2020 மே தினம் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினமாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பாதிப்பு கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் உலக உழைப்பாளி மக்களுக்கு கடும் சோதனைகளை உருவாக்கியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகின் 185 நாடுகளில் பரவியுள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி நிலவரப்படி உலகம் முழுவதும் 31 லட்சத்து 61 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 287 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் 33,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூரத் தக்கவர்கள். முதலாளிகள் தங்களது இலாபத்திலேயே குறியாக இருக்க தொழிலாளி வர்க்கம் தான் இந்த நோயை எதிர்த்து களத்தில் நின்று போராடி வருகிறது. தற்போது உலகப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. ஆலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து மதக் கடவுள்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் 19 எனும் இந்த கொடூரமான நோய் தொற்றின் பாதிப்பிலிருந்து உலகம் எப்போது எவ்வாறு மீளும், எவ்வளவு இழப்புகள் நேரும், எத்தனை பேர் வேலையிழக்க நேரிடும் என்பன போன்ற கேள்விகளுக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை. ஆனால் மிகக் கடுமையான ஒரு காலத்தை மனிதகுலம் கடக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் தெளிவாகிறது. 1929 - 30ல் பொருளாதார பெருமந்தம் அமெரிக்காவிலிருந்து துவங்கி யது. இது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கியது. பல ஆயிரம் மக்களை அடிமையாக்கியது. வேலையிலிருந்து வீதிகளுக்கு விரட்டப்பட் டோர் ஏராளம். விவசாயம், தொழில், வளர்ச்சிப் பணிகள் என அனைத்தும் நொறுங்கியது. கிட்டத்தட்ட 43 மாதங்கள் இந்த நெருக்கடி நீடித்தது.
ஒரு அரசினால் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாமல் போகும் போது மக்கள் இயக்கங்களும், போராட்டங்களும் தன்னெழுச்சியாக உருவாகி வளரும். அது அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு உருவாகும் அரசியல் நெருக்கடி ஆளும் வர்க்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகும். நடைமுறைச் சட்டங்கள், விதிகள் தாறுமாறாக மாற்றப்படும். உலகில் பாசிசம் வளர இந்த சூழல் வழி வகுக்கும்.
உலக பெரு மந்தத்திற்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலைதான் ஹிட்லரை உருவாக்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய நாட்டில் 1974ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி துவங்கிய ரயில்வே வேலைநிறுத்தம் மே 27ஆம் தேதி வரை நீடித்தது. அப்போதைய இந்திராகாந்தி அரசு ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. ரயில்வே தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்கங்களின் மீதும் கடும் அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனரர். அதே காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவான இயக்கம் பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்திராகாந்தியின் ஆட்சிக்கு இது பெரும் சவாலாக உருவானது. 144 தடை உத்தரவுகள், அடக்குமுறைகள், துப்பாக்கிச்சூடுகள் போன்றவற்றால் இந்த போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை.
இந்தப் பின்னணியில் 1975-ஆம் ஆண்டு ஜூன் 25ல் அரசியல் சட்டம் முடக்கப்பட்டு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சியினரும் சில இடங்களில் கைது செய்யப்பட்டனர். கடந்த காலத்தில் பெரும் போராட்டங்கள் மூலமாக பெறப்பட்ட உரிமைகள், சலுகைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. சிறைகள், சித்ரவதைக்கூடங்களாக மாறின. மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மீது கொடூரமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1975ஆம் ஆண்டு மே 21 முதல் 25ஆம் தேதி வரை மும்பையில் சிஐடியு அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவுரையாற்றிய தோழர் பிடிஆர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியை விரிவாக விளக்கியதோடு இந்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆளும் வர்க்கத்தினால் பழைய முறையிலேயே கையாள முடியாது. அது புதிய வழிமுறைகளை பின்பற்றும். தொழிலாளர் வர்க்க உரிமைகளை பறிக்கவும், அரசியல் சட்டத்தை முடக்கவும் கூட அவர்கள் தயங்க மாட்டார்கள் தெளிவாக எச்சரித்தார் அதுதான் நடந்தது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த புள்ளிவிபரங்களும் சில உண்மைகளை சொல்கிறது. இந்த நோயினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் உலகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வீடில்லாத ஏழை, எளிய மக்கள்தான் கடுமையான துன்பத்தை சந்திக்கின்றனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆசிய இனத்தைச் சேர்ந்த எளிய மக்கள்தான் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வீடில்லாதவர்கள். பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களில் வீடற்றவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். ஊரடங்கால் பட்டினிச் சாவுகள் ஏற்படும் நிலை உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வீதிகளில்தான் உறங்க வேண்டியுள்ளது. போலீசாரின் அபராதங்களுக்கும் தாக்குதலுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்.
இத்தாலியில் வீடற்றவர்களுக்கான அமைப்பு அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அவர்களால் வீடுகளில் இருக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளே இல்லை.’ என்று குறிப்பிட்டுள்ளது. தங்கும் இடம் இல்லாத இவர்களுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கும். ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனில் சுமார் 7 இலட்சம் பேர் வீடில்லாமல் வீதிகளில் தங்கியுள்ளனர். இவர்களில் 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்வாறு உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாகி ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி பின்னர் உலகம் முழுவதையும் பாதித்த நிதி நெருக்கடி பலரின் வாழ்வை பறித்துவிட்டது என்று சமூக ஆர்வலர் நிக்கோலஸ் ஸ்மித் ‘கார்டியன்’ பத்திரிகையிடம் கூறியுள்ளார். இப்போதுள்ள நிலை நீடித்தால் பட்டினிச்சாவுகள் நடப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால், ஆளும் அரசுகளுக்கு இதுகுறித்த கவலை இருப்பதாக தெரியவில்லை.
இன்றைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலியிலும் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துவிட்டது. ஏப்ரல் 29-ஆம் தேதி நிலவரப்படி 10 லட்சத்து 30 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 59 ஆயிரத்து 284 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பலியாகிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என்பதுதான். கோவிட் 19 நோய்க்கு பலியான கருப்பு அமெரிக்கர்களின் எண்ணிக்கை என்பது வெள்ளையர்களின் எண்ணிக்கையை விட 2.5 மடங்கு அதிகம். லத்தீன் அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் 2.6 மடங்கும், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 2.7 மடங்கும் வெள்ளை இனத்தவர்களை விட கூடுதலாக பலியாகியுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு லட்சம் பேரில் பலியாகும் கருப்பினத்தவரின் வீதம் 23 ஆக இருந்த நிலையில் 28ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பினத்தவர்களின் விகிதம் 13 சதவீதம். ஆனால் இறப்பவர்களின் விகிதம் 23 சதவீதம். அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியிருப்பவர்கள் கருப்பின மக்களே ஆகும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பினால் சமாளிக்க முடியாத நிலையில் குறுகிய இனவெறியை தூண்டிவிடுவதிலும், சீனாவுக்கு எதிராக அவதூறு செய்வதிலும் உலக சுகாதார நிறுவனத்தை இழிவுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார். இது ஆளும் வர்க்கம் வழக்கமாக கையாளும் தந்திரங்களில் ஒன்றுதான்.
இந்தியாவிலும் கூட இதே நிலைதான். கொரோனா தொற்றை தொடர்ந்து கருத்தாலும், கரத்தாலும் பாடுபடக்கூடிய உழைக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை. விவசாயம், தொழில், குறிப்பாக சிறு, குறு தொழில்கள், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் சேவைத்துறைகள் முடங்கிக்கிடக்கின்றன. ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கூட கலங்கி நிற்கின்றன. முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நொறுங்கிவிட்டது.
பொருளாதாரம் எப்போது சீரடையும் என்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. அதை சரிசெய்வதற்கான திட்டங்கள் எதுவும் மோடி அரசிடம் இல்லை. வழக்கம் போல கார்ப்பரேட் முதலாளிகளை குஷிப்படுத்துவதிலேயே மோடி அரசு கவனம் செலுத்துகிறது.
கடந்த ஆறாண்டு காலமாக மோடி அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை பெரும் நெருக்கடியை உருவாக்கியிருந்த நிலையில், இப்போதைய சூழ்நிலை அதை அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. கடைந்தெடுத்த வலதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சி என்பது இந்திய அரசியல் சட்டத்தை தன்னுடைய நோக்கத்திற்கேற்ப சிதைத்துக் கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மை கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் பரிவாரத்திற்கு எப்போதும் ஏற்புடையதல்ல. மதரீதியாகவும் சாதிரீதியாகவும் மக்களை பிரிப்பதன் மூலமே தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதே அவர்களது சித்தாந்தம். அதைத்தான் நிறைவேற்றத் துடிக்கின்றனர்.
மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்கப்படுகின்றன. இந்துத்துவா வாதிகளுக்கு மேதினம் என்பது கூட மகிழ்ச்சி தருவதாக இல்லை. கம்யூனிசம் என்பதும், மே தினம் என்பதும் அந்நிய சரக்கு என்றும், அதை கொண்டாடக்கூடாது என்றும், பாஜகவின் தொழிற்சங்க அமைப்பான பிஎம்எஸ் கூறுகிறது. மே தினத்திற்கு பதிலாக விஸ்வகர்மா தினத்தை செப்டம்பர் 16- 19 கடைப்பிடிக்கின்றனர்.
மே தினம் என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமானது. மதம், இனம், மொழி, நிறம் என அனைத்தையும் கடந்து உழைப்பவர் அனைவரும் ஒன்றே என்று ஓங்கி ஒலிப்பது, சர்வதேச சகோதரத்துவத்தை, ஒருமைப்பாட்டை வலியுறுத்துவது, ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடைந்தெடுத்த வலதுசாரிகள். இவர்களால் தொழிலாளர்கள் ஒன்றுபடுவது ஒருபோதும் ஏற்க முடியாது. ஏனெனில் அவர்கள் முதலாளித்துவத்தின் சேவகர்கள்.
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தொழிலாளி வர்க்க, தொழிற்சங்க ஒற்றுமை என்பது அவசியமாகும். 2007-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா மீளாத நிலையில் மோடி அரசு பின்பற்றும் கொள்கைகள் பெரும் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது. இப்போது நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். தொழிலாளர்கள் வீறுகொண்டு எழுந்து போராடுவதன் மூலமே அவர்களது உரிமைகளை மட்டுமல்ல இந்த நாட்டையும் பாதுகாக்க முடியும்.
1904ஆம் ஆண்டு மே தினத்தின் போது மாமேதை லெனின் எழுதிய வார்த்தைகள் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமுடையவை.
“தொழிலாளர் தோழர்களே, மே தினம் வருகிறது. இந்த நாளை அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு கொண்டாடுவார்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிப்பார்கள். பசி, வறுமை, அடக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் விடுதலையை வேண்டி நிற்கும். முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் இரு வேறுபட்ட உலகம் முரண்பாடு உடையது. சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தை எதிர்த்து முறியடிப்பதே தொழிலாளர்களின் தலையாய கடமையாகும். நாம் நமது வலிமையை இரட்டிப்பாக்க வேண்டும். கரங்களை மேலும் வலிமையோடு உயர்த்த வேண்டும். சோசலிச ஜனநாயக சக்திகளோடு நெருக்கமாக பினைத்துக் கொள்ள வேண்டும். முன்னெப்போதையும் விட தொழிலாளி வர்க்கம் வலிமையாக எழ வேண்டிய நேரமிது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.”
மாமேதை லெனினது வார்த்தைகள் இன்றும் வழிகாட்டக்கூடியது. இந்த மேதினம் நெருக்கடிக்கு மத்தியில் வந்திருக்கலாம், ஆனால் எந்த ஒரு நெருக்கடிக்கும் தீர்வு காணும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு.