tamilnadu

img

வெம்பக்கோட்டை: சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 3ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தங்க நாணயம், செப்புக்காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட  காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு,  பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள், நீல நிற கண்ணாடி மணி மற்றும் சுடுமண்ணால் ஆன பதக்கம், கூம்பு வடிவம் மற்றும் நீல் உருண்டை வடிவ சூது பவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் உள்ளிட்ட 3210 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
இதனை தொடர்ந்து, சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சிறிய அளவிலான சுடுமண் குடுவை, சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி, அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற சங்கு வளையல்கள் உள்ளிட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.