tamilnadu

img

ரால் காஸ்ட்ரோவுக்கு லெனின் விருது

ஹவானா, மே 2- சோசலிசத்தை கட்டமைப்பதிலும் நீதி, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய கோட்பாடுகளை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதிலும் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக சோசலிச கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியும் முதன்மைச் செயலாளருமான ஜெனரல் ரால் காஸ்ட்ரோவிற்கு, லெனின் விருது வழங்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கவுரவித்துள்ளது. மே தினத்தை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். சோசலிச நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பேரணிகள் நடைபெற்றன. இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள், மே தினப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எழுச்சிமிகு நிகழ்வுகளை நடத்தின. இத்தாலி, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளில் மே தினப் பேரணி நடத்திய தொழிலாளர்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிய சம்பவங்களும் நடந்தன.

வெனிசுலா உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் முழக்கமாக மே தினப் பேரணி நடைபெற்றது.வழக்கமாக லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கியூபாவின் மே தினப் பேரணியில் இந்த ஆண்டும் பல லட்சம் மக்கள் பங்கேற்றனர். ஹவானா நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு மே தினப் பேரணி, வெனிசுலா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவியுள்ள ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிரான பேரணியாக நடைபெற்றது.ரால் காஸ்ட்ரோவுக்கு விருதுஹவானாவின் ஜோஸ் மார்ட்டி சதுக்கத்தில் நடைபெற்ற இப்பேரணியில் கியூப முன்னாள் ஜனாதிபதியும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளருமான ரால் காஸ்ட்ரோ, ஜனாதிபதி தியாஸ் கேனல் மற்றும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்ற ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை துணைத் தலைவரும் ரஷ்ய நாடாளுமன்ற துணைத் தலைவருமான இவான் மெலின்கவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக உயரிய லெனின் விருதினை ரால் காஸ்ட்ரோவுக்கு வழங்கி, ரஷ்ய மக்களின் அன்பையும் கவுரவத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், கியூபாவில் சோசலிசத்தை கட்டமைப்பதில் அளப்பரிய பங்கினை ஆற்றியவர்; சர்வதேச அளவில் கம்யூனிச எதிர்ப்புச் சிந்தனை மற்றும் காலனி ஆதிக்கம் ஆகியவற்றை உறுதியோடு எதிர்த்து பிரமிக்கத்தக்க பணிகளை ஆற்றிய சர்வதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் தோழர் ரால் காஸ்ட்ரோ என புகழாரம் சூட்டினார். கியூபா, ரஷ்யா இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் உறுதிமிக்க பங்கினை ஆற்றியவர் ரால் காஸ்ட்ரோ எனக் குறிப்பிட்ட இவான் மெலின்கவ், “சோவியத் ஒன்றியத்தின் மகத்தான அனைத்து விதமான உதவிகள் இன்றி கியூப மக்கள் தங்களுக்கு எதிராக ஏவப்பட்ட கடினமான சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு பிரமிக்கத்தக்க சாதனைகளை செய்திருக்க முடியாது” என்று ஒருமுறை பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஈர்த்தவர்கள் கியூபாவின் மகத்தான புரட்சியாளர்கள் என்று பெருமிதத்துடன் முழங்கினார்.லெனின் விருது 1925ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் மிக உயரிய விருதாக பிரகடனம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாமேதை லெனின் ஏப்ரல் 22 அன்று இவ்விருதுக்கு உரிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படுவது வழக்கம்.

;