தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க போல்ஷ்விக் புரட்சியினால் தான் பெண்ணின் அடிமைச் சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டன. 1917 நவம்பரில் ஆட்சிப்பொறுப்பேற்ற லெனின் அரசு தான் உலகில் முதல் முறையாகஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை சட்டமாக்கியது. 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான அளவில் வாக்குரிமை உறுதி செய்த உலகின் முதல் நாடு சோவியத் ஒன்றியம். தந்தை வழிகுடும்ப விதி முறைகளை நீக்கியது. விவாகரத்து, ஜீவனாம்சம், திருமணங்களில் கட்டாய பதிவு முறை, திருமண வழி சொத்தில் சம உரிமை ஆகியவற்றை உறுதி செய்தது. சட்ட விரோதமாக பிறந்த குழந்தை எனும் கருத்தோட்டத்தை நீக்கியது. திருமணத்தின் மூலமாகவோ அதற்கு அப்பாலோ பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோரின் உதவியைப் பெறும் உரிமை ஆகிய அனைத்தும் உறுதி செய்யப்பட்டன. 1922ல் திருத்தப்பட்ட சோவியத் நிலச் சட்டம் பாலினரீதியான சமத்துவத்தை அனைத்து துறைகளிலும் மேற்கொண்டது. தொழில் வளர்ந்ததால், வேலைகளில் சமமான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டதோடு, சமூக உற்பத்தியில் சமமான பங்குதாரர்களாக அவர்கள் மாற ஊக்கமளிக்கப்பட்டது. வேலையிடத்திலும் , குடும்பத்திலும் என இரண்டு இடங்களிலும் இரட்டை சுமையுடன் உழைப்பு சுரண்டப்படுவதை ஒழிக்கும் வகையில் குழந்தை நல வசதிகள்,சலவையகங்கள், பொது உணவுக் கூடங்கள் நிறுவப்பட்டன. பாலின ரீதியான துன்புறுத்தல், வன்புணர்ச்சி போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.
சோவியத் பெண் போராளிகள்
இதனால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் மகத்தானவையாக இருந்ததால், பெண்கள் முன்னேற்றம் உச்சத்தில் இருந்தது. விவசாயத்தில் பெருமளவில் உற்பத்தி செய்வோராக பெண்கள் பரிணமித்தனர். பாசிசத்திற்கு எதிரான இரண்டாவது உலகப் போரில் சோவியத் பெண் போராளிகளின் பங்கு உலகம் கண்டிராதது. மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைத்து துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. சோசலிச சமூகங்களில் பெண்கள் அடைந்த நன்மைகள் முதலாளித்துவ சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண்கள் இயக்கங்கள்சோஷலிச உதாரணங்களால் உந்தப்பட்டு சம உரிமைக்கானகோஷங்களை முன் வைத்தன. சோவியத் அரசு உதயமானமுதல் சில மாதங்களிலேயே பெண்களுக்காக நலத் திட்டம் செய்திருப்பதில் பாதியளவு கூட வேறு எந்த அரசும், வேறுஎந்த சட்டமும், எந்த காலத்திலும் செய்யவில்லை எனலாம்.வேலை செய்யும் உரிமை, உயர் கல்வி உள்ளிட்டு கல்விக்கான சமமான வாய்ப்புகள் , குடும்பம் மற்றும் குழந்தை நலம் போன்றவற்றுக்கான சமூக சேவைகளுக்கான விரிவான கட்டமைப்பு ஆகியவற்றில் பெண்களின் உரிமைகளை முதலாளித்துவ நாடுகளோடு இன்றும் ஒப்பிடுகையில், சீனாவிலும் கியூபாவிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்ததாகவே உள்ளது. பல ஆண்டுகளாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார தடைகளின் விளைவாக உருவான மிககடுமையான பொருளாதார சுழலில் கூட கியூபாவில் பெண்களின் அந்தஸ்து என்பது அமெரிக்க நாட்டு பெண்களின் நிலையை விட மிகவும் முன்னேறியதாக உள்ளது.
இந்தியாவில் என்ன நிலை?
நமது நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட வறுமையும், வேலையின்மையும் தொலைந்தபாடில்லை. தேசிய குற்ற ஆவணப் பதிவு - 2019 அறிக்கை, பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் சராசரியாக 1 நாளைக்கு 10 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் 1 பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள். இதில் மூன்றில் ஒரு பங்கு சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுகிறது.
பெண்ணடிமைத்தனம்
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. மோடியின் கடந்த ஆறுஆண்டு கால மதவாத ஆட்சியில் பெண்களின் அந்தஸ்து வெகுவாக சரிந்துள்ளது. குறிப்பாக தலித், சிறுபான்மை பெண்களின் நிலை சொல்லத் தரமன்று. உலகமய பொருளாதாரத்தின் படு பாதகமான விளைவுகள், உழைப்பாளிகளாக உள்ள பெண்களைப் பெரிதும் பாதிக்கின்றன. நிரந்தரவேலையின்மை, மோசமான வேலைச்சூழல், குறைவான கூலி, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விவசாய பாதிப்பு,குடிபெயர்தல் போன்ற காரணங்களால் பெண்கள் வறுமையின் கொடுமையை சுமக்க வேண்டியுள்ளது. பெண்களின்முன்னேற்றத்திற்கு பொருளாதார சுதந்திரம் ஒரு முக்கியமுன் நிபந்தனை எனும்போது, இது போன்ற காரணங்கள் தடைக்கல்லாக மாறியுள்ளது. பெண்கள் நலனில்அக்கறையின்மை காரணமாக நலவாழ்வு நடவடிக்கைகளில்ஆளும் அரசுகள் பின் வாங்கியிருப்பதும் பெண்களைக் கடுமையாக தாக்கியுள்ளது. சாதியம், வகுப்புவாதம், அடிப்படைவாதம் போன்றவை பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. மரபு மற்றும் மதம் என்கிற பெயரில் நிலவும் பிற்போக்கான சடங்குகள் மற்றும்மதிப்பீடுகள் பெண்களை இழிவுபடுத்துவதாகவே உள்ளது.பெண்களுக்கு சுயேச்சையான அந்தஸ்து கிடையாது என்கிறதுமனுசாஸ்திரம். சாதியத்தால் பாரபட்சமான சமூகபடிநிலை உருவாக்கப்பட்டாலும், எந்தப்படி நிலையில் உள்ள சாதியாக இருந்தாலும் அதில் பெண் தான் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறாள். சாதியம் பெண்ணை ஒடுக்குவது போலவே,ஆளும் வர்க்கத்திற்கு மலிவான உழைப்பை கொடுத்திடதலித் மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது. பழமைவாத சாதிய மதிப்பீடுகளில் பலவற்றை நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ கலாச்சாரம் இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எனவே இந்தியாவில் பெண் விடுதலை என்பது சாதியத்தின் தத்துவார்த்த அடித்தளமாகவுள்ள நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ அமைப்பைத் தகர்ப்பதில்தான் உள்ளது. பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாக என மூன்றுமட்டங்களில் பெண் சுரண்டப்படுகிறாள். அதாவது பெண்கள்மீதான ஒடுக்குமுறைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. பாலின அடிப்படையில் பாலின வன்முறை மற்றும் சுரண்டல்,வரதட்சணை, குடும்பத்துக்குள் சமத்துவமின்மை, குடும்ப வன்முறையில் இந்த பாகுபாடு தெரிகிறது. பெண் என்பதாலேயேவர்க்கச் சுரண்டலுக்கு அதிகம் இலக்காகிறாள். சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற தீர்மானிக்கும் அமைப்புகளில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி குடிமக்கள் என்கிற உரிமையையும் பாதிக்கிறது. ஆண்களுடன் சமமான நிபந்தனைகள், வாய்ப்புகள் கிடைக்கும் அடிப்படையில் சமூக ரீதியாக உற்பத்தி பணிகளில் பெண்களைக் கொண்டு வருவது அவர்கள் பொருளாதாரசுதந்திரம் பெற்றவர்களாகவும், தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் அவர்களை மாற்றும். மேலும்மீண்டும் மீண்டும் செய்து வரும் வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சமமாக கையாளக் கூடிய விதத்தில் தொழில் நுட்பங்கள் எளிதாகக் கிடைக்க ஏற்பாடு செய்வதால்பெண் சுதந்திரத்தை உணர்வாள்.
ஆனால், எங்கே முதலாளித்துவம் இருக்கிறதோ, எங்கே நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் தனியுடைமை இருக்கிறதோ அங்கே மூலதனத்தின்ஆதிக்கம் பாதுகாக்கப்படுவதுடன், அங்கே ஆண்களுக்கு தனி உரிமைகள் இருக்கும். சமூகம் அனைத்திற்குமே பொதுவானதாக உற்பத்திக் கருவிகள் மாற்றப்பட்டுள்ள ஒரு சோஷலிஸ சமூகத்தில் தான் ஆண்களுக்கு சமமான வகையில் சமூக ரீதியான உற்பத்திக்கான உழைப்புக் களத்திற்குள் பெரும்எண்ணிக்கையிலான பெண்கள் வருவார்கள். அப்படித்தான்பெண்களின் விடுதலையை உத்தரவாதம் செய்திட முடியும். இதற்கான பாதையை உலகுக்கு காட்டியது சோவியத் புரட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகும்.பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிய முடியவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, நவம்பர் புரட்சி இப்போதும் நமக்கு உணர்த்துவது சோசலிசமே பெண்களின் முழுமையான விடுதலையையும் உறுதிசெய்யும் என்பதைத்தான்.
===டாக்டர் வி.பிரமிளா===
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)