tamilnadu

img

தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் 99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 0 மதிப்பெண் -21 மாணவர்கள் தற்கொலை

தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் 99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கி ஆசிரியர் இடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்வில் தோல்வியடைந்த 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் தெலங்கானா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் அரசு பொதுத் தேர்வு விண்ணப்ப பதிவு மற்றும் முடிவு வெளியிடும் பணிகள் க்ளோபியர்னா டெக்னாலஜி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 18-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ -மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர் ஆனால், அவர்களில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியில் 21 மாணவர்கள் தற்கொலை செய்த கொண்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். மாணவர்களின் தொடர் தற்கொலையை அடுத்து மாநிலம் முழுவதும் பெற்றோர்களும் பிற மாணவர்களும் போராட்டம் நடத்தினர். பின்னர் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இலவசமாக மறு மதிப்பீடு செய்துகொள்ளலாம் என்றும் அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டது. அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. 

அரசு நியமித்த மூன்று பேர் கொண்ட குழு நேற்று அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில், மாணவர்களின் வினாத்தாள் மதிப்பீட்டின்போது அதிக கவனக்குறைவு, தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஆசிரியர்களின் பிழைகள் போன்றவையே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நியமித்துள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், தவறு செய்த ஆசிரியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா கல்வித் துறை செயலர் ஜனார்தன் ரெட்டி தெரிவித்துள்ளார். தேர்வு எழுதிய சில மாணவர்கள் அன்றைய தினம் விடுப்பு எனத் தவறாக பதிவிடப்பட்டுள்ளது. கஜ்ஜா நவ்யா மாணவி 11-ம் வகுப்பு படிக்கும்போது தெலுங்குப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், தற்போது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் அவருக்கு `0’ மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நவ்யாவின் தெலுங்கு தாள் மறு மதிப்பீட்டில் அவர் 99 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரின் தாளை மதிப்பீடு செய்த தனியார் ஆசிரியைக்கு ரூ.5000 அபராதம் மற்றும் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் ஆசிரியையை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோன்று பழங்குடி மாணவர்கள் பயிலும் பள்ளியைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


;