கொல்கத்தா:
மூன்று ஆண்டுகளாகத் திரிணாமுல் கட்சிக் குண்டர்கள் ஆக்கிரமித்துத் தங்கள்வசம் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டலக் குழு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் மீட்டெடுத்தனர். அது, பங்குரா மாவட்டத்தில் உள்ள ரஜத்பூர் மண்டல அலுவலகம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கௌதம் கோஷ் தலைமையில் அலுவலகம் திரும்ப மீட்கப்பட்டது. புதிதாகச் செங்கொடி ஏற்றிவைக்கப்பட்டு அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் கும்பல் ஒன்று வன்முறைத் தாக்குதல் நடத்தி இந்த அலுவலகத்தை ஆக்கிரமித்தது. போலீசுக்கு புகார்கள் அளித்தும் பலனில்லை. புகாரைக் கவனிக்கவே இல்லை.பங்குரா மாவட்டத்தில் திரிணாமுல் கும்பல் ஆக்கிரமித்திருந்த குக்குட்டியா, சத்தூர் ஆகிய லோக்கல் கமிட்டி அலுவலகங்களும் மற்றும் ஏராளமான கிளை அலுவலகங்களும் மக்களின் ஆதரவுடன் மீட்கப்பட்டன. பங்குரா மாவட்டத்தை அடக்கியாண்ட திரிணாமுல் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரும் தோல்வியடைந்தது. பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை தற்போது திரிணாமுல் ஆதரிக்கிறது என்ற பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் ராமச்சந்திர தோம் நிராகரித்தார். தற்போது திரிணாமுல் கட்சி ஆபத்தான நிலையில் இருப்பதைத் தொடர்ந்து அந்தக் கட்சி தனது வன்முறையிலிருந்து பின்வாங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.