tamilnadu

img

மீண்டும் வருவோம்! - பேரா. விஜய் பிரசாத்

2019 நவம்பர் 9அன்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் பலவந்தமாக பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அமெரிக்க கைக்கூலிகளான கர்லோஸ் மிசா தலைமையிலான எதிர்க்கட்சி கும்பல்கள் வன்முறையை மேலும் தீவிரப்படுத்தினர். மொரேல்ஸ் கட்சியான சோசலிசத்திற்கான பேரியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்கள்,ஆதரவாளர்களை குறிவைத்து தாக்குதல் தொடுத்தனர். இத்தகைய தாக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களது உடல்களை சவப்பெட்டிகளில் எடுத்துக் கொண்டு, லாபாஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மொரேல்ஸ் ஆதரவாளர்கள் ஆவேசமிக்க பேரணியை நடத்திய காட்சி இது. (படங்கள்: தி கார்டியன்)  

பொலிவியாவின் ஜனாதி பதியாக அக்டோபர் 23 அன்று நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவோ மொரேல்ஸ், இரண்டு வாரங்களிலேயே, தனது பதவியை பலவந்தமான சூழலில் ராஜினாமா செய்தார். நவம்பர் 9அன்று ஜனாதிபதி மாளி கையின் கதவுகளை வலதுசாரி கலகக் கும்பல்களுக்கு காவல்படை  திறந்துவிட்டு, அவர்கள் ஜனாதிபதியை கொல்ல இருக்கிறார் கள் என்ற வதந்தி நாடு முழுவதும் பரப்பப் பட்டது. நாட்டை பதற்றம் தொற்றிக் கொண்டது.  இந்நிலையில் மொரேல்ஸ் புதிய தேர்த லுக்கு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் சுயநலக் குழுக்களை ஆதரிக்கும் கட்சிகளின் அணிக்கு தலைமை வகித்த கார்லோஸ் மிசா இந்த அறிவிப்பை நிராகரித்தார். நடந்து முடிந்த தேர்தலில் தோற்றுப் போனவர் இந்த மிசா. தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி, “நிரந்தர எதிர்ப்பியக்கம்” நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்த எதிர்ப்பி யக்கங்கள் அரசுக்கு எதிரான கலகமாக மாற்றப்பட்டன. காவல்துறையினரும், சுய நலக் குழுவினரின் வன்முறைக் கும்பல்க ளோடு இணைந்தன. ராணுவம் நடுநிலை யுடன் இருந்திருந்தால், மொரேல்ஸ் பதவியில் நீடித்திருப்பார். ஆனால் ராணுவத் தளபதி வில்லியம் காலிமன், ஜனாதிபதி மொரேல்ஸ் பதவி விலக வேண்டும் என்று கோரியதால் ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை.

சோசலிசப் பாதையில்...

2006ல் ஈவோ மொரேல்ஸ் முதன் முத லாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரே அந்த நாட்டின் பூர்வகுடி மக்களிலிருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். பொலிவி யாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பல்வேறு இன பூர்வகுடி மக்களா வர். அவர்கள் ஏழ்மையில் உழன்றதோடு, ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்தவர்களின் வம்சாவளியினரால் தொடர்ந்து ஒடுக்கப் பட்டு வந்தனர். 2005ல் நடைபெற்ற தேர்தலில் மொரேல்ஸ் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற்றார். அவரது சோசலிசத்திற்கான பேரி யக்கம் (மாஸ்) பூர்வகுடி மக்களின் கவுரவத்தை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 2009ல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின்படி பூர்வகுடிகளின் கொடி பழைய பொலிவியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்டது. அந்தக் கொடியும், ராணுவ வீரர்களின் உடைகளில் தைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பறக்கவிடப்பட்டது. பல தேசிய இனங்களின் நாடான பொலிவியா, இனியும் அதன் பாரம்பரியப் பெருமைகளை இழிவுபடுத்துவ தில்லை என முடிவெடுத்தது.

இந்தாண்டு ஐ.நா. சபையில் பேசிய மொ ரேல்ஸ், வறுமையை கடுமையாக குறைத்தது; சராசரி வயதை உயர்த்தியது; 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற நாடாக மாற்றியது; அனை வருக்கும் இலவச பொது மருத்துவத்தை அமல்படுத்தியது; மேலும் 10 லட்சம் பெண்கள் நிலவுரிமை பெற்றது ஆகியன குறித்து விவ ரித்தார். பொலிவியா நாடாளுமன்றத்தில் பெண்களே பெரும்பான்மை (53 சதவீதம்). “நாங்கள் எங்கள் நாட்டின் இயற்கை வளங்க ளையும் அரசியல் பொருளாதார முக்கியத்து வம் பெற்றவைகளையும் தேசியமயமாக்கி யுள்ளோம்” என்று பெருமிதத்துடன் பதிவு செய்தார் மொரேல்ஸ்.

ஈவோ மொரேல்ஸ் முதன் முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது வெனிசுலா முதல் அர்ஜெண்டினா வரை “சிவப்பு அலை” அடித்துக் கொண்டிருந்த நேரம். உற்பத்திப் பொருட்களின் விலைகள் வீழ்ந்த போது இந்த இடதுசாரி அரசுகள் அதி காரத்தை இழந்தன. ஆனால் மொரேல்ஸ் மட்டும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் இருந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி மேல் வெற்றியாகப் பெற்றார். ஆனால் அவர் பொலிவியாவின் சுயநல சக்திகள் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை தொடர்ந்து சம்பாதித்து வந்தார்.

அமெரிக்க சதி

மொரேல்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற போது லா பாஸ் நகரில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் அவர் ஒரு “சட்ட விரோத கொக்கோ கிளர்ச்சியாளர்” என்று அறிவித்து அவரின் அரசை நிலை குலைய வைக்க நடவடிக்கை களை உடனடியாகத் தொடங்கியது. அமெரிக்கா அனைத்து கடன் வசதிகளையும் கடன் நிவாரணப் பேச்சு வார்த்தைகளையும் தாமதப்படுத்தும் என்றும் மொரேல்ஸ் “நன்ன டத்தையை” நிருபித்தாலே அவை தொடரும் என்றும் அறிவித்தது. அவர் நாட்டின் முக்கியத் துறைகளை தேசியமயமாக்கினாலோ அல்லது கொக்கோ விவசாயத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் திரும்பப் பெற்றாலோ தண்டிக்கப்படுவார் என்று பகி ரங்கமாக மிரட்டியது. ஆனால் மொரேல்ஸ் அமெரிக்காவிற்கு அத்தகைய ‘விசுவாசம்’ எதையும் காட்ட தயாரில்லை.

பொலிவியா பல ராணுவக் கலகங்களைச் சந்தித்துள்ளது. அந்தநாட்டு ராணுவம் அமெ ரிக்காவின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு எப்போதும் ஜனாதிபதி மொரேல்சை பதவியி லிருந்து தூக்கியெறிய தயாராக இருந்தது. ஆனால் மொரேல்ஸ் மற்றும் மாஸ் அமைப்பின் செல்வாக்கும் ராணுவத்தை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்தது. மொரேல்ஸ் அரசின் சோசலிச திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தியது. விளைபொருட்களின் விலை கள் வீழ்ந்தபோதும், அவரின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் ‘ராணுவக் கலகம்’ நடத்துவதை அமெரிக்கா தாமதப்படுத்த வேண்டியதாயிற்று.

2019அக்டோபர் 20 தேர்தலுக்கு முன்பே பொலிவியா பதற்றம் நிறைந்து காணப்பட்டது. மொரேல்ஸ் நான்காவது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். நீதிமன்றங்கள் அவர் போட்டியிடத் தடையில்லை என அறி வித்தன. அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த கார்லோஸ் மிசாவை 10 சதவீதத்திற்கும் அதிக மான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க டித்தார். ஆனால், மிசா தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தார். அமெரிக்க கண்டத்து நாடுகளின் அமைப்பான ஓஏஎஸ், (அது அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் அமைப்பு) வாக்கு எண்ணிக்கை யில் முறைகேடு என அறிவித்தது. அந்த அமைப்பு, “திடீர் மற்றும் விளக்க முடியாத கார ணங்களால்” முதற்கட்ட தேர்தல் முடிவுக ளுக்கும் பின் வந்த முடிவுகளுக்கும் உள்ள மாறுபாடுகள் ஆச்சரியப்பட வைப்பதாக தெரி வித்தது. ஆனால் முறைகேடு நடந்ததற்கு எந்த ஆதாரமும் அது அளிக்கவில்லை. சிஇபிஆர் என்ற அமைப்பு (சென்டர் பார் எக்கனா மிக் அண்ட் பாலிசி ரிசர்ச்) எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அறிவித்தது. இருப்பினும் பொலிவியாவின் சுயநலக் கும்பல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்த தேர்தல் முடிவை செல்லாததாக்க முயன்றனர். இதனடிப்படையில் வலதுசாரிகள் தங்கள் ஆதரவாளர்களை சாலைகளில் இறங்கி வன்முறையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களுடன் காவல் துறையினரும் எதிர்ப்புரட்சி செய்து கலந்து கொண்டனர். இதன் பின்னணியில் அமெரிக்க அரசும் ஓஏஎஸ் அமைப்பும் பெரும் பங்காற்றியுள்ளனர்.

தற்போது மொரேல்ஸ்க்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்துள்ளது. அதேசமயம் பொலிவியாவில் ராணுவம், மாஸ் கட்சியின் ஆதரவாளர்களையும் பூர்வகுடி தலைவர்க ளையும் கைது செய்யத் தொடங்கியுள்ளது. பூர்வ குடியினரின் கொடி ராணுவ வீரர்களின் உடைகளிலிருந்தும், அரசுக் கட்டிடங்களிலி ருந்தும் பிரித்து எறியப்பட்டுள்ளது. அந்தக் கொடி தெருக்களில் கொளுத்தப்பட்டு “பொலி வியா கிறிஸ்துவுக்கு சொந்தமானது” என்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இது பூர்வகுடி மக்களின் மீதான நேரடியான தாக்குதல்.  மொரேல்ஸ் இத்தகைய வன்முறை களைத் தவிர்க்கவே ராஜினாமா செய்தார். ஆனாலும், அது உதவவில்லை. “நாங்கள் திரும்ப வருவோம்” என்று அவர் எழுதியுள் ளார். துபே அமரு என்ற ஆண்டீஸ் பழங்குடி களின் தலைவரது பொன்மொழியோடு மொரேல்ஸ் தமது அறிவிப்பை முடித்துள்ளார்:  “நாங்கள் திரும்ப வரும்போது நாங்கள் பல மில்லியன்களாக வருவோம்.” 

தி இந்து (13.11.19) ஆங்கிலம், 
தமிழில் : தூத்துக்குடி க.ஆனந்தன்


 

;