tamilnadu

img

இலவச மின்சாரத்தை நிறுத்துவது நியாயமா?

இந்து ஆங்கில இதழ் (04.06.2020) “விவசாயிகளுக்கு தரப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்த இது நேரம்” என்ற தலைப்பிலான டி. இராமகிருஷ்ணன் கட்டுரையை தாங்கி வந்தது. அது இந்து தமிழ் நாளிதழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. அது எழுப்புகிற கேள்விகளுக்கு இத்துறை சார்ந்து தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ள வ.சேதுராமன் (பொதுச் செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சாவூர் கோட்டம் & தமிழ் நாடு அறிவியல் இயக்கம்) கேள்வி -பதில் வடிவில் தெளிவு அளிக்கிறார்.

1) இலவச மின்சாரத்தை நாங்கள் பறிக்கப் போவதில்லை. நேரடி பண மானியமாகத் தானே அதை மாற்றித் தரப்போகிறோம் என்கிறார்களே ஆட்சியில் இருப்பவர்கள்?
விவசாய நேரடி பண மானியமும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் தான். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொழுது ஒத்திகை செய்து பார்த்தார்கள். எந்த அடிப்படையில் என்று பார்த்தீர்களானால், ஒரு குதிரைத்திறன் (எச்.பி எனச் சொல்வோம்) ரூ. 125 என நிர்ணயித்தார்கள். 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு எச்.பிக்கு ரூ.125 விவசாயிகளுக்குக்   கொடுக்க வேண்டும். 5 எச்.பிக்கு ரூ.625 பணம் கட்ட வேண்டும் என நிர்ணயித்திருந்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட அந்த தொகையை நாங்கள் விவசாயிகளுக்கு மணியார்டரில் அனுப்புவோம். அதை அவர்கள் போய் மின் வாரியத்தில் கட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். மின்வாரியம் அதை முறைப்படுத்தாத நிலையில் அது வராமலேயே போனது என்பதுதான் எதார்த்தம். அந்தத் திட்டமும் ஓராண்டிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்றைய நிலை மேற்சொன்ன நிலைக்கு நேர் எதிரானது.  அரசாங்கத்திடமிருந்தோ அல்லது மின்வாரியத்திடமிருந்தோ பணம் வராது.  விவசாயி பணம் கட்டி அதன் பிறகு அதை திரும்ப வாங்க வேண்டும் என்பது தான் நேரடி பண மாற்றம் திட்டத்தில் கொண்டு வந்திருக்கக் கூடிய பிரதானமான அம்சம். விவசாயிகள் ஏற்கனவே இடு பொருட்கள்,  வேலைபார்ப்பவர்களுக்கான சம்பளம் உட்பட பல்வேறு விசயங்களுக்கு காலத்தை ஓட்டும் சூழலில் இது சாத்தியமா? கூடுதல் சுமை அல்லவா? மேலும் சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துகிற அரசின் செயல்பாட்டில் நமக்குக் கிடைத்திருக்கிற அனுபவங்கள் நேரடி பண மானியம் குறித்த ஐயங்களை எழுப்புகின்றன.

2) அரசு பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லும் போது பறிப்பதாக சொல்வது சரியா?
விவசாயிக்கு பின்னால் தருகிறேன் என்பதே கடனை நோக்கி மேலும் அவர்களை தள்ளுவது தான். பணத்தை நேரடி பண மாற்றத்தின் வாயிலாகக் கொடுக்கிறேன் என்று சொல்லுவதன் உள் நோக்கமே இலவச மின்சாரத்தை படிப்படியாக ஒழிப்பதுதான். அதன் பிறகு ஒரு பகுதியை விவசாயிகள் கொடுக்கட்டும் என்று எதிர்காலத்தில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதைத்தான் சமையல் எரிவாயு மானியத்தில் பார்த்தோம். அது நீர்த்துப் போகவில்லையா? உங்கள் ரயில் டிக்கெட்டுகளில் நீங்கள் பெறும் மானியம் எவ்வளவு சதவீதம் என்று போடுகிறார்களே! எதற்காக... உங்களை மனதளவில் பறிப்புக்கு தயார் செய்வதுதானே? இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு நிலம், மின்சாரம் சலுகைகள் தருகிறார்களே! அந்த நிறுவனங்களின் வாசல்களில் எழுதிப் போடுகிறார்களா? கார்ப்பரேட் மருத்துவ மனைகளின் வாசல்களில் அரசு தரும் சலுகைகளுக்காக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய சமூக பொறுப்புகள் என்னென்ன என்று எழுதிப் போடுவார்களா? 

3) நிறுவன உலகம் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என அரசு கருதுவதால் அவர்களுக்கான அணுகுமுறை மாறுபடுகிறது. இதை தவறு என்கிறீர்களா?
உணவுப் பாதுகாப்பை விட மிக முக்கியமானது எது? ஒரு காலத்தில் கோதுமைக்காக அமெரிக்காவிடம் கையேந்திய நாடு இது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே உணவில் தன்னிறைவு இல்லாவிடில் சாமானிய மக்களின் ரேசன் என்ன ஆகும்? விலையில்லா அரிசி என்ன ஆகும்?  
  தன்னுடைய நிலத்தை வைத்துக் கொண்டு அதில் விவசாயம் செய்யாமல் இருக்க முடியாது என்ற சூழலில், இலவச மின்சாரம் என்பது அவர்களுக்கு ஒரு கூடுதலான உந்துதலை உருவாக்கியிருக்கிறது. அவர்களின் உளவியலும், உந்துதலும் தேசத்திற்கும் பயன்படுகிறது.  அவர்களின் உளவியலை பலவீனமாக பயன்படுத்துவது ஓர் அரசு செய்யத் தக்க ஒன்றா என்பதே கேள்வி.

4) இலவச மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்களே?
விவசாயிகளுக்கான சலுகைகளில்  முக்கியமானது இலவச மின்சாரம். இதை வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த முடியுமா  என்றால் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் விதி மீறல்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.   புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு கருத்து சொல்பவர்கள் வயலுக்கும் வந்து பார்த்தால்தான் கள நிலைமை புரியும். இலவச மின்சாரம் அதிகபட்சமாக 5 எச்.பி வரை மட்டும் உள்ள இணைப்புக்குத்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில்  5 எச்.பி. மோட்டார்கள் விவசாயத்திற்கான நீர்த் தேவையை நிறைவு செய்ய இயலாத சூழல் இங்கு உள்ளது. இதற்கு விவசாயிகள் காரணம் கிடையாது. மிக அதிகமான மணல் திருட்டு, அதே போல பெரிய பெரிய நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக குடிநீர் எடுக்கக் கூடிய மிகப் பெரிய ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது.

அப்படி நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கும் பொழுது கூடுதல் இழுவைத் திறனுள்ள அதிகமான குறிப்பாக 7.5, 10 எச்.பி  போன்ற குதிரைத் திறன்கள் உள்ள மின் மோட்டார்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுகிற கட்டாயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். இதனால் மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. விவசாய நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலைமைக்கு விவசாயிகளா பொறுப்பு? இன்னொரு அம்சம், வேறு பயன்பாடுகளுக்கு மடை மாற்றம் ஆகிறதா என்பது. நிறைய விவசாயிகள் இங்கே தண்டனை பெறக்கூடிய ஒரு சூழலையும் பார்க்கிறோம். விவசாயத் தேவைகளை தவிர வேறெதற்கும் பயன்படுத்தினால் மின்சார வாரியம் அதை மிகவும் கூர்மையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக  மீன் வளர்க்கக் கூடிய பண்ணைக் குட்டைகள். விவசாயிகள் தங்களது நிலத்திலேயே அமைத்திருக்கும். இந்த பண்ணைக் குட்டைகளுக்கு இலவச மின்சாரத்திலிருந்து தண்ணீர் போகக்கூடாது என்கிற விதிகள் இருக்கின்றன.  ஆனால் அந்த விதிகளை அறியாமல் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திய நேரங்களில் மின்வாரியத்தின் கடுமையான கண்காணிப்பில் தண்டனைக்குள்ளாகி உள்ளனர் விவசாயிகள். பொருளாதார ரீதியிலான தண்டனைகளை அனுபவித்திருக்கிறார்கள். அது கூட  நடைமுறையில் எந்த இடத்திலேயும் பெரிய அளவிற்கு இல்லை. அங்கும் இங்கும் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கக் கூடும்.  இலவச மின்சாரம் மட்டுமே இன்றைக்கு பல இடங்களில் கூடுதலான உணவு உற்பத்தி, அங்கு இருக்கக் கூடிய விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். 
இது போன்ற பிரச்சனைகளை அளவுக்கு மேல் ஊதி விவசாயிகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

5)இலவச மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு  உள்ளதே?
அடிப்படையில் மின்சார சிக்கனத்தை விவசாயிகளால் செய்ய இயலாமல் போவதற்கு காரணம் யாரென்று பார்த்தால் அரசுதான். என்ன காரணம் என்று பார்த்தோமானால், நமக்கு குறிப்பிட்ட அளவு மும்முனை மின்சாரம்தான்  தேவை. ஒரு முனை அல்லது இரு முனை மின்சாரமோ வந்தால் அதைக் கண்டிப்பாக பயன்படுத்த முடியாது. மின்சார விநியோகத்தில்  இன்றைக்கும் கிராமப்புற பகுதிகளில்  மாலை ஆறு மணிக்கு மேல் இரவு பத்து மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த ஆறு முதல் பத்து மணி மட்டும் தான் மும்முனை மின்சாரம் இல்லையா என்று பார்த்தால், எப்பொழுதெல்லாம் மின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் முதலில் கை வைக்கப்படுவது  விவசாயிகளுடைய மின்சாரத்தில்தான்.  இதை நம்பி பயிர் செய்த விவசாயிகளுக்கு பல நேரங்களில் கடும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. 

இன்னொன்று நீர் பயன்பாடு என்று சொல்லும் போது கண்டிப்பாக எந்த ஒரு பயிருக்குமே அது பணப்பயிராக இருந்தாலும் சரி, அல்லது உணவுப் பயிராக இருந்தாலும் சரி, அதற்கு தேவைக்கு மேல், நீரை சேகரிக்கும் பொழுது, அந்த பயிர் இயற்கையாக அதனுடைய நிலைத்தன்மையை இழந்து விடும் என்பதுதான் இயற்கை. விவசாயிகள் கூடுதலான நீரைப் பயன்படுத்துவதற்காக மின்சாரத்தை உபயோகப்படுத்துவது என்கிற வாய்ப்புகள் கிடையவே கிடையாது. தொடர் போராட்டமாக இருப்பது என்னவென்றால், மும்முனை மின்சாரம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரமாவது வேண்டும் என்று கோரிக்கை வைக்கக்கூடிய சூழல்தான். ஆனால் ஏழு மணிநேரம், எட்டு மணிநேரம்; சில சமயங்களில் ஐந்து, ஆறு மணிநேரம் மட்டுமே வரக்கூடிய மும்முனை மின்சாரத்தைத்தான் இன்றைக்கு வரைக்கும் அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், மின்மிகை மாநிலம் என்று  சொல்லக் கூடிய அதே காலகட்டத்தில், விவசாயிகளுக்கு மட்டும் இந்த மின் மிகையாக வருவதே கிடையாது. 

6) இலவச மின்சார இணைப்புகள் தொடர்ந்து தரப்படுகின்றனவா?
மிகவும் தாமதமாகத் தரப்படுகிறது. இணைப்புக்காக இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள சூழலில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை கூட காத்திருக்கிற சூழல் நிலவுகிறது.  ஒவ்வோராண்டும் இலக்கு வைத்து இணைப்பு கொடுக்கப்பதாக கூறப்படுகிறது.   ஆனால் அது நடைமுறையில் இல்லை. உதாரணத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு கூட 50,000 இணைப்புகள் கொடுப்பதாக மாநில  அரசு அறிவித்தது.  அதில் 25,000 மட்டுமே முழுமையாக இலவச மின்சாரமாக வழங்கப்படும்.  மேலும் 25,000 தட்கல் முறையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தட்கல் முறையில் 5 எச்.பி இணைப்புக்கு கட்டணமாக ரூ .2,50,000 என்றும் மேலும் ஒவ்வொரு 2.5 எச்.பிக்கும் ரூ. 25,000 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்சமாக 15 எச்.பி வரை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் கடந்த மாதம் அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி கடந்த ஆண்டுகளில் இலவச மின்சார இணைப்பு பெற்றவர்கள் தங்களது இணைப்பில் எச்.பி திறனை அதிகரித்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் புதிய தட்கல் திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.  அதன்படி கூடுதலாக பெறுகிற ஒவ்வொரு எச்.பிக்கும்  ரூ. 20,000 கட்டணமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதற்கு அரசு  தெரிவித்துள்ள காரணம்… மின்வாரிய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது என்பதாகும். ஆனால், இதற்கான தொகை அரசினுடைய பட்ஜெட்டில் மிக மிகச் சிறிய பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது. இதில் எங்கு இலவசம் இருக்கிறது? மேலும்  உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளை சரிசெய்வதை விட இது போன்ற கூடுதல் செலவினங்களைப் செய்வது அரசிற்கு கூடுதல் சுமையாக மாறாது என்பது தான் அது குறித்த தெளிவான பார்வை.

7) அரசு என்ன செய்ய இயலும்?
திருவாரூர் மாவட்டத்தில்  திரு. நடராஜன் என்கிற ஆட்சித் தலைவர் இருந்தார். அவர் தன்முனைப்பில், விவசாயிகளிடம் கலந்து பேசி ஒரு விசயத்தை செய்தார்.   காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் (பழைய ஆயக்கட்டு) பூமிக்குக் கீழே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிற மாதிரியான படுகைகளை ஏற்படுத்தினார். அதே போல ஆற்றிலேயும் ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு இடத்திலும், 25 அடிவரைக்கும் போர்வெல் அமைத்து மேலே அந்த ஆற்றுநீரை சுத்திகரித்து உள்ளே போவது போல, சுத்திகரிக்கக்கூடிய கூழங்கல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி ஓட்டைகள் அமைக்கப்பட்ட பிவிசி பைப்புகளை உள்ளே வைத்து 25 அடியிலிருந்து 30 அடிவரை மீண்டும் பூமிக்குள் அந்த நீர் ஆற்றில் வரும்போது சென்று சேரும்படி செய்தார். இது போன்ற செயல்பாடுகள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகளிலும், குளங்களிலும் இயன்றவரை நடைமுறைப்படுத்தினார்.  அது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியது என்பதும் அனுபவம். இது போல பல வாய்ப்புகள் அரசு செய்யக் கூடியது. தனிமனிதர்களால் செய்யக் கூடிய சாத்தியம் கிடையாது. திருவாரூர் மாவட்டத்தில் இன்றும் பல இடங்களில் செயல்படுபவை ஆகவும்,  சில இடங்களில் அடையாளங்களாகவும் மாறி இருப்பதை நாம் பார்க்கிறோம். அரசுக்கு உண்மையிலேயே இந்த நிலத்தடி நீரில் அக்கறை இருந்திருந்தால், இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு மேலும் முனைப்புக் காட்டியிருக்க வேண்டும்.

8) நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதற்கு விவசாயிகள்தான் காரணமா?     இந்து கட்டுரை இப்படி ஓர் வாதத்தை முன் வைக்கிறதே! 
இது தொடர்ந்து வைக்கப்படும் ஒரு விமர்சனம். உணவு உற்பத்தி என்பது இன்றைக்கு இந்தியாவில் தன்னிறைவு பெற்றிருக்கிறது அல்லது மிகையாக இருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக நமது நாட்டில் இருக்கக் கூடிய இரண்டு வகையான பாசன வசதிகளை நாம் பார்க்க வேண்டும். ஒரு பக்கம், கங்கை, பிரம்மபுத்திரா போன்ற தொடர் நீர்வரத்து உள்ள நதிகள். இன்னொரு பக்கம், பருவகால மழைகள் மூலமாக வரக்கூடிய காவிரி போன்ற நதிகள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமக்கு நிரந்தரமாக, ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனம்  பெறக் கூடிய நதிகள் எதுவுமே கிடையாது. குறிப்பாக காவிரி டெல்டாவை எடுத்துக் கொண்டால் ஒரு ஆறு மாத காலம், பெற்று வந்த ஆற்று நீர் என்பது இன்றைக்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் கிடைப்பது என்பதே பெரிய விசயமாகப் பார்க்கக் கூடிய நிலைமையாக மாறியிருக்கிறது.

இதை மனதில் கொண்டு இப் பிரச்சனையை விவாதிக்க வேண்டும்.   காவிரி டெல்டாவில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு கிட்டத்தட்ட 50 டிஎம்சி வரைக்கும் நிலத்தடி நீர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதில் ஆண்டுக்காண்டு ரீசார்ஜ் ஆகக் கூடிய அளவு 80 சதவீதம் மட்டுமே. அதற்காக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திட முடியுமா? அதற்கு வாய்ப்பில்லாத சூழல். என்னவெனில், இங்கிருக்கக்கூடிய விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும்  இதன் பயன்பாட்டையே வாழ்வின் ஆதாரமாக மையப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். காரணம்… பற்றாக்குறை காலங்களில் (பல ஆண்டுகள் பற்றாக்குறைதான்) ஆற்று நீர் முறை\ வைத்து பாசனத்திற்கு கொடுக்கிற போது இடைப்பட்ட காலங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு தவிர்க்க இயலாதது.  

ஆனால் நிலத்தடி நீர் ஆதாரத்தை நாம் பயன்படுத்துவதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமா எனில் ஆம் என்பதுதான் பதில். எப்படி இம் முரண்பாட்டை கையாள்வது?எத்தனை அடி வரை போகலாம் என்றால் அதற்கு இயற்கையில் பல வரையறைகள் இருக்கிறது என்னவெனில், ஒவ்வொரு இடங்களில் 200, 300 அடிக்கு மேல் இருக்கிற நீரை நீங்கள் விவசாயத்திற்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இப்படி பல இடங்கள் காவிரி டெல்டாவில் இருக்கின்றன. அது போன்ற இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் என்பதை 200 அடி 300 அடியில் வரை இருக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு உள்ளார்கள். அப்படி எடுக்கக்கூடிய நிலத்தடி நீர் அளவை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அரசிடம் உள்ளதா என்றால் உள்ளது என்பதே பதிலாகும். 

9) அரசின் நோக்கம் என்ன? விவசாயிகளை வெளியேற்றுவது என்று குற்றம் சாட்டுவது சரியா?
ஆம். கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை விரட்டுகிறார்கள் என்ற சந்தேகம் நியாயமானது. ஆகவே இலவச மின்சார ரத்து என்பதற்கு மேலான நோக்கமும் இதில் இருக்கிறது. விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுப்பதுதான் இதன் இலக்கு. மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய “ஒரே நாடு, ஒரே சந்தை” திட்டம் இதற்கான வரைபடமே ஆகும்.  கார்ப்பரேட் கைகளுக்கு விவசாயத்தைக் கொண்டு போவது, அவர்களின் முதலீட்டிற்கான இடமாக விவசாயத்தை மாற்றுவது என முன்னேறுகிறார்கள். நேரடி பண மாற்றம் என்பது மானியமாக பெருநிறுவனங்களுக்கும் போவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், இன்று இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் தான் இந்தியாவில் அதிகம்.

குறிப்பாக மூன்று ஏக்கரிலிருந்து எட்டு ஏக்கர் வரை அதிகபட்சமாக வைத்திருப்பவர்கள்தான் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகள். அவர்கள் ஏற்கனவே விவசாயச் செலவினங்களால் திணறிக் கொண்டிருக்கிறார்கள்  வருவாயும் மிகக் குறைவு.  இன்னொருபுறம் மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதற்கும் இலவச மின்சாரத்தை இடையூறாக பெரு நிறுவனங்கள் கருதுகிறார்கள். பணத்தை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துகிற போது மின்சாரத்தை விநியோகிக்கும் பெரு நிறுவனத்திற்கும் விவசாயிக்குமான தொடர்பு இருக்கக் கூடாது என்பதற்கான அந்நிறுவனங்களுக்கு ஆதரவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். மூன்றாவது சர்வதேச அழுத்தம். இலவச மின்சாரம் உள்பட, இடு பொருட்களுக்கான மானியத்தை சர்வதேச அழுத்தத்தினால் அவற்றை இங்கே விலக்குவதற்கான முனைப்புகளாகவும் இவை உள்ளன.  இவை மூன்றும் ஆட்சியாளர்கள் வெளியில் சொல்லாத ஆனால் வெட்கமில்லாமல் அரங்கேறும் உலகமய நகர்வுகள்.