காடுகளிலும் வயல்களிலும் கழனிகளிலும் பூந்தோட்டங்களிலும் பணிபுரிந்தபெண்கள், காலங்களில் மாறுதல்,விஞ்ஞான தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களினாலும் மாறுதலினாலும் ஆலைகளிலும் பெரும் தொழில் நிறுவனங்களிலும் கணிப்பொறி மென்பொருள் நிறுவனங்களிலும் இன்று பணியாற்றி வருகிறார்கள். பெண்கள் அனைத்து துறைகளில் பணியாற்றினாலும் சுதந்திரத்திற்கு பிறகு பெண்களின் நிலையில் பெரிய முன்னேற்றமில்லை. பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் நிலையில் அவர்களை அணிதிரட்டும் பணியினை செய்யவேண்டிய பிரதான கடமை தொழிற்சங்கங்கள் முன் வந்தது. பெண் தொழிலாளர்கள் கலந்து கொள்ளாமல் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. இதை உணர்ந்து சிஐடியுவின் ஸ்தாபக தலைவர்தோழர் பி.டி.ரணதிவே, தோழர் விமலா பி.டி.ரணதிவே மற்றும் தோழர் சுசீலா கோபாலன் ஆகியோர் முயற்சிகளில் உழைக்கும் பெண்களை சிஐடியு-வில் அணிதிரட்ட ‘அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு’ 1979ம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அகில இந்திய முதல் மாநாட்டினை அடுத்து மாநில அளவில் திருச்சியில் நமது தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழு துவங்கப்பட்டது. தோழர்மைதிலி சிவராமன் அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து வரிசையாக இரண்டாவது மாநாடு 1983ல் கோயம்புத்தூரிலும் மூன்றாவது மாநாடு1989ல் நாகர்கோவிலிலும் நான்காவது மாநாடு 1993ல்சேலத்திலும் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் உமா மஹேஸ்வரி கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5வது மாநில மாநாடு இரண்டுநாள் மாநாடாக டிசம்பர் 28, 29 - 1996ல் திருச்சியில்நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநில கன்வீனராக வி.ராஜீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆகஸ்டு 16, 17 2000ல் 6வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.இம்மாநாட்டிலும் வி.ராஜீ கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முதல் மாநாட்டை தொடர்ந்து மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு மாவட்டக் குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.ஏழாவது மாநாடு ஜுன் 21, 22 2003ல் மதுரையில் நடத்தப்பட்டது. மாலதி சிட்டிபாபு கன்வீனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 21, 22 2006ல் திருவள்ளூரில் எட்டாவது மாநாடு நடத்தப்பட்டது. மாலதி சிட்டிபாபு மீண்டும் அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.9வது மாநாடு மூன்று நாள் மாநாடாக ஈரோட்டில் 5, 6, 7 அக்டோபர் 2010ல் நடத்தப்பட்டது. மாலதி சிட்டிபாபு தொடர்ந்து அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஒரு நாள் மாநாடாக நடைபெற்று, இரண்டு நாள் மாநாடாக நடைபெற்று, மூன்று நாள் மாநாடாக ஈரோட்டில்9வது மாநாடு நடைபெற்றது உழைக்கும் பெண்கள் அமைப்பின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. 2014 ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் தஞ்சாவூரில் 10வதுமாநாடு நடைபெற்றது. மாநில கன்வீனராக வி.மஹாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979ல் தொடங்கி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு 10 மாநாடுகளை கடந்த பின்னணியில் நடைபெற்ற இயக்கங்கள் ஏராளம். பெண் தொழிலாளர் பிரச்சனையில் நாம் தலையிட்டுள்ளோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புகளை உருவாக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பெண்கள் கமிஷன் பொது விசாரணைக் கூட்டம் முதல் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தோடு இணைந்து பன்முக பணிகள் நடத்தி உள்ளோம். (உ.ம். குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு நடவடிக்கை, கிராமப்புற பெண் தொழிலாளர்களை திரட்டுவது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரட்டுவது, சுனாமி போன்ற இயற்கை பேரிடர் மீட்பு நடவடிக்கையில் பெண் தொழிலாளர்களின் மறுவாழ்வு... போன்றவை.)வீட்டு வேலை பெண் தொழிலாளர்கள் சங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து இயக்கங்கள் நடத்திவரப்பட்டது.
40 ஆண்டு காலத்தில்
மத்திய, மாநில அரசு துறைகளிலும் பொதுத்துறைகளிலும் சங்கங்களோடு ஸ்தாபனமாக உறவும் நெருக்கமும் தொடரப்பட்டு வருகிறது. மின் அரங்கத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கட்டுமானம், கைத்தறி, பீடி போன்ற அரங்கங்களில் மாநில உபகுழு அமைக்கப்பட்டு செயல்படுகிறது. குடிநீர் வாரியத்தில் துவங்கப்பட்டு செயல்பட்ட அமைப்பு பலவீனமாக உள்ளது. ரெயில்வே துறையில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு துவங்கப்பட்டுள்ளது. நமது அகில இந்திய கமிட்டியின் வழிகாட்டுதலில் கைத்தறி, சுய உதவி குழுக்கள், தீப்பெட்டி, பட்டாசு போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனைகள் கண்டறியப்பட்டன.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்து மார்ச் 8, இரவு நேர ஷிப்டில் பெண்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான கொள்கை முடிவு எடுப்பது போன்ற இயக்கங்களை நடத்தி உள்ளோம்.சென்னையில் தலைமைச் செயலாளர், ரெயில்வே பொது மேலாளர், போக்குவரத்து துறை உயரதிகாரி, போன்ற அதிகாரிகளை பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்காக பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்திக்கும் இயக்கமும் மாவட்டங்களில் பலமுறை நடத்தப்பட்டுள்ளது.
இரயில்களில் பெண்களுக்கான கூடுதல் பெட்டிகள், பெண்களுக்கான தனி பேருந்துகள், குழந்தை காப்பகம் போன்ற பிரச்சனைகளில் உழைக்கும் பெண்கள் மாநிலக்குழு தலையிட்டுள்ளது. பணியிடங்களில் பெண் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் முயற்சிகளின் பலனாய் சிஐடியு அகில இந்திய கமிட்டி முடிவுகள் மற்றும் மாநில குழு முடிவுகளின்படி நடைபெறும் அனைத்து இயக்கங்களிலும் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பெண் தொழிலாளர்களின் உணர்வை மேம்படுத்தவும், அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கவும், ஊழியர் திறன்வளர்க்கவும் தொழிற்சங்க பயிற்சி முகாம்கள் உழைக்கும் பெண்கள் மாநில குழுவின் சார்பில் நடைபெற்றுள்ளன.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளனம், ஒரு லட்சம் பெண் ஊழியர்கள் பணியாற்றும்அரங்கம். உழைக்கும் பெண்கள் அரங்கத்தோடு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் இணைப்பாக உள்ளனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நடத்தும் இயக்கங்களில் உழைக்கும் பெண்கள் மாநில மாவட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பெண் தலைவர்கள்
சிஐடியு-வின் முடிவெடுக்கும் அமைப்புகளில், நிர்வாகக் குழுவில் இடம் பெறும் வகையில் பெண் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற சிஐடியு-வின் நோக்கம் 1979ல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளில் ஓரளவு நிறைவேறியுள்ளது. சிஐடியு-வின் மாநில நிர்வாகிகளாக, மாநில குழு உறுப்பினர்களாக, மாவட்ட நிர்வாகிகளாக, சம்மேளன தலைவர்களாக பொதுச் செயலாளர்களாக நிர்வாகிகளாக பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.நடைபெற்ற 10 மாநாடுகளிலும் ஸ்தாபன கடமையாற்ற பெண்கள் முழுநேர ஊழியர்களாக வரவேண்டும்; உழைக்கும் பெண்கள் மத்தியிலான வேலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்; பெண் தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றும் சம்மேளனங்களில் உப குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்; வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் உமன், சிஐடியு செய்தி ஆண்டு சந்தாக்களை அதிகப்படுத்துவது - போன்ற கடமைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000/- சட்டப் பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்; பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் அமலாக்கப்பட வேண்டும்; குழந்தை காப்பகம், உழைக்கும் பெண்களுக்கான அரசு விடுதிகள் அமைப்பட வேண்டும்; திட்டப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.பிரச்சனைகள் நிரந்தரமானவை அல்ல. அவை ஒன்றுபட்ட போராட்டங்களினால் தீர்க்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சேலம் மாநகரில் மே 18,19 தேதிகளில் நடைபெறவுள்ள 11வது மாநாடு புதிய கடமைகளையும் கோரிக்கைகளையும் தீர்மானிக்கும்.
கட்டுரையாளர் : சிஐடியு, மாநிலப் பொருளாளர்