ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சபாநாயகர் தனபால் இன்னமும் உரிய நடவடிக்கைஎடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு வழக்கை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
உரிய நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் உருண்டோடியபிறகும் சபாநாயகர்எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. திமுக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய குண்டு ஒன்றை போட்டுள்ளார். அதாவது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும்தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களுக்கு கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை என்றும், எனவே அவர்களை தகுதிநீக்கம் செய்யும் தேவை எழவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். தனது அரசுக்கெதிராக பகிரங்கமாக வாக்களித்தவர்கள் மீது எடப்பாடியார் காட்டும் கருணையும், காருண்யமும் காந்தியடி களையே மிஞ்சுவதாக உள்ளது.
மறுபுறத்தில் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் எனக்கு கொறடா உத்தரவு எதுவும் வரவில்லை; அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு நான் அழைக்கப்படாததால் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார். அதாவதுஅவர் அப்போது அதிமுகவில் இருந்தது கொறடாவுக்கே தெரியவில்லை. அவர் உள்ளிட்ட 11 பேரின் முகவரிதெரியாததால் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படாமல் விடுபட்டிருக்கலாம். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 பேருக்கும் சேர்த்து 134 எம்எல்ஏக்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது கவனித்தக்கது.
தமது அரசுக்கெதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களும் அதிமுக கட்சியினராகத்தான் சட்டசபையில் செயல்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடிதத்தில் கூறியுள்ளார். ஒரு கட்சியைச் சேர்ந்தவர் அந்தக் கட்சி நடத்தும் அரசுக்கெதிராக வாக்களித்தது ஏன்? இது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வராதா? என்ற கேள்விக்கு சபாநாயகர் தனபால் இன்றும் ஆழமாக ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 90 நாளாகியும் இந்தக் கேள்விக்கு விடை காண முடியாததால்தான் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
கூவத்தூர் என்று ஒரு ஊர் இருப்பதும், அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டிருந்ததும் இவர்களுக்கு இப்போது நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் ஆலோசகர் குருமூர்த்தியின் யோசனைப்படி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடற்கரையில் அம்மாவின் சமாதி முன்னே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டதும், அதன் விளைவாக தர்ம யுத்தத்தை அறிவித்ததும், தமிழக மக்கள் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல.
இதில் வேடிக்கை என்னவென்றால், பாஜகவின் ஏற்பாட்டின்படி தினகரனை கழற்றி விட்டு இரு அணிகளும் மீண்டும் இணைந்து, பன்னீர்செல்வம் மனதில் இருந்த பாரம் இறங்கி, இரு தலைவர்களும் கைகோர்த்து கண்ணீர் மல்கி துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு, தன்னைச் சந்தித்து இந்த ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தினகரன் போட்டுடைத்தார். தினகரனை சந்தித்ததை ஓபிஎஸ் கூட மறுக்கவில்லை. இப்படியே போனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக உடையவே இல்லை, இரட்டை இலை கிழியவே இல்லை, ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்கவே இல்லை, தர்மயுத்தம் கண்ணீர் கோலம் என்பதெல்லாம் சினிமாவில் வரும் கனவுக் காட்சிகள்போன்றதுதான், மாயத் தோற்றம்தான் என்று கூட எடப்பாடி யாரும், ஓபிஎஸ்சும் கூட்டாக கடிதம் எழுதுவார்கள். அதை ஏற்று சபாநாயகரும், தகுதி நீக்கம் செய்யும் கேள்வியே எழவில்லை; எனவே பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று பஞ்சாயத்தை முடித்து வைப்பார். தில்லியிலிருந்து நீளும் சூத்திரக் கயிறு விரும்பும் வரை பம்பரங்களுக்கு கவலையில்லை. இந்த கலை அர்த்த சாஸ்திரத்தில் கூட இல்லாத ஒரு அத்தியாயமாகும்.
===மதுக்கூர் இராமலிங்கம்===