tamilnadu

img

குடிநீர் இல்லா அரசுப் பள்ளிகள்

புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த அலஞ்சிரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிதண்ணீர் கிடைக்காமல் ஒரு கி.மீ. தூரம் வரை சத்துணவுப் பணியாளர்கள் அலைந்து தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. கழிவறைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் பூட்டப்படும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அலஞ்சிரங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது சுமார் 30 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டது முதலே தண்ணீர் வரவில்லை. அதற்கு மாற்றாக கிராமத்திற்குள் இருந்து குழாய் பதித்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டு குழாய்களும் பதிக்கப்பட்டது. ஆனால் அதிலும் தண்ணீர் வருவதில்லை. தண்ணீர் பிரச்சனையை பார்த்து அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வில்லை. இப்போது வரை குடிதண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கவும், மாணவர்களின் குடிதண்ணீருக்காகவும் சத்துணவு பணியாளர்கள் சுமார் ஒரு கி.மீ வரை பயணித்து விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் குடங் களில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வரு கின்றனர். வாரத்திற்கு ஒரு முறை மின்சாரம் மாற்றப்படுவ தால் காலை மாலை என மின்சாரம் இருக்கும் நேரங்களில் விவசாய ஆழ்குழாய் கிணறுகளை நோக்கி காலிக்குடங்களுடன் பயணிக்கும் நிலை உள்ளது, மேலும் கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் அருகில் உள்ள ஒரு விவசாயி அதற்கான தண்ணீரை கொடுக்கிறார். ஆனால் அதிலும் மின்சாரப் பிரச்சனை காரணமாக அனைத்து நாட்களிலும் தண்ணீர் வருவதில்லை. அதனால் கழிவறைகளையும் மூடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளி தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு தண்ணீர் வராமலேயே பணிகளை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டாலும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவே இல்லை. கடுமையான வெயிலில் சத்துணவுப் பணியாளர்கள் தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் ஒவ்வொரு விவசாய ஆழ்குழாய் கிணற்றுக்கும் சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் பள்ளிகள் திறக்கும் முன்பே தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்ததால் இந்த வருடமாவது குடிதண்ணீர் கிடைக்கும் என்று இருந்தோம். ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்கள் கடந்துவிட்டது இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. டேங்கர் மூலம் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதே போலத் தான் அருகில் உள்ள பெரியாலூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாண்டிக் குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் குடி தண்ணீர் இல்லாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாண்டிக்குடி மக்கள் ஜூலை 7ந்தேதி மறியல் போராட்டம்  அறிவித்துள்ளனர். அதே போல மற்ற கிராமங்களிலும் போராட்டம் நடத்த மக்கள் திட்டமிட்டுள்ளனர்.   (ந.நி)

;