விழுப்புரம், ஏப். 11-விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.தண்டபாணி, விழுப்புரம் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,“ கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியால், நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று விட்டது. விவசாயிகளுக்கான உரம், இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை” என்றார்.நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குச் சென்றது. ஆனால், அந்த தீர்மானத்தை மதிக்காத, 8 கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்திய அந்த பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என்று டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், வீரமணி,திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயச் சந்திரன், மதிமுக துணைச் செயலர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.