய்யத் துணியாத ஒருவேலையைச் செய்திருக்கிறது. போதைத் தடுப்பு என்றபெயரில் பொலிவிய மண்ணில் பல ராணுவ மையங்களைவைத்திருந்த அமெரிக்கப்படைகளை வெளியேறுங்கள் என்று விரட்டியடித்தது. வரும் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  எதிர்க்கட்சிகளோ அமெரிக்காவை நம்பியிருக்கின்றன. மொரேல்ஸ் மக்களோடு மக்களாக இருக்கிறார்.


;