முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் இறங்கு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 100 பேரைக் கொண்ட பேரணிக்குத் தலைமை தாங்கிய பாஜக தலைவரான ஜெய் பகவான் கோயலைச் சுற்றி மௌஜ்பூர்-பாபர்பூர் சதுக்கத்தில் இந்துத்துவா ஆதரவா ளர்கள் திரண்டனர். ஜெய் ஸ்ரீராம், ஹர ஹர மகாதேவ் என்ற அதிரடி முழக்கங்களுக்கிடையே, ‘இங்கே வாழ வேண்டுமென்றால், இந்த இடத்தை நீங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும்’ என்று அந்த 60 வயது காவியுடை அணிந்த மனிதர் முழங்கினார். ‘நான்கு புறத்திலிருந்தும் முஸ்லீம்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக நாம் போராட வேண்டும்’ என்று அங்கிருந்த அவரது ஆதரவாளர்களை கோயல் தூண்டி விட்டார்.
திங்கள்கிழமையில் இருந்து, வடகிழக்கு தில்லியின் பல பகுதிகளிலும் பெரிய அளவிலான வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அனை வரும் இணைந்து வாழுகின்ற சூழல் உள்ள அந்தப் பகுதி செவ்வாயன்று மத அடிப்படையில் முற்றிலும் துருவமுனைக்குள்ளாக்கப்பட்டு இருந்தது. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே முஸ்லீம்கள் இருந்து வருகின்ற சூழலில், அரசியல் ஆதரவு பெற்றிருக்கும் கலகக்காரர்களைத் தவிர்த்து, அநேகமாக அனைத்து இந்துக்களும் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று தடை செய்கின்ற 144ஆவது சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஆயினும்கூட, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் அனைவரையும், நெற்றியில் காவி திலகத்துடன் மௌஜ்பூர் சதுக்கத்தில் இறங்கியிருக்கும் கலவரக்காரர்கள் வெறித்தனமாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
“144 பிரிவு இங்கே போடப்படவில்லையா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் அந்த கலவரப் பகுதியில் இருந்த காவலரைக் கேட்டார். “ஆம்,” என்று அவர் பதிலளித்தார். “அப்படியானால் இங்கே பேரணியை எப்படி ஒருவர் நடத்த முடியும்?” என்று அந்த பத்திரிகையாளர் மீண்டும் கேட்டார். காவல்துறையைச் சார்ந்த அவர் “எனக்குத் தெரியாது” என்று பதில் அளித்தார்.
கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்களிடமிருந்து வந்த அந்த அழைப்பு எவரையும் பீதிக்குள்ளாக்குவதாகவே இருந்தது. அந்த கலவரத்தின் மையப்பகுதியானப்ராபாத், மௌஜ்பூர் மெட்ரோ நிலையங்கள் இருந்த ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான அந்தப் பகுதி, தேசிய தலைநக ரில் இதுவரை காணப்படாத மதரீதியான துருவ முனைப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. ஜாப்ரபாத் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி அதிக அளவில் முஸ்லிம்களைக் கொண்டது. ஆனால், செவ்வாயன்று, முஸ்லிம் போராட்டக்காரர்கள் பெருமள வில் முடக்கப்பட்டனர். “எங்கள் நோக்கம் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதாகும். எங்களுடைய இந்து சகோதர சகோதரிகளுடன் சண்டை யிடுவதற்கான எந்தவொரு எண்ணமும் எங்களிடம் இல்லை” என்று ஜாஃப்ராபாத்தில் இருந்த முஸ்லீம் போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
இந்துத்துவா ஆதரவாளர்களால்தான் அங்கிருந்த நிலைமை கலவரமாக மாறியதா என்று கேட்டபோது, “நான் பொய் சொல்ல மாட்டேன். நேற்று இந்து கும்பல் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கியபோது, எங்கள் பக்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வீசப்பட்ட அதே கற்களை, செங்கற்களை எடுத்து அந்தக் கும்பல் மீது வீசினார்கள். எங்களால் அங்கிருந்த நிலைமையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. ஆனால், இன்றைக்கு யாரையும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட அனுமதிக்கமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம் ” என்றார்.
காவல்துறையைச் சார்ந்த ஒரு சிலர் காவலில் இருக்க, போராட்டக்காரர்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எந்தவொரு வன்முறை யிலும் ஈடுபட வேண்டாம் என்று அங்கே பேசிய பல பேச்சாளர்களும் அழைப்பு விடுத்தனர். இதற்கு நேர்மாறாக, மௌஜ்பூர் மெட்ரோ நிலையத்தைச் சுற்றி யுள்ள பகுதி, வெறித்தனமான இந்துத்துவக் கும்பலால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டிருந்தது.
“ஜெய் ஸ்ரீ ராம்” என்று எழுதப்பட்ட காவித் திரைச்சீலை கள் அந்தப் பகுதிக்கு வரும் ஒருவரை வரவேற்கின்றன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள தில்லி காவல்துறையின் சிறிய பட்டாலியனுக்கு முன்னால் தடிகள், குழல் விளக்குகள், பி.வி.சி குழாய்களுடன் இருக்கின்ற இளைஞர்கள் தங்களுடைய பலத்தை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருந்தனர். அராஜகக் கும்பல் எண்ணிக்கை யில் அதிகரித்த போதும், அதை வெறுமனே பார்வையாளர்க ளாக மட்டுமே காவல்துறை அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்க ளை சந்தேகத்துடனே பார்த்தார்கள். யாராவது ஒருவர் வீடியோ அல்லது படத்தை எடுக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசியை அவர்கள் பறித்து, அனைத்து படங்களையும் நீக்கியதோடு, அவர்களை அடிப்பதாக அச்சுறுத்தவும் செய்தார்கள்.
கும்பலிலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர், அந்தக் கும்பலி டம் இருந்து விலகி இருக்குமாறு ஊடகவியலாளர்களைக் கேட்டுக்கொண்டனர். 144 நடைமுறையில் இருந்தபோதி லும், அந்தக் கும்பலை ஏன் கூடுவதற்கு அனுமதிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு காவல்துறை பதிலளிக்க மறுத்தது. நிருபர் பிறப்பால் இந்துவாக இருப்பதை உறுதி செய்த பின்னரே, “‘நாங்கள் போராட்டக்காரர்களால் சூழப்பட்டி ருக்கிறோம், இந்த தடிகளின் மொழியை மட்டுமே அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்” என்று அநேகமாக 20 வயதின் பிற்பகுதியில் இருக்கும் இந்து இளைஞர் ஒருவர் கூறினார். அதே வேளையில், அங்கிருந்த முஸ்லீம் நிருபருடன் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.
சிறிது நேர இடைவெளிக்குள், முஸ்லீம்களுக்கு எதிராக அதிகம் பயன்படுத்தப்படுகின்ற போர் முழக்கமான “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு கும்பல்கள் அந்தப் பகுதிகளில் பரவியதால், நிலைமை அங்கே மோச மடைந்தது. கும்பலைக் கலைப்பதற்காக காவல்துறையின் சிறிய குழு அவ்வப்போது பயன்படுத்திய கண்ணீர்ப்புகை குண்டிலிருந்து வந்து காற்றில் கலந்திருந்த கண்ணீர்ப் புகையோடு, முஸ்லீம்களுக்கு எதிரான ஆபாசமான வசை சொற்களும் சேர்ந்து கொண்டன. மற்றொரு புறத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாபர்பூரின் வீதிகளில் காவி உடை அணிந்த நடுத்தர வயது பெண்கள் சுற்றி வந்தனர். அவர்களுடைய நடவடிக்கை தங்களுடைய சமூகத்திலிருந்து இன்னும் அதிகமான மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவது என்ற தெளிவான குறிக்கோளுடன் இருந்தன. அந்த கலவரத்தின்போது பிரதமரின் பெயரை முழங்க ஆர்வமாக இருந்தவர்களிடம் “இங்கே பாருங்கள். மோடி மோடி என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அதற்குப் பதிலாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றே சொல்லுங்கள்” என்று அங்கிருந்த ஒருவர் கூறிக் கொண்டிருந்தார்.
கலவர சம்பவங்கள் குறித்து தொடர்ந்து காவல்துறையி டம் புகார் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அந்தக் கும்பல் அதிகரித்த பிறகு, மௌஜ்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அப்பால் கடந்து செல்வது சாத்தியமற்றதாகிப் போனது. கண்ணீர்ப்புகை குண்டுகள் சுடப்படும் சப்தத்தை ஒருவர் கேட்கலாம் அல்லது தூரத்திலிருந்து அதிக உயரம் எழுகின்ற புகை மேகங்களைக் காணலாம் என்ற நிலைமை நீடித்தது. செவ்வாய்க்கிழமையன்று வடகிழக்கு தில்லியில் இருந்த பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகநிறுவ னங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜாப்ராபாத் மற்றும் மௌஜ்பூர் மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் இருந்த நிலைமை திங்களன்று நடந்த சதியை நினைவூட்டுவ தாகவே இருந்தது. ஜாப்ராபாத் பகுதியில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் தீக்கிரையாக் கப்பட்டன. தெருக்கள் முழுவதும் கற்கள், செங்கற்கள், கண்ணாடி போன்றவற்றால் நிரம்பியிருந்தன.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு ஜாப்ராபாத்தில் குடி யுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வந்த தர்ணாவில் பெரும்பாலும் அமைதியாகவே அமர்ந்தி ருந்தது. இருப்பினும் மூன்று நாட்களுக்கு முன்பாக தர்ணா ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதாக உணர்ந்த அந்த சமூகத்திற்குள் இருந்த மற்றொரு குழுவினர், ஜாப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு அடியில் பிரதானச் சாலையை ஆக்கிரமித்து மற்றொரு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.
சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்துகின்ற வகையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெறும் எந்தவொரு போராட்டத்தையும் அகற்றுவதற்கு தங்களு டைய ஆதரவாளர்கள் தயங்க மாட்டார்கள் என்று தில்லி காவல்துறையையும் அரசாங்கத்தையும் அச்சுறுத்தும் வகையில், அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக தலைவரான கபில் மிஸ்ரா கூறிய பிறகு, மற்ற இந்துத்துவா தலைவர்களும் உடனடி யாக களத்தில் இறங்கினர்.
“பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைதியைக் காப்பதற்காக இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்தன. சீலாம்பூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் இந்தியாவின் ஒத்திசைவான கலாச்சாரத்தை குறிப்பதாக இருந்தன. இப்போது எல்லாம் போய்விட்டது. எங்கள் பக்கத்து வீட்டுக்கார இந்துக்கள்கூட இப்போது எங்களை சந்தேகத்துடனே பார்க்கிறார்கள்” என்று சமூக ஆர்வலரான ஓவைஸ் சுல்தான் கான் தெரிவித்தார். “இரு சமூகங்களுக்கிடையிலான உறவை சரிசெய்ய இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்” என்று அவர் வேதனையுடன் கூறினார்.
நன்றி : தி வயர் இணைய இதழ்
தமிழில்: பேரா.த.சந்திரகுரு