tamilnadu

img

இந்திய குடியரசைக் காக்க உறுதியேற்போம்! - ஜி. ராமகிருஷ்ணன்

“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்”  - 1893 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் அதிரடியான வரிகள் இவை. விவேகானந்தரை தங்களது குருவாக ஏற்றுக்கொண்ட மோடி-அமித்ஷா அரசு மேற்கண்ட கூற்றுக்கு நேர் விரோதமாக செயல்பட்டு வருகிறது. 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு அளவுகோலாக வைக்கப்படவில்லை. ஆனால், கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர் அல்லாத ஆறு மதத்தை சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது. இச்சட்டம் இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற அடித்தளத்தையே தகர்க்கிறது. 

எதற்காக இந்த  குடியுரிமை திருத்தச்சட்டம்?

1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம்,  11 ஆண்டுகளுக்கு மேலாக  இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு கீழ்க்கண்ட அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக்கூறுகிறது. 

1. பிறப்பால் இந்தியக்குடியுரிமை
2. பெற்றோர் வழியாக (வம்சாவளியினர்)
3. உரிய ஆவணங்கள் பதிவு செய்வதன் மூலம்
4. இயல்பாகவே (11 ஆண்டுகள் வசித்தவர்களுக்கு)
5. இந்தியாவின் எல்லைக்குள் ஒரு பகுதியை இணைப்பதன் மூலம்

- மேற்கண்டவற்றில் குடியுரிமை பெற மதம் ஒரு வழிமுறையாக சொல்லப்படவில்லை. இப்படியொரு சட்டம் 1955லிருந்து நடைமுறையில் உள்ள போது கடந்த டிசம்பரில் திருத்தப்பட்ட சட்டம் தேவையில்லாதது. பிறகு ஏன் கொண்டு வந்தார்கள்?. மோடி -அமித்ஷா அரசு தங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமலாக்கிடத்தான் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்கள்.  பாஜகவின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 2003ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் “1955 குடியுரிமைச் சட்டத்தை” திருத்தி அதில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்ற பிரிவைச் சேர்த்தார்கள். அந்த திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) விதியை உருவாக்கினார்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடு  (என்பிஆர்) என்பது முதல்படி. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அடுத்த நடவடிக்கை. இப்படித்தான் அசாமில் செய்தார்கள். 

சமீபத்தில் அசாமில் அமலாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கிடுவோம் என அறிவித்த மத்திய பாஜக அரசு, தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்)  அடிப்படையில் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளது. இப்பதிவேட்டிற்காக வீடு வீடாக அரசு அலுவலர்கள் தகவல்கள் சேகரிப்பார்கள். இதில் 21 தகவல்களை அளிக்க வேண்டும். இதில் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் உள்ளிட்ட தகவல்களை ஆவண ஆதாரங்களோடு அளித்திட வேண்டும்.  தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேலைக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் சொந்த மாவட்டத்தைவிட்டு, மாநிலத்தை விட்டு வேறுபகுதிகளுக்குச் சென்று வருடக்கணக்கில் அங்கு வசிப்பவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் பிறந்த தேதி, பிறந்த ஊரைச் சொல்ல முடியாது. அப்படி சொல்ல இயலாதவர்களை  ‘சந்தேகத்திற்குரிய குடிமக்களாக’ (doubt ful) பதிவு செய்வார்கள். 

சந்தேகத்திற்குரிய குடிமக்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அசாமில் அமலாக்கப்பட்டதுபோல்  அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள். இதனால்தான் மேற்கண்ட மூன்று சட்டங்கள் (சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி) இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏழை, எளிய தலித் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு எதிரானது என்று கூறுகிறோம்.  சமீபத்தில் அசாமில் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட  பீகார் மாநிலத்தைச் சார்ந்த குப்தா என்பவர் இறந்துவிட்டார். அவர் பீகார் மாநிலத்தை சார்ந்த ஒரு இந்து. பிழைப்பிற்காக அசாமுக்கு வந்தவர். தன்னுடைய பெற்றோர்களைப்பற்றிய தகவல்களைக் கொடுக்க இயலாததால் சந்தேகத்திற்குரிய குடிமகனாக அறிவிக்கப்பட்டு, முகாமில் அடைக்கப்பட்டு இறந்துவிட்டார். இத்தகைய கொடுமை ஏழை எளிய மக்களுக்கு எதிராக நிகழ உள்ளது. இதனால்தான் மேற்கண்ட சட்டங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும்,  மதச்சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது எனக் கூறுகிறோம்.   இவ்வாண்டில்  தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுக்க வந்தால் மக்கள் அதற்கு பதில் சொல்லக்கூடாது என்று 24.1.2020ல் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறைகூவல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கேரள அரசின் அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வரான பினராயி விஜயன், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமான இந்த சட்டத்தை கேரளத்தில் அமலாக்க மாட்டோம் என அறிவித்தார். பிறகு, சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பும் நடக்காது என அறிவிக்கப்பட்டது. கேரளத்தைத் தொடர்ந்து  பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநில முதலமைச்சர்கள் தேசிய குடியுரிமை சட்டத்தை (என்.ஆர்.சி) அமலாக்கிட மாட்டோம் என அறிவித்தார்கள். 

கனன்று எரியும் போராட்டம்

தேசம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.ஆகியவற்றையும் எதிர்த்து போராட்டங்கள் வெடித்து தீவிரமாக நடந்து வருகின்றன. ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதுவரையில் இத்தகைய போராட்டத்தில் கலந்து கொள்ளாத புதுதில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எழுச்சியான போராட்டத்தில் இறங்கினார்கள். இத்தகைய போராட்டத்தை ஒடுக்கிட பாஜக மாநில அரசுகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. உத்தரப்பிரதேசத்தில் 21 பேரும், அசாமில் 5 பேரும், கர்நாடகாவில் 2 பேரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை மோடியும், அமித்ஷாவும் தேச விரோதிகள் என்றும், நகர்ப்புற நக்சலைட்டுகள் என்றும் கொக்கரித்தார்கள். போராடுபவர்களின் உடையைப் பார்த்தால் அவர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால், போராட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அன்றாடம் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.  இத்தகையப் போராட்ட அலையைக் கண்டு அஞ்சிய பிரதமர் மோடி,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கப் போவதாக நாங்கள் சொல்லவே இல்லை; தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என்று தில்லியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பொய்யுரைத்தார். மறுபுறத்தில், எத்தகைய போராட்டம் நடந்தாலும் மக்கள் விரோதச் சட்டங்களை அமலாக்கியே தீருவோம் என்று அமித் ஷா கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார். 

பொருளாதார நெருக்கடிக்கு  தீர்வு காணாமல்...

இரண்டாவது முறையாக பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள இன்றைய சூழலில் நாடு கடந்த காலங்களில் இல்லாத  அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாங்கும் சக்தி குறைந்து பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இவைகளைப்பற்றியெல்லாம் மோடி-ஷா அரசுக்கு கவலையில்லை. அவர்களுக்கு  மதரீதியில் மக்களை பிளவுபடுத்தக்கூடிய இந்து ராஷ்டிராவை நடைமுறைப்படுத்துவதுதான் ஒரே நோக்கம். 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அவசர, அவசரமாக காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி தங்களுடைய திட்டப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முயற்சித்து வருகிறது. இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தங்களுடைய பாசிச தன்மைக் கொண்ட திட்டத்தை அமலாக்கிட பகீரத முயற்சி எடுத்து வருகிறது.

இம்மாதத்தில் முக்கிய மூன்று தினங்களை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஜனவரி 23 இந்திய சுதந்திரத்திற்காக ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டு போராடிய சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள். ஜனவரி 26 அரசியல் சட்டம் அமலுக்கு வந்த குடியரசு நாள். ஜனவரி 30 மத நல்லிணக்கத்திற்காக, மதச்சார்பின்மைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக குரலெழுப்பிய அண்ணல் காந்திஜி ஆர்.எஸ்.எஸ். கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்த மூன்று தினங்கள் சாதாரண மூன்று நாட்கள் அல்ல. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், அண்ணல் காந்திஜி அவர்களும் மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கும் தேச சுதந்திரத்திற்காக கண்ணீரும், செந்நீரும் சிந்திய பொதுவுடமை இயக்கம் உள்ளிட்ட தியாகச் செம்மல்களும் கனவு கண்டது மதச்சார்பற்ற ஜனநாயக, சுயசார்பு பொருளாதாரக் கொள்கையுடைய இந்தியா. இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழு தலைவர் அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கினார். இந்த சட்டத்தை காவிக் கூட்டம் தகர்க்க முயற்சிக்கிறது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க இன்று நாம் உறுதியேற்போம்.

 

;