இந்திய தேசத்தால் குறிப்பாக தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்படும் இலங்கையில் ஆகஸ்ட் 5 ல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது கடந்த வருடம் நவம்பர் 16 ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாக வேண்டும் என பெரும்பான்மை சிங்கள மக்கள் எண்ணம் கொண்டு வாக்களித்தார்களோ அதே மனநிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்துடன் தற்போதும் வாக்களித்துள்ளதை தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
விகிதாச்சார தேர்தல் முறையைக் கொண்ட இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் 46 அரசியல் கட்சிகளைச்சேர்ந்த 3652 வேட்பாளர்களும் 313 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 3800 வேட்பாளர்களும் போட்டியிட்டதில் 196 பேர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப மேலும் 29 பேர் தெரிவாக , இறுதியில் 225 பேர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது மக்கள் தொகையில் 24.06 சதவீதமாக இருக்கும் சிறுபான்மையினர் ஆட்சியாளர்களை தீர்மானித்த சக்தியாக இருந்த நிலை 2019 ஜனாதிபதி தேர்தல், 2020 நாடாளுமன்ற தேர்தல் இரண்டிலும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 74 சதவீதமாக இருக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் இரு பெரும் கட்சிகளிடையே சம அளவில் பிரிபடலாம் என்ற எதிர்பார்க்கைக்கு மாறாக பௌத்த பேரின வாத கொள்கைகளை முன் நிறுத்திய ராஜபக்சே அணிக்கு பெருமளவு வாக்குகள் சென்றுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தேர்தல் முடிவுகள்
75 சதவீதமான வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வாக்களித்த தேர்தலில் ராஜபக்சே கூட்டணியினர் 59.09 சதவீத வாக்குகளுடன் 145 இடங்களைப் பெற , சஜித் கூட்டணியினர் 23.90 சத வாக்குகளுடன் 54 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே அங்கம் வகித்த இலங்கை சுதந்திர கூட்டணி 42.83 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் இம்முறை “ ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா” என்ற பெயரில் போட்டியிட்டு கடந்த முறையை விட 16 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தோழமை கட்சிகளின் ஆதரவையும் இணைத்து மிகச் சுலபமாக 2/3 பெரும்பான்மை இடத்தையும் அடைந்துள்ளது. கடந்த முறை பிரதமராகவும் அதற்கு முன் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த ரணில் விக்ரமசிங்க தலைமை வகித்த ஐக்கிய தேசியக் கட்சி நேரடி தேர்தலில் போட்டியிட்டு 2.15 % வாக்குகளை பெற்று ஒரு இடத்தில்கூட ( தேசியப்பட்டியலில் ஒரு இடம் ) வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த கால பிரதமராக இருந்த ரணிலின் மோசமான ஆட்சி நிர்வாகமே அதன் தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகிறது. நல்லாட்சிக்கான அரசாங்கமானது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களின் கோபத்துக்கு ஆளானது. அதனை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்த தவறவில்லை. இதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சகாப்தம் முடிவிற்கு வந்து விட்டதாகவும் விமர்சிக்கப்படுகிறது.சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் மற்றுமொரு கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (J.V.P. ) கணிசமான இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 உறுப்பினர்களை மட்டுமே பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது கடந்த நாடாளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்டிருந்தது.
நீண்டகாலம் இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் இருந்து வந்த பண்டாரநாயக்க குடும்பத்தால் உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்தமுறை 95 இடங்களை பெற்றிருந்தது. இக் கட்சியின் தற்போதைய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட , அவருடன் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அக்கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இம்முறை பௌத்த பிக்குகள் நேரடியாக “ எங்கள் மக்கள் சக்தி “ என்ற கட்சி பெயரில் போட்டியிட்டு நேரடி தேர்வில் வெற்றி பெறாது தேசிய அளவில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 1 இடத்தை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.
இவை தவிர தமிழ் முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு 20 இடங்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக வட , கிழக்கு இலங்கையில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த முறை 16 இடங்களையும் அதற்கு முன் 2005 ல் 22 இடங்களையும் பெற்றிருந்த நிலையில் இம்முறை 10 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த முறை 4.62 சதவீத வாக்குகளைப் பெற்ற இக் கூட்டமைப்பு இம்முறை 2.82 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம் ராஜபக்சே அணி ஆதரவு பெற்ற ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றுள்ளது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை இக் கட்சி 1 இடத்தை மட்டுமே பெற்றிருந்தமை கவனிக்கத் தக்கதாகும். இதேபோன்று விடுதலை போராட்டத்துடன் தொடர்பில் இருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற அமைப்பு சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்றுள்ளமையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
மேலும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய முன்னணி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பல சிறு கட்சிகளும் போட்டியிட்டு தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு இத்தேர்தலில் 7 கட்சிகள் இரண்டுக்கு குறைவான இடங்களை வென்று முதற் தடவையாக நாடாளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்கதாகும். 26 க்கு மேற்பட்ட கட்சிகள் 0.27 சதவிதத்துக்கு குறைவான வாக்குகளைப் பெற்று படு தோல்வி அடைந்துள்ளன. கடந்த தேர்தலில் இரண்டு பிரதான கூட்டணிகளை தவிர்த்து டிஎன்.ஏ, ஜேவி.வி உட்பட 4 கட்சிகளே நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தன.
பௌத்த மக்களின் வாக்குகள்.
இரண்டு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் சிறுபான்மை தமிழ் மொழி பேசும் மக்களும் கலந்து கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் 7452 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் மகிந்த ராஜபக்சே அணிக்கும் சஜித் பிரேமதாச அணிக்கும் இடையே மட்டுமே நேரடி போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் ராஜபக்சே அணி 145 இடங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சஜித் அணி 54 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்விக்கு உள்ளாகியது.
மக்களின் வாக்களிப்பு முறையை ஆராய்ந்தால் இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் சிங்கள மக்கள் அதி பெரும்பான்மையினராக வசிக்கும் 16 தேர்தல் மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் ராஜபக்சே அணி மிகப்பெரும் வாக்குகளை பெற்றுள்ளதை காணலாம். அம்பாந்தொட்ட தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியாக 75 சதவீத வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில் குறைந்தளவாக 32 சதவீத வாக்குகளையும் இவ் அணி பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் போட்டி இடாத இவ் அணி தமிழ் பேசுவோர் அதிகம் வசிக்கும் வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் குறைந்தளவு வாக்குகளை பெற்றுள்ளது.
அதேநேரம் மக்கள் சக்தியின் சஜித் அணியால் எந்த ஒரு மாவட்டத்திலும் அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 32.73 சத வாக்குகளையும் அம்பந்தொட்டையில் ஆகக் குறைவாக 13.84 சத வாக்குகளையும் பெற்று பெரும் பின்னடைவை சந்திக்கலாயிற்று. இதற்கு முந்தய வருடம் இதே அணி ஜனாதிபதி தேர்தலில் தேசிய அளவில் 40 சதவீத வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணம் , வன்னி, மட்டக்களப்பு,திருகோணமலை, அம்பாறை , நுவரெலியா ஆகிய 6 மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சேவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்த சஜித் அணி இத்தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது.
ஏனைய சிங்கள கட்சிகளின் செயல்பாடு
மகிந்த ,சஜித் என்ற இரு அணிகளின் பலமான தேர்தல் போட்டிக்கு மத்தியில் இடதுசாரி அமைப்புகள் உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட போதும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தவிர வேறு எந்த ஒரு கட்சியும் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை. மக்கள் விடுதலை முன்னணி தென் இலங்கையில் 2 இடங்களையும் தேசிய அளவில் 3.84 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து 1965 இல் ரோஹன விஜய வீர என்பவரால் இடதுசாரி அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் பேரினவாத அழுத்தங்களுக்கு உட்பட்டு இன்று ஒரு அரை குறை இடதுசாரி அமைப்பாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு சமூக இணக்கத்துடன் வளமான இலங்கையை கட்டியெழுப்ப போராடி வருகிறது. சிங்கள இளைஞர்களின் ஆதரவை பெற்றிருந்த போதும் பௌத்த பேரினவாத மக்களின் ஆதரவை பெறுவதில் தோல்வி அடைந்தே வருகிறது.
இலங்கை அரசியலில் பௌத்த குருமார்களின் அழுத்தம் அதிகரித்து வருவதை தேர்தல் காலங்களில் சற்று அதிகமாகவே காண முடிகிறது. கட்சிகளின் மேடைகளில் காணப்பட்ட இவர்கள் நேரடி அரசியலிலும் இறங்கத்தொடங்கி அதற்கு சிங்கள மக்களும் ஒரளவு ஆதரவை தெரிவித்து வருகின்றதை இன்றைய தேர்தல் நிரூபண மாக்கியிருக்கிறது. “எங்கள் மக்கள் சக்தி” என்ற கட்சி ஊடாக தேசியப் பட்டியல் மூலம் தீவிர இனவாதம் பேசும் ஒரு பௌத்த பிக்கு நாடாளுமன்றம் செல்லும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மத குருவான ஒருவரின் அரசியல் பிரவேசம் என்பது மத வாத அரசியலை நேரடியாக ஊக்குவிக்கும் செயல் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிறுபான்மையினரின் தேர்தல் பங்களிப்பு.
விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த கால கட்டங்களை தவிர்த்து பெருமளவில் எல்லா காலங்களிலும் வட கிழக்கு தமிழ் பேசும் மக்கள் இலங்கை தேர்தல்களில் தம் பங்களிப்பை செய்து வந்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வட கிழக்கு வாக்காள பெருமக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக 68 சதவீதம் முதல் 76 சதவீதம் வரையிலான பகுதியினர் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையினரதும் சிறுபான்மையினரதும் எதிர்பார்க்கைகள் வெவ்வேறானவை. சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையில் ராஜபக்சே குடும்பத்தினரின் கடந்த கால செயல் பாடுகளின் மீது பெரும் அச்சமும் அதிருப்தியும் மேலோங்கி இருப்பதால் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்து வந்துள்ளனர். அதனை இத் தேர்தலிலும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ், முஸ்லீம் வேட்பாளர்களை அவர்கள் ஆதரித்ததுடன் தனிக்கட்சியாக போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிவனேசதுறை சந்திரகாந்தன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் ராமநாதன் , வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என சிலரை குறிப்பிடலாம். இவர்களுடன் கஜேந்திரன் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 இடங்களை பெற்றுள்ளது.
இதுவரை வடகிழக்கில் பிரதான தமிழ் கட்சியாக இருந்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்தபடி தேர்தலில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்தமுறை 16 இடங்களை பெற்றிருந்த இக் கூட்டணி இம்முறை 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் விலகி தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டதும், இக் கூட்டமைப்பின் கடந்த கால செயல்பாடுகளில் மக்கள் பெருமளவு அதிருப்தி கொண்டிருந்தமையும் தோல்விக்கு காரணமாயின. 29 ஆசனங்கள் உள்ள வட கிழக்கில், யாழில் 3 ம் வன்னியில் 3 ம் திருகோணமலையில் 1 ம் மட்டக்களப்பில் 2 ம் என இவர்களின் செல்வாக்கு கடுமையான சரிவை எட்டியுள்ளது. இதே போன்று அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் வசித்த போதும் தமிழ் கூட்டமைப்பினால் 6.54 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அங்கு தமிழருக்கான பிரதிநிதித்துவத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தனி ஒரு கட்சி இல்லை. தமிழரசு கட்சி மற்றும் கடந்த கால போராளி குழுக்களையும் ( EPRLF, PLOT, TELO) இணைத்து ஏற்படுத்திக்கொண்ட ஒரு அமைப்பாகும். அதனால் ஏற்படும் கருத்து முரண்பாட்டால் எதிர்காலத்தில் மேலும் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. தமிழ் பகுதிகளில் கொள்கை கோட்பாடின்றி தனிப்பட்ட தலைமைத்துவ எண்ணத்துடன் பல கட்சிகளாக பிரிந்து காணப்படுகின்றனர். இவர்களால் முழுமையாக தேசிய நீரோட்டத்தில் கலக்கமுடியவில்லை மறுபுறம் ஒன்று பட்டு நின்று அரசியல் அதிகாரத்தையும் பெற முடியவில்லை. இதனால் மகிந்த அரசின் மீதான இவர்களின் அழுத்தம் குறைவதுடன் தமிழ் மக்களின் நலனும் கேள்விக்குறியாகிவிடும். எதிர் காலத்தில்தமிழ் தேசிய உணர்வை மழுங்கச் செய்வதில் ஆளும் தரப்பு முனைப்புக் காட்டும். ஏற்கனவே கிழக்கு இலங்கையில் சிங்கள குடியேற்றத்தின் வழியாக தமிழர்களின் வலிமை குறைக்கப்பட்டு விட்டதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவம்
மக்கள் தொகையில் 24.6 சதவீதம் இருக்கும் சிறுபான்மையினருக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் 100 சதவீதம் என இல்லாவிட்டாலும் பெருமளவு கிடைத்திருப்பதாகவே தெரிகிறது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இதில் நேரடித் தேர்வுடன் தேசியப்பட்டியலையும் சேர்த்து இலங்கைத்தமிழர் பிரதிநிதிகள் 18. முஸ்லிம் பிரதிநிதிகள் 20. மலையக தமிழர்களுக்கான பிரதிநிதிகள் 9 என மொத்தம் 47 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் மக்கள் தொகையில் 11.4 சதவீதம் இருந்த போதும் அதற்கேற்ற பிரதிநிதித்துவத்தை அவர்களால் அடைய முடியவில்லை. வட கிழக்கில் மட்டுமே பிரதிநிதித்துவம் பெறக் கூடியதாக இருப்பதும் பல கட்சிகளாக போட்டியிட்டு வாக்குகள் சிதறுண்டதும் பிரதிநிதிகள் குறைவுக்கு காரணமாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கிழக்கில் செறிவாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகவும் இருக்கின்ற காரணத்தால் வட கிழக்கில் தனி கட்சிகளாகவும் மற்ற பகுதியில் தேசிய கட்சிகளிலும் போட்டி இட்டு அதிக அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். இவர்கள் மக்கள் தொகையில் 9.2 சதவீதமாக இருந்தபோதும் 20 பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளனர். மக்கள் தொகையில் 4.2 சதவீதமாக இருக்கும் மலையக இந்தியத் தமிழர் தங்களின் புத்திசாலித்தனமான வாக்களிப்பின் வாயிலாக கொழும்பு நகரில் 1, நுவரெலியாவில் 5, பதுளை 2, கண்டி 1 என 9 பிரதிநிதிகளை பெற்றுள்ளனர். இவற்றில் சஜித்தை ஆதரித்த மலையக முற்போக்கு கூட்டணி 7 இடங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தேர்தலில் பௌத்த பேரின வாதம்
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை அரசியல் அதிகாரத்தைப் பெற வலது சாரி கட்சிகள் மதத்தை ஆயுதமாக பயன் படுத்தி வந்துள்ளன.1956 இல் சிங்களம் மட்டுமே சட்டம் கொண்டுவரப்பட்டு மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்த ஆட்சியாளர்கள் காலப்போக்கில் மத இன உணர்வை தூண்டும் தேர்தல் அரசியலை நடத்த தொடங்கி இருப்பதைக் காணலாம்.
2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய முன் வைத்த பௌத்த பேரினவாத பிரச்சாரம் அவரை ஜனாதிபதியாக்கியது. எனவே அதே வழியில் மகிந்த ராஜபக்சேவும் பௌத்த இன வாதத்தை முன் நிறுத்தி வெற்றி அடைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன. தமிழ் முஸ்லிம் மக்கள் தனக்கு வாக்களிக்க வில்லை என கோத்தபய பகிரங்கமாக கூறியதை நினைவு படுத்திய மகிந்த பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் பாதுகாவலன் தான் மட்டுமே என்ற பிரச்சாரம் , தேசத்தை தீவிர வாதிகளிடமிருந்து பாதுகாத்தேன் என்ற அறைகூவல் சிங்கள மக்களை கவரலாயிற்று. பௌத்த குருமார்கள் புடை சூழ பிரச்சாரத்தை நடத்தினார். தமிழ் முஸ்லீம் மக்களின் உரிமை சார்ந்து எந்த வித உத்தரவாதத்தையும் அவர் வழங்கவில்லை. தேவாலய குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்எஸ் தீவிர வாதிகளே காரணம் என பெரும்பான்மையினரை நம்பவைத்து சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தையும் உருவாக்கி தேர்தல் அறுவடையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இவ்வாறு சிங்கள பெரும்பான்மை மக்கள் பெருவாரியாக வசிக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ராஜபக்சே அணி மிகப் பெரும் வெற்றியை பெறலாயிற்று. கொரோனா தொற்று இருந்த போதும் முகக் கவசம் அணிந்து பொது விடுமுறை இல்லாத நிலையிலும் 75.89 சதவீத மக்கள் வாக்களித்து மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளனர். சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்த கோத்தபய அனுராதபுரம் என்ற பௌத்தர்களின் வரலாற்று நினைவிடத்தில் பதவியேற்றார். அவர் வழியில் மகிந்தவும் களனி ரஜ மகா விகாரை எனும் பௌத்த ஆலயத்தில் பிரதமராக பதவி ஏற்கலானார். அடுத்து அமைச்சர்களுக்கான பதவி பிரமாணம் புத்தரின் புனிதப் பல் இருக்கும் கண்டி தலதா மாளிகையில் நடந்தேறியிருக்கிறது. இவை அனைத்தும் இலங்கை அரசாங்கமானது குறிப்பிட்ட மதத்தை முன்னிலைப்படுத்திச் செல்வதையே காட்டுகிறது. இந்தியாவில் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆர்எஸ்எஸ் கொள்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைப் போன்று புதிதாக பௌத்த கொள்கை திட்டமொன்று செயல் வடிவம் பெற்று விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்களிடம் காணப்படுகிறது.
சிறுபான்மையினரின் நலன்
தோழமை கட்சிகளின் ஆதரவுடன் 2/3 என்ற அசுர பலத்தை பெற்றுள்ள மகிந்த ராஜபக்சே ஆட்சியில் சிறுபான்மை நலன் முக்கியத்துவம் பெற வாய்ப்பில்லை. தன்னை பெருமளவு ஆதரித்த சிங்கள பௌத்தர்களை திருப்தி படுத்தவே முயல்வார். தமிழர்களைப் பொறுத்த வரையில் இதுவரை ஏக பிரதிநிதியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பல வீனமாகி இருக்கிறது. பல கட்சிகள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த முன் வந்துள்ளன. பலவீனமான இந் நிலையில் அரசிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாது. எனினும் இலங்கையின் நீடித்த அமைதிக்கு இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முன் வர வேண்டும். மகிந்த ஆட்சியின் இறுதிப்பகுதியில் இஸ்லாமிய அமைச்சர்கள் இடம் பெற்றிருக்க வில்லை. அதே நேரம் தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல் தேசியப் பட்டியலிலும் இஸ்லாமியர்களுக்கு இடமளித்துள்ள பிரதமர் மகிந்த எதிர்காலத்தில் என்னவிதமான நிலைப்பாட்டை எடுப்பார் என தெரியவில்லை. தேசியப்பட்டியலில் இஸ்லாமியர்களை உள்வாங்கிய மகிந்த , அமைச்சரவையில் அவர்களுக்கு ஒரு இடம் மட்டுமே அளித்து சிறுபான்மை மீதான வெறுப்பு அரசியலை அவர் இப்பொழுதும் கைவிடாது அதனை ஒரு அரசியல் ஆயுதமாக தொடர்ந்தும் பயன் படுத்தி வருவதையே காட்டுகிறது.
மலையக மக்களைப் பொறுத்த வரையில் எப்பொழுதும் அவர்கள் முழுமையாக தேசிய கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். தம் தனித்துவம் பாதிக்காது தேசிய நீரோடையில் இணைந்து சிங்கள மக்களுடன் இணக்கமாக வாழவே விரும்புகின்றனர்.கொரோனா காலத்திலும் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, வீடமைப்பு, நில உரிமை , கல்வி, வேலை வாய்ப்பு என அடிப்படை தேவைகளையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இன வாதப் பக்கம் அவர்கள் சாய்ந்ததாகவே இல்லை. எனவே புதிய ஆட்சியில் அம்மக்களின் ஆகக் குறைந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். அமைச்சரவையில் மலையகத்தை சார்ந்தவருக்கு இடமளித்தமை வரவேற்கத் தக்கதாகும். அதே வேளை மலையக மக்களின் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்ற மகிந்த முன்வர வேண்டும்.
அச்சுறுத்தும் அம்சங்கள்
தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த தேசிய பாதுகாப்பை உறுதி செய்திடவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியை ஆரம்பிக்கவும் அரசியல் அமைப்பை திருத்த மக்களின் ஆதரவை கோரியிருந்தார். எனவே தனது 2/3 பெரும்பான்மையுடன் அரசியல் அமைப்பை திருத்த அவர் முற்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. அறுதிப் பெரும்பான்மையை பெற்ற பஜக உடனடியாக அரசியல் சட்ட திருத்தங்களை மேற்கொண்டது. அதனைப் போன்று ராஜபக்சேவும் உடனடியாக அரசியல் அமைப்புச் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சரவையை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது அனைத்து மக்களுக்குமானதாக இல்லாமல் பௌத்த பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதாக இருக்கும் என சிறுபான்மை மக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
1. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது நிறைவேற்றிய 19 வது அரசியல் சட்ட திருத்தம் மாற்றப்படலாம்.இச்சட்டம் ஜனாதிபதியின் அதிகார வரம்பு பற்றியதாகும். இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்ற திருத்தத்தால் மகிந்த போட்டியிடும் உரிமையை இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே தனது குடும்ப அரசியலுக்கு சாதகமாக புதிய திருத்தத்தை கொண்டு வர வாய்ப்பு உண்டு.
2. 13 வது அரசியல் சட்ட திருத்தம் பற்றியதாகும். இது மாகாண சபைகளை உருவாக்குவதும் அதன் அதிகாரங்களை அதிகரிப்பதுமாகும். இதனை அமல் நடத்த வேண்டும் என இந்தியாவும் இலங்கை தமிழ் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. ஆனால் அதனை நிறை வேற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தயாரில்லை. இச் சரத்தை எதிர்க்கும் ராஜபக்சே குடும்பம் இதனை முழுமையாக நீக்க முயலும் என எதிர்பார்க்கலாம்.
3. 1978 அரசியல் அமைப்புப் படி கொண்டுவரப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நீக்கப்படலாம். தற்போது இம்முறையால் மலையகம் உட்பட சிறுபான்மையினர் உரிய பிரதிநிதித்துவத்தை பெற்று வருகின்றனர். இவர்களின் அரசியல் அழுத்தத்தை குறைக்க வேண்டுமென ராஜபக்சே குடும்பம் திட்டமிடுவதால் இதனை மாற்ற முயலக்கூடும்.
4. மோடியைப் போன்று மகிந்தவும் தாங்கள் 20 வருடம் ஆட்சியில் தொடர வேண்டுமென பிரச்சாரத்தில் கூறி வந்துள்ளார் .எனவே அதற்கு ஏற்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது அவரது திட்டமாகும். இதற்கான ஏற்பாட்டை முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படுமென மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
5. ராஜபக்சே அணி வெற்றி பெற்றதும் செய்தியாளர் சந்திப்பை நடத்திய முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தங்களை எந்த நாடும் கட்டுப்படுத்த முடியாது என கூறியதை இந்தியா கவனமாக பரிசீலிக்க வேண்டும். இலங்கை மீதான இந்தியாவின் பிடி மிகவும் தளர்ந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது இலங்கை சிறுபான்மையினரின் பாதுகாப்பை கேள்விக்குரியதாக்கும்.இந்தியாவில் பாஜக இந்துத்துவ கொள்கையை அமல் நடத்த முயல்வதைப் போன்றே
இலங்கையில் பௌத்த பேரின வாதத்தை நிலை நிறுத்த மகிந்த திட்டமிட்டு செயல்பட விளைந்துள்ளார். அதன் ஒரு அம்சமே கிழக்கிலங்கையில் புராதன தொல்லியல் இடங்களை கண்டறிந்து விகாரைகளை நிறுவுவதாகும். பலமான தொரு எதிர்க்கட்சி இல்லாததும் அவருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. பௌத்த சிங்களவர்கள் முழுமையான ஆதரவை தேர்தல் ஊடாக அளித்திருப்பதால் அவர்களை திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. மறு புறம் சிறுபான்மையினரின் அரசியல் பலமும் பலவீன மாகியுள்ளது. பலமானதொரு பொருளாதார வளர்ச்சியும் இலங்கையில் இல்லை. இந்நிலையில் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இன மத அரசியலை முன்னெடுக்காது அனைத்து இன மக்களையும் அரவணைத்து வளமான இலங்கையை கட்டி அமைக்க உறுதி கொள்ள வேண்டும். பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கூறுவதைப் போன்று இலங்கை மக்களுக்கு தேவைப்படுவது மனிதாபிமான அரசே அன்றி பலமான அரசல்ல.
கட்டுரையாளர் : முன்னாள் இலங்கை பேராதனை, பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்