விருதுநகர், மார்ச்.30- கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, ஆட்டோ, சுமைப்பணி, கட்டுமானம், தையல் மற்றும் முறைசாரா தொழிலில் ஈடுபட்டு வந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து வீட்டில் உள்ளனர். எனவே, இத்தொழிலாளர்களுக்கு அரசு மற்றும் ஆலை நிர்வாகங்கள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி மற்றும் மாவட்ட செயலாளர் பி.என்.தேவா ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியதாவது : கொரோனா வைரஸ் என்ற கோவிட் - 19 கிருமி தொற்றால் உலகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 33,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் மேலும் பரவாமல் இருக்க மத்தியஅரசு, மார்ச்., 22-ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் சமூக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. மேலும், முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் பாதிப்புக்கும், வாழ்க்கை நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் முறைசாரா தொழில்களில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ 10,000/- வீதம் நிவாரண தொகையும் மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் சிஐடியு கேட்டுக்கொள்கிறது. பட்டாசு: விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலான 1070 களுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைககள் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டுள்ளது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து முடங்கி கிடக்கின்றனர். இத்தொழிலாளர்களுக்கு மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை. மேலும் பட்டாசு - தீப்பெட்டி தனிவட்டாட்சியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கண்ட நிர்வாகங்கள் அங்கு பணிசெய்த தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் . இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. இத்தொ ழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் மூடப்பட்ட காலத்திற்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் முதல் வாரம் மாவட்ட முழுவதும் பிரதான மாரியம்மன் திருவிழா காலம். இக்காலத்தில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், ஆலைகள் மூடப்பட்டதால் இதுவரை போனஸ் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆலை நிர்வாகம் உடனே போனஸ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கட்டுமானம், ஆட்டோ மற்றும் சாலையோர கடை வைத்திருப்போர்களுக்கு நிவாரணமாக ரூ 1,000/- அறிவித்துள்ளது. இப்பணம் எந்த தொழிலாளிக்கும் இதுவரை கிடைக்வில்லை. அறிவித்த தொகையோ மிக, மிக குறைவு. எனவே, ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ 10,000/- நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொழில்கள் தவிர மாவட்டத்தில் 10,000 சுமை தூக்கும் தொழிலாளர்கள், 25,000 க்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களும் 15,000 பேர் தையல் தொழிலிலும், 20,000 க்கும் மேற்பட்டோர் பஞ்சாலை மற்றும் வீடு சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை. எனவே அனைவருக்கும் முறையான நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊரடங்கு மூலமும், சமூக விலகல் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சமூக விலகல் நடவடிக்கை சரியானதுதான். ஆனால் வேலையின்றி ஊதியம் இல்லாமல் முடங்கி கிடக்கும் தொழிலாளிக்கு அரசும், ஆலை நிர்வாகமும் உரிய ஊதியமும் நிவாரணமும் வழங்கவில்லை என்றால் சமூக விலகல் என்பது கடும் சவாலாக மாறும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.