விருதுநகர், மே 26-விருதுநகர் நகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆணைக்குட்டம்நீர்த் தேக்கம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஒண்டிப்புலி நீர்த்தேக்கம் ஆகியவை உள்ளது. ஆணைக்குட்டம் நீர்த் தேக்கப் பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீரும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லட்சம் லிட்டர்தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் விருதுநகரில் 5 முதல்12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது, ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போய் விட்டது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. அணையின் வெளிப்பகுதியில் 13 திறந்த வெளிகிணறுகள் உள்ளன. அதில் தண்ணீர் உள்ள கிணறுகளிலிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம், நாளொன்றுக்கு10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதேபோல், காரிசேரி நீர்த் தேக்கத்தில் உள்ள கிணறு மூலம் 3 லட்சம்லிட்டரும், சிவகாசி சாலையில் உள்ள ஆழ்துளைகிணறு மூலம் 4 முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீரும் நாள்தோறும்எடுக்கப்படுகிறது. அதேபோல் ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து 5 முதல் 7 லட்சம்லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் ஒண்டிப்புலி நீர்த்தேக்கமும் வறண்டு விடும் நிலை உள்ளது. அதேநேரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விருதுநகர் நகராட்சிக்கு ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும். ஆனால் சராசரியாக 20 லட்சம் லிட்டர் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.