கேள்வி : நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நமது நாட்டில் – குறிப்பாக மேற்கு வங்கத்தில் – எவையெல்லாம் மிக முக்கியமான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன?
பதில் : சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களிலேயே மிக முக்கியமானது. தற்போதைய தேர்தல். நமது அரசியல் சாசனத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சோசலிச’,‘மதச்சார்பற்ற’, ‘ஜனநாயக’ மற்றும் ‘குடியரசு’ ஆகிய அனைத்து அம்சங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மேலும், உலகம் முழு வதும் வலதுசாரி சக்திகளின் செல்வாக்கு அதிகரித்து வரும் தருணத்திலும், இடதுசாரி, மதச் சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் குரல்வளையை நெரித்திட மதவாத, பிரிவினைவாத சக்திகள் முயன்று வரும் நேரத்திலும் இத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு மதவாதத்தை வளர்த்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம்.
பாஜகவிற்கும், திரிணாமுல்லுக்கும் பரஸ்பரம் ஒருவருக்கு மற்றொருவர் தேவையாக உள்ளனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வளர்த்து வருகின்றனர். முதலில் மம்தாவிற்கு புகழாரம் சூட்டியது ஆர்எஸ்எஸ் அமைப்பாகும். ஆர்எஸ்எஸ் ஆட்களை தேச பக்தர்கள் என மம்தா அழைத்தார். திரிணாமுல் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் மிக ஆழ மான தொடர்பு உள்ளது. தற்போதைய தேர்தல்களில் செயல்பட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கமிட்டிகளில் இடம்பெற்றுள்ள முக்கியமான நபர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் உள்ள தொடர்பு குறித்து சமீபத்தில் எங்களது கட்சி இதழ் ‘கணசக்தி’ கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் என்பது பாஜக மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் இடையேயான போட்டியாக பார்க்கப்பட்டு வருகிறதே…
இத்தகையதொரு தோற்றம் உருவாக்கப் பட்டு ஊடகத்தில் ஒரு பிரிவினரால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் முழுமையாக களத்தில் இருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றோம். மேற்கு வங்கத்தில் உள்ள இடதுசாரி கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டு பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற பேரணி எங்களது ஆதரவு தளத்தை பறைசாற்றுவதாக இருந்தது. பாஜக அரசின் அபாயங்களை வேறெந்த கட்சியும் உணர்ந்திடுவ தற்கு வெகுகாலம் முன்னரே, அவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்; திரிணாமுல் மற்றும் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற அறைகூவலை நாங்கள் விடுத்தோம். பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் இயல்பான கூட்டாளிகள் ஆவர்.
பாஜகவிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்ததை நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?
இது அதற்கும் மேற்பட்டதாகும். பாஜகவைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் இவ்வளவு உயர்வாக பேசி வந்தாலும் கூட, கிரேக்க வரலாற்றில் டிராய் நகரைக் கைப்பற்ற உருவாக்கப்பட்ட மரக்குதிரையாகவே திரிணாமுல் காங்கி ரஸ் இருந்து வருகிறது. தேர்தல்களுக்குப் பிறகு பாஜகவோடு இணைந்திட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயங்காது. பாஜகவிற்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பது, அரசில் இடம்பெறுவது அல்லது பாஜகவின் ஆதரவை கோருவது என அமைத்து வாய்ப்புகளையும் திரிணாமுல் வெளிப்படுத்தியுள்ளது.
சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல் மற்றும் நாரதா ஊழல் ஒளிப்பதிவுகள் ஆகியன போது மான அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளால் முன்னிறுத்தப்படவில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த ஊழல்களைப் பற்றியெல்லாம் நாங்கள் மக்களிடையே முன்னிறுத்தி வருகின்றோம். ஆனால், சாரதா மற்றும் நாரதா ஊழல்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தேர்தலுக்குப் பின்னர் உரிய தண்டனை அளிக்கப் படும் என பாஜக கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.நாடாளுமன்றத்தின் நன்னெறி குழு கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட கூடவில்லை. அக்குழு ஒருமுறையேனும் கூடியிருந்தால், பணத்தைப் பெற்றதாக ஒளிப்பதிவில் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். எவ்வித தங்குதடையுமின்றி மிகச் சுலபமாக நடவடிக்கை எடுப்பதற் கான நிலைமைகள் இருந்தபோதும் மத்திய அரசின் முகமைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு களாக செயலற்றுக் கிடந்தன. பிரிகேட் பரேடு மைதானத்தில் இடதுசாரிக் கட்சிகள் மாபெரும் பேரணி நடத்திய தினத்தன்று, கொல்கத்தாவின் காவல்துறை ஆணையரைக் கைது செய்ய அவர்கள் சென்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தனது அரசியல் பேரத்தை நடத்துவதற்கான கருவியாகவே இத்தகைய ஊழல்களை பாஜக பயன்படுத்துகிறது.
சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளதே…
2011ம் ஆண்டிலிருந்து மட்டுமல்ல, அதற்கு வெகுகாலம் முன்னரே மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கான எங்களது ஆதரவாளர்கள் படுகொலை செய்யப் பட்டனர். எங்களது தியாகிகளின் பட்டியலை ஆண்டுதோறும் நாங்கள் புதுப்பிக்க வேண்டியிருந்தது.
1600க்கும் மேற்பட்ட எங்களது கட்சிஅலுவலகங்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டன. வேறெந்த கட்சியாலும் இத்தனை காலத்திற்குஇத்தகைய தாக்குதல்களை எதிர்த்துப் போராடி யிருக்க இயலாது. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட ஆதரவாளர்களால் எங்களது ஆதரவு தளம் தற்போது வலுப்படுத்தப்பட்டிருப்பதாக இதை நாங்கள் பார்க்கிறோம்.
இடதுசாரி ஆதரவாளர்கள் தனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க தந்திரத்தோடு வாக்களிக்கப் படும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
இவ்வளவு துன்ப துயரங்களை எதிர்கொண்ட பின்னர், இடதுசாரி ஆதரவாளர்கள் எங்களோடு தொடர்ந்து நிற்பார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களது கட்சியைச் சார்ந்தவர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் அல்லது ஆதரவளிக்கிறார்கள் என்று ஏதே னும் தகவல்கள் கிடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாங்கள் அளிக்க இயலும். ஆனால், பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தங்களது கட்சியைச் சார்ந்தவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திரிணாமுல் காங்கிரசால் வாக்குறுதி அளிக்க இயலுமா?
நன்றி – ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், 16.5.19
- தமிழில் : ராகினி