tamilnadu

img

எங்களுக்கே கூடுதல் வரியா? இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்

புதுதில்லி:
அமெரிக்க இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதை, இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக விரைவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பதவிக்கு வந்தது முதலே சீனா, ஈரான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தகப் போரை நடத்தி வருகிறார். அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினரை வெளியேற்றுதல், அவர்களுக்கு விசா வழங்க மறுத்தல், வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தல் என்று ஏராளமான கெடுபிடிகளைச் செய்து வருகிறார். முதலில், சீனாவைக் குறிவைத்து இந்த வர்த்தகப்போரை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதி, தற்போது மற்ற நாடுகளையும் சீண்டி வருகிறார். அந்தவகையில்தான், அண்மையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார்.

ஆனால், டிரம்ப் எதிர்பாராத வகையில், இந்திய அரசும் 29 அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து பதிலடி கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்கப் பொருட்களின் மீது இந்தியா அதிகமான வரி விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; என்றும், அவற்றை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றும், தனது ட்விட்டர் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜி-20 மாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

;