19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக வரைவு பட்டியலில் சுமார் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது இறுதிப்பட்டியல் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் 3.11 கோடி மக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், 19.06 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். பட்டியலில் விடுபட்ட மக்கள், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.