tamilnadu

img

நிதியமைச்சரின் வாதங்களும் உண்மை நிலையும் - சி.பி.கிருஷ்ணன்

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஜூலை மாதம் 14ம் தேதி அன்று வெளியாகி யுள்ள, “பிரதமர் மோடியின் ஆட்சியில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள்”  என்ற தமது கட்டுரையில், தங்களது சாதனைகள் பற்றி மிகவும் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.  அதைச் சொல்லுமுன்,  நான்கு பத்தாண்டு களுக்கும் மேலாக இருந்த கட்டுப்பாட்டுப் பொருளாதார முன்மாதிரியைத் தகர்த்து தாராளமயத்தைக் கொண்டு வந்ததற்காக  முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்க ளைப் பாராட்டவும் செய்கிறார். அதற்குப்பின், வாஜ்பாய் தலைமையிலிருந்த, இப்போது நரேந்திர மோடி தலைமை யில் உள்ள பாஜக ஆட்சிகள் எடுத்த பல கொள்கை முடிவு கள் மீது புகழாரம் சூட்டுகிறார். உண்மை என்னவெனில், இந்தக் கொள்கை முடிவுகள் தாம் தேசப் பொருளாதா ரத்தை முற்றிலும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையாக கொண்டு போனதோடு, சாதாரண மக்கள் நலனுக்கு எதிராகவும் அமைந்தன. பாஜக தலைமையிலான ஆட்சிக ளின் சாதனைகளை இந்தக் கட்டுரையில் நிதி அமைச்சர் பட்டியலிடுகிறார். ஆனால், உள்ளபடியே, அவர் சாதனைக ளாக சொல்பவைதாம் தேச பொருளாதாரத்தைச் சீரழித்து, சாமானிய மக்களை மேலும் ஏழ்மையை நோக்கித் தள்ளி யவை. அவரது கட்டுரை முன் வைக்கும் வாதங்களையும், அவற்றின் உண்மை நிலையையும் இங்கே பார்ப்போம்:

வாதம் 1:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு தான் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை (FRBM) கொண்டு வந்தது.

உண்மை நிலை:

உண்மைதான். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு முற்றிலும் எதிரானது இந்த நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம். இச்சட்டத்தின்படி நிதிப் பற்றாக்குறையை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவில் தக்கவைப்பதற்காக பாமர மக்களுக்கு செல்ல வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை வெட்டிச் சுருக்குவது மற்றும் பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை விற்பது போன்ற மக்கள் விரோத செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மேலும் இந்த சட்டம் தான், இந்தப் பெருந்தொற்று சவாலை சமாளிக்க மாநில அரசாங்கங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைக் கடனாகப் பெறுவதற்குப் பெரும் தடையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாதம் 2:

2014ஆம் ஆண்டு பதவியேற்ற நரேந்திர மோடி, ஓராண்டு காலத்திற்குள் பொதுத்துறை வங்கிகளின் இரண்டு நாள் ‘ஞான சங்கம்’ சிறப்பு நிகழ்வை நடத்தினார்.

உண்மை நிலை:

2015 ஆம் ஆண்டு ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் புனேயில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஞான சங்கம் என்ற கூட்டம் நடத்தப்பட்டது உண்மைதான், ஆனால் எதற்காக? பொதுத்துறை வங்கிக ளைத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு  அடித்த ளம் அமைத்துக் கொடுக்கும் வேலையை செய்யத்தான் இந்த நிகழ்வு உதவியது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். பாஜக  அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், மெக்கன்சி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உதவியோடுதான் மத்திய நிதியமைச்சகம் எல்லா அறிக்கைகளும் தயாரித்தது.

இதில் பங்கேற்றவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப் பட்டு  ஒவ்வொரு குழுவையும் முறையே நபார்டு வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, ஆந்திரா வங்கி, பாரத  ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் தலைவர்கள் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தின் மையக்கரு என்பதே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயப்படுத்தும் உத்திகளை வகுப்பதே ஆகும். மேலும் இந்த கூட்டத்திற்கு ஆக்ஸிஸ் வங்கியின் முன்னாள் தலைவரும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தும் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தவருமான பி.ஜே நாயக்கும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம் “பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிக ளுக்கும் இடையே சமதள ஆடுகளம் இல்லை” என்பது பற்றியது. அவர்கள் சுட்டிக்காட்டிய வேறுபாடுகள்:

1  பொதுத்துறை வங்கிகளுக்கு முன்னுரிமை  துறைக ளுக்கான கடன்களை கொடுக்க வேண்டிய பொறுப்பு கள் இருக்கும்நிலையில், தனியார் வங்கிகளுக்கோ இத்தகைய பொறுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டு  வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து முன்னுரிமை துறைகளுக்கான கடன் பத்திரங்களை மட்டும் வாங்கி னால் போதுமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

2  பொதுத்துறை வங்கிகள் கடந்த 3 மாதங்களில் 10 கோடி ஜன்தன் கணக்குகளை திறந்து உள்ள நிலை யில் தனியார் வங்கிகள் வெறும் 30 லட்சம் கணக்குகளை மட்டுமே திறந்துள்ளன.

3  பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் 33 சதவீதம் கிராமப்புற கிளைகளாக இருக்கும் நிலையில் தனியார் வங்கிகளில் 15 சதவீதம் மட்டுமே கிராமப்புற கிளைகளாக உள்ளன.

4  பொதுத்துறை வங்கிகள் நாட்டின் நலன் கருதி உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடு செய்யும் நிலையில் தனியார் வங்கிகள் இத்தகைய துறைகளில் முதலீடு செய்வதில்லை.

மேற்கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மையே. ஆனால் இதற்கு என்ன தீர்வு? தனியார் வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளைப் போன்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும்படியான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்குமானால் அது நாட்டு நலன் சார்ந்த நடவடிக்கையாக இருந்தி ருக்கும். இதற்கு நேர்மாறாக பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தி அதன் மூலம் ஒரு சமதள ஆடு களத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தது இந்த ஞான சங்கம். இது இந்த நாட்டு மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாத, மத்திய அரசின் கார்ப்பரேட் சார்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு முந்தைய பாஜக அரசால் நடத்தப்பட்ட இந்த ஞானசங்கம் தான் வங்கித்துறை இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது.

வாதம் 3:

2017ம் ஆண்டு சில வங்கிகள் இணைக்கப்பட்டன. பிறகு, 2019 ஆகஸ்ட் மாதம் மிகப் பெரிய பாய்ச்சல் முடிவு எடுக்கப்பட்டது.   21 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை, வங்கி இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு 12 ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. மேலும் இந்திய தபால் துறையில் பேமன்ட் வங்கி என்பதும் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலை:

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு பிறகு நூற்றுக்கணக்கான வங்கிக் கிளைகள் மூடப்பட்டு அந்தப் பகுதிகளில் உள்ள சாமானிய மக்களுக்கு கிடைத்து வந்த வங்கிச் சேவை முற்றிலும் தடுக்கப்பட்டது. மேலும் சேவை கட்டண உயர்வு, கார்ப்பரேட் நலன் சார்ந்த கடன் கொள்கைகள், வராக்கடன் உயர்வு போன்றவற்றிற்கும் வழிவகுத்தது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2,500 கிளைகள் மற்றும் அலுவலகங்களையும் பேங்க் ஆப் பரோடா 1000 கிளைகள் மற்றும் அலுவலகங்களை யும் வங்கி இணைப்பிற்குப் பிறகு மூடியுள்ளன.

வாதம் 4:

2014 இல் கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 39 கோடி ஏழை எளிய மக்களுக்கான வங்கிக் கணக்குகள் திறக்கப் பட்டுள்ளன.

உண்மை நிலை:

ஜூலை 1, 2020 வரை 39.71 கோடி ஜன்தன் கணக்கு கள் திறக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. ஆனால் இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இந்த 39.71 கோடி கணக்குகளில் 31.51 கோடி கணக்குகள் பொதுத்துறை வங்கிகளாலும் 6.94 கோடி கணக்குகள்  கிராம வங்கிகள் மூலமும் திறக்கப்பட்டுள்ளன என்பதே. இவற்றில் வெறும் 1.26 கோடி கணக்குகள்(3.17%) மட்டுமே தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏழை, எளிய சாமானிய மக்களின் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் முழுக்க முழுக்க பொதுத்துறை வங்கிகளால் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வரும் சூழலில் இதே நிதியமைச்சர் மே மாதம் தனது பேட்டியில் வங்கித் துறை உள்ளிட்ட நாட்டின் பொதுத்துறை நிறு வனங்கள் விரைவில் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கிறார். வங்கித்துறை கேந்திரமான துறை என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் வங்கித்துறையில் அதிகபட்ச மாக 4 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்க அனுமதிக் கப்படும்.  ஏழை மக்களுக்காக 80% ஜன் தன் கணக்குகளை திறந்த பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்த அரசு முயல்கிறது. அப்படியானால் மத்தியில் ஆளும் இந்த பாஜக அரசாங்கம் யாருடைய நலன் காக்க ஆட்சி நடத்துகிறது என்ற கேள்வி எழுகிறது.

வாதம் 5:

2016 ல் கொண்டுவரப்பட்ட ஐபிசி என்ற திவால் சட்டம் மற்றும்  என்சிஎல்டி என்ற தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தொழிலை விட்டு வெளியேற எண்ணும் பல நிறுவனங்க ளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவற்றிற்கு தீர்வுகள் கிடைக்கத் தொடங்கி உள்ளன.

உண்மை நிலை:

கடந்த மே மாதம் நிதியமைச்சர் வெளியிட்ட தகவ லின்படி, “கடந்த 2016 ம் வருடம் ஐபிசி சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து மொத்தம் தீர்க்கப்பட்ட 221 வழக்குக ளில் வரவேண்டிய மொத்தத் தொகையான 4.13 லட்சம் கோடி ரூபாயில் 1.84 லட்சம் கோடி  ரூபாய் (44%) வசூலிக்கப் பட்டுள்ளது” என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 2.29 லட்சம் கோடி ரூபாய் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகி றது. மேலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி  2020 பிப்ரவரி 29 வரை ஐபிசியிடம் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகளில் ஏறக்குறைய 5.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 13,566 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னரே திரும்பப் பெறப்பட்டுள் ளன என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அரசின் இந்த அறிக்கையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டன என்பது பற்றியோ, இதில் ரிசர்வ் வங்கி மற்றும் கடன் கொடுத்த வங்கிகளின் நிலைபாடு என்ன என்பது பற்றியோ, ரூபாய் ஐந்து லட்சம் கோடிக்கு அதிக மான இந்தப் பெரும் தொகையை மீட்பதற்குத் தேவையான மாற்று வழிகள் என்ன என்பது பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை என்பது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. இதுவே ஐபிசி சட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றிய யதார்த்த நிலையாக உள்ளது.

வாதம் 6:

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரிவிதிப்பு முறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. புதிய உற்பத்தி நிறுவனங்க ளுக்கான வரியை 15 சதவீதமாகவும், பழைய நிறுவனங்க ளுக்கு 22 சதவீதமாகவும் குறைத்துள்ளது.

உண்மை நிலை:

இந்த முடிவினால் அரசு தனக்கு வரவேண்டிய சுமார் 1,45,000 கோடி ரூபாய் வரி வருவாயை இழந்துள்ளது. ஏற்கனவே நாட்டின் நிதிப் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி  ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தும், நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பல்வேறு கமிட்டிகளின் ஆலோ சனைகளின்படி போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும், கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்தில் விழுந்த பிறகும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி சாமானிய மக்களின் மீது சுமைகளை ஏற்றியும் வரும் மத்திய அரசு, தனக்கு வரி வருவாயாக வர வேண்டிய ஒரு பெரும் தொகையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து விட்டு அதைத் தன் சாதனையாகவும் சொல்லிக் கொள்கிறது.

வாதம் 7:

விவசாயத்தை வலுப்படுத்த நாங்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம்.

உண்மை நிலை:

அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தம் மற்றும் அவசர சட்டங்கள்  வாயிலாக மாநிலங்களுக்கு இடையி லான விவசாய உற்பத்திப் பொருள்களின் வர்த்தகத்தில் உள்ள தடைகள் நீக்கப்படுவதன் மூலம் நாட்டின் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்பட்டு மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதே எதார்த்தமான  உண்மை. 

விவசாய-பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய  சீர்திருத்தங்கள் ஏற்க னவே நலிவடைந்து இருக்கும் விவசாயிகளை மேலும் துயரத்தில் தள்ளும் செயலாகவே அமையும். இதுவரை அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மட்டுமே நாட்டின் அத்தியா வசிய பொருட்களின் பதுக்கலை தடுத்து அதன் ”எதிர்கால வர்த்தகத்தை” தடுக்கும் ஒரே சட்டமாக இருந்து வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் பெரு வணிகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் எவ்வித உச்ச வரம்புமின்றி உணவு தானி யங்களை வாங்குவதற்கும், அதை பதுக்கி வைப்ப தற்கும், அதன் மூலம் நவீன தாராளமய சந்தையில் அதிகப் படியான விலையில் விற்பதற்கும் வழி வகுக்கும்.  இது விவசாயத்தை பதுக்கல், கள்ள சந்தை போன்றவற்றின் மூலம் தனியார்கள் எல்லையற்ற லாபம் குவிக்க திறந்து விடுவதில் போய் முடியும். இந்த முடிவு உணவுப்பொருட்க ளின் பாதுகாப்பை அச்சுறுத்தி அதன்மூலம் நுகர்வோர்மீது கடுமையான விலை உயர்வைத் திணிக்கும்.

நமது நாட்டின் உழைக்கும் வர்க்கம் நிதி அமைச்சரின் இத்தகைய பரப்புரையின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு, அரசின்  கார்ப்பரேட் சார்பு கொள்கை களை எதிர்த்து முழு ஒற்றுமையுடன் போராட முன்வர வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் வெளியான கட்டுரையின்  

தமிழாக்கம்: க.சிவசங்கர், நெல்லை














 

;