tamilnadu

img

சர்வதேச விமானங்களை இயக்க வர்த்தகர்கள் கோரிக்கை....

சென்னை:
கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளுக்கு 6 மாதங்களாக பயணிகள் விமான சேவைகள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் காய்கறி ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கி விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு பகுதியிலிருந்து தினமும் காய்கறிகள் சிங்கப்பூர், மலேசியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுவது வழக்கம். அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளும், அதோடு எப்போதுமே தமிழ் நாட்டில் கிடைக்கும் கத்தரி, முருங்கை, வெண்டை, பச்சை மிளகாய், இஞ்சி போன்ற காய் கறிகளும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன.

அதன்படி மாதம் 30 டன் காய் கறிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் சரக்கு விமானங்களில் அனுப்பப்படாமல், பயணிகள் விமானங்கள் மூலமே அனுப் பப்பட்டு வந்தன. இதனால் காய் கறி உற்பத்தியாளர்கள் மொத்த கொள்முதல் வியாபாரிகள், காய் கறி ஏற்றுமதியாளர்கள், அவர் களை சார்ந்துள்ள தொழில்துறையினர் என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்து வந்தன.ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள் ளன. இதனால் வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வது வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது.

சரக்கு விமானங்களில் பயணிகள் விமானத்தைவிட கட்டணம் அதிகம். அதோடு சரக்கு விமானத்தில் காய்கறிகளை அனுப்பினால் தாமதமாகிவிடும். எனவே மத்திய அரசு அதிக விரைவில் சென்னையிலிருந்து பயணிகள் விமான சேவைகளை குறைந்தபட்சம் சிங்கப்பூர், மலேசியா, கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்காவது இயக்க அனுமதியளிக்க வேண்டும். அதுவரையில் காய், கனிகளுக்கு சரக்கு விமானங்களில் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை விமானநிலைய அலுவலர் கூறுகையில், சரக்கு விமானக் கட்டணம் என்பது இந்தியா அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. அதை ஒரு விமானநிலையத்தில் ஒரிரு பொருட்களுக்கு மட்டும் குறைக்க முடியாது. அதே நேரத்தில் காய், கனி போன்ற அழுகும் பொருட்களை தாமதமில்லாமல் கொண்டு செல்ல தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.சர்வதேச பயணிகள் விமான சேவைகள் மீண்டும் தொடங்குவது பற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி மத்திய சுகாதாரத்துறை கவனமாக ஆய்வு செய்து, தாக்கம் குறைந்ததும் பயணிகள் விமான சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

;