உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவித்து, வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் அசான் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
சவுத்தாம்ப்டனில் வங்காள தேசம்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், வங்காள தேசம் அணி சிறப்பாக விளையாடி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வங்காள தேச முன்னாள் கேப்டனான ஷாகிப் அல் அசான் ஆல்ரவுண்டர் பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 476 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் 2 சதமும், 3 அரை சதமும் அடங்கும். சராசரி 95.20 அதிகபட்சமாக 124 ரன் குவித்துள்ளார். அத்துடன் 10 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.
இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் 476 எடுத்து 10 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் அசான் படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியில் 1000 ரன்னை கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற முத்திரையையும் பதித்தார். உலகக்கோப்பையில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் வங்காள தேச வீரர் ஷாகிப் அல் அசான் என்பது குறிப்பிடத்தக்கது.