tamilnadu

யானை பிடிக்க வெட்டிய குழியாக சாலை

கிருஷ்ணகிரி, டிச. 9- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையே 20 அடி குண்டும் குழியுமாய் பல இடங்களில் தார் காணப்படாத சாலையாக உள்ளது. அதை விட மோ(நா)சமாய் உள்ளது பிற சாலைகள்.  ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை சாலையிலிருந்து பிரியும் பாவக்கல் அனுமன்தீர்த்தம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி, கொட்டுகாரன் பட்டி பகுதியில் சாலையே இல்லை என்று சொல்லும்படியாக இரண்டடி பள்ளம் ஒருபுறமும், யானை பிடிக்க வெட்டிய குழி போல மிகப் பெரிய பள்ளம் மறுபுறமும் என, மேடு பள்ளங்களும் ஆங்காங்கே தார் தென்படுவதுமே சாலையாக உள்ளது. ஊர் மக்கள் பல முறை, பல ஆண்டுகளாக புகார் மனுக்கள் கொடுத்தும் பராமரிக்கப்படாத நிலையே நீடிக்கிக்கிறது.

அதே போல் தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப் பள்ளியில் 250 க்கும் மேற்பட்டவர்கள் படிக்கும் துவக்கப் பள்ளியில் வளாகச் சுற்றுச்சுவர் சுவர் இடிந்ததோடு பாதுகாப்பு இல்லாமல் அப்படியே உள்ளது. மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. உயர் நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். கட்டப்பட்ட கழிப்பறைகள் கதவுகள் உடைந்தும், இடிந்தும், செடிகொடிகள் வளர்ந்து காய்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. மாணவிகள் கடும் சிற மத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆசிரியர்களின் கழிப்பறை மட்டுமே பராமரிக்கப்படுகிறது என மாணவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து சிங்காரப்பேட்டை பகுதி மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் எத்திராஜ், நிர்வாகிகள் குப்பன், சபாபதி, ராஜா, ரத்தினம்மா வாலிபர் சங்க கிளைச் செயலாளர் தங்கபாலு தலைவர் வெங்கடாஜலபதி ஆகியோர் கூறியதாவது:- பாவக்கல் அனுமன் தீர்த்தம் சாலையை உடனடியாக சீர்படுத்த வேண்டும், மிட்டப் பள்ளி அரசு துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கழிப்பிடங்கள் புதிதாக கட்டவேண்டும், பழைய கழிப்பறை வளாகத்தை சீர்படுத்த வேண்டும், இடிந்து நிற்கும் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டவேண்டும் என வட்டாட்சியருக்கு வலியுறுத்தி உள்ளனர்.