tamilnadu

img

அதிபர் ட்ரம்ப் டிவீட் செய்த வீடியோவை முடக்கிய டிவிட்டர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜார்ஜ் ப்ளாய்ட்டின் அஞ்சலி வீடியோவை, ட்விட்டர் முடக்கியுள்ளது.

மே 25 ஆம் தேதி, ஜார்ஜ் ப்ளாய்ட் என்கிற கறுப்பினத்தவரை, காவல்துறையினர் நிறவெறியுடன் கழுத்தை நெரித்து பொதுமக்கள் முன்பு  கொடூரமாக கொலை செய்தனர்.  இதே போல், நீடித்து வரும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப், நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை ‘குண்டர்கள்’ என்று விமர்சித்து, மேலும் போராட்டத்தைக் காரணம் காட்டி பொதுமக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானால், துப்பாக்கிச் சூடு தொடங்கப்படும் என்றும், தேசிய பாதுகாப்புப் படையும் அனுப்பப்படும் என்றும் ட்விட்டரில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதிபரின் கருத்து வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, ட்விட்டர் அந்த பதிவை நீக்கியது.

இந்த நிலையில், ட்ரம்ப் இன்று ஜார்ஜ் ப்ளாய்ட்டின் அஞ்சலி வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த பிறகு அமெரிக்காவில் நடந்த போராட்டம் சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ட்ரம்ப் பின்னணியில் பேசுவது போல அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.  இந்த வீடியோவை ட்விட்டர் முடக்கியுள்ளது.

இதற்கு, ட்ரம்ப் வெளியிட்ட அந்த வீடியோவில் காப்பிரைட் கொள்கைகள் மீறப்படுவதாகவும், அதன் காரணமாகவே அந்த வீடியோவை முடக்கியதாகவும் டிவிட்டர் நிறுவனம் விளக்கம் கூறியுள்ளது.