tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 26

1777 அமெரிக்கப் புரட்சிப் போரின்போது, சிபில் லூடிங்ட்டன் என்ற 16 வயதுப் பெண், இரவு முழுவதும் குதிரையில் பயணித்து, எதிரிகளின் (இங்கிலாந்துப்படைகள் தான்) வருகையை அறிவித்து, குடிப்படைகளை எச்சரிக்கை செய்தார். இதனால், அமெரிக்க விடுதலைப்போரின் நாயகியாக இவர் கொண்டாடப்படுகிறார். அமெரிக்காவிலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றங்களுடனான போரில் ஏற்கெனவே பங்கேற்று அனுபவம்பெற்றிருந்த சிபிலின் தந்தை, அமெரிக்க விடுதலைப்போரில் தானே இணைந்துகொண்டார். அவரது தலைமையின்கீழ் 400 குடிப்படையினர் இருந்தனர். குடிப்படை என்பது முறைப்படியான ராணுவம் அல்ல. தேவையின்போது போரில் ஈடுபடும் இவர்கள், அடிப்படையில் பிற பணிகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என்பதால், குடிப்படை எல்லா நேரங்களிலும் போருக்குத் தயாராக இருக்காது. எதிரிகள் வரும் தகவல் கிடைத்ததும், தொலைவில் அமைந்திருந்த கிராமங்களிலிருந்த குடிப்படையினரை எச்சரிக்க, இரவு 9 மணிக்குக் கிளம்பி, மலைப்பாதையில் இருளில் அதிகாலைவரை பயணித்தார் சிபில்.


குதிரையை ஓட்டவும், குடிப்படையினரின் வீடுகளின் கதவைத் தட்டவும் ஒரு குச்சியைப் பயன்படுத்தினாராம். அதற்கு முன்பே ஒருமுறை, அவர் தந்தையைப் பிடிக்க இங்கிலாந்துப் படைகள் வந்தபோது, வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி, குழந்தைகளை ராணுவம்போல நடக்கச் செய்து, நிறைய வீரர்கள் இருப்பதான நிழல் தோற்றத்தை ஏற்படுத்தி, தந்தையைக் காத்தாராம். அமெரிக்க விடுதலைப்போரின்போது, இதுபோல தகவல் சொல்லப் பயணித்த பால் ரிவியர், வில்லியம் டேவ்ஸ் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், சிபில் பற்றி பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் 1880வரை இல்லை என்பதால், இதைச் சிலர் மறுக்கிறார்கள். ஆனாலும், 1900இலிருந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார். சிபில் பயணித்த வழிகளில் பல நினைவுச்சின்னங்கள் 1935இல் அமைக்கப்பட்டன. 1961இல் கார்மெல்-லில் அவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டது. சிறிய சிலைகள் பல இடங்களிலும் அமைக்கப் பட்டுள்ளதுடன், 1975இல் அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது. சிபிலை கவுரவிக்கும்விதமாக, கார்மெல்-லில் 1979இலிருந்து ஒவ்வோராண்டும் ஏப்ரலில், அவரது சிலையில் முடிவுறும்படி 50 கி.மீ. தொலைவுக்கு அல்ட்ரா-மாரத்தான் ஓட்டப்பந்தயம் மலைப்பாதையில் நடத்தப்படுகிறது.அறிவுக்கடல்

;