உளுந்தூர்பேட்டை, மே 27-சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 10வது மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.எலவனாசூர் கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் என்.ஐயாக்கண்ணு சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கியும், துணைச் செயலாளர் கே.ஜெயமூர்த்தி வரவேற்றும் பேசினர். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் பி.சேகர் முன்மொழிந்தார். கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் டி.குமார் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர் வேலை அறிக்கையும், பொருளாளர் ஆர்.ராஜவேல் நிதிநிலை அறிக்கையும் முன்மொழிந்தனர்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.வீராசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜசேகர், பொருளாளர் கே.விஜய குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். ஆர்.பச்சையப்பன், எஸ்.தணிகாசலம், வி.மலர், கே.ஜெயந்தி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். ஏ.அய்யாத்துரை நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மாவட்டக் குழுவிற்கு தலைவராக கே.அண்ணாமலை, செயலாளராக எஸ்.சேகர், பொருளாளராக பச்சையப்பன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.
தீர்மானங்கள்
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், எங்கு விபத்து நடந்து கட்டுமான தொழிலாளி இறந்தாலும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இயற்கை மரண நிதியை ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், திருமண நிதியை 50 ஆயிரமாக நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், நலவாரிய நிதியை வேறு பணிகளுக்கு மடை மாற்றம் செய்யக் கூடாது என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.