tamilnadu

img

அக்.18க்குள் அனைத்து தரப்பினரும் இறுதி வாதங்களை நிறைவுசெய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவார சக்திகள்  இடித்து தகர்த்தன. இப்பகுதியில் உள்ளநிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு புதனன்று மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அனைத்துத் தரப்பினரும் தங்களது இறுதிவாதங்களை அக்டோபர்  18ஆம் தேதிக்குள்நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.  விசாரணையை விரைந்து முடிப்பதற்கு தேவைப்பட்டால், நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

சமரச பேச்சுவார்த்தைக்கு அனுமதி
மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண சன்னி வக்பு வாரியம் மற்றும்நிர்வானி அக்ஹாரா ஆகிய அமைப்புகள் முன்வந்துள்ளதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற  நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட மத்தியஸ்தர்கள் குழு சார்பில் புதனன்று உச்சநீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதிரஞ்சன் கோகோய், ‘இந்த வழக்கை தினமும் விசாரித்துவரும் உச்சநீதிமன்றத்தின்  நடவடிக்கை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும்,இருதரப்பினரும் விரும்பினால் மற்றொருபுறம்  சமரச பேச்சுவார்த்தையும் நடத்தலாம். ஆனால், தற்போது தினந்தோறும் நடைபெறும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், அந்த பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் அனைத்து ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி அனுமதி அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால் அயோத்தி வழக்கில் விசாரணையை  முடித்து தீர்ப்பளிக்க விரும்புவதாக தெரிகிறது.