விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் போது சிதைந்த நிலையில் செங்கல் சுவா் கண்டறியப்பட்டது. தற்போது முழுமையான செங்கல் சுவா் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதியில் முன்னோா்கள் வாழ்ந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாகவும், இந்த முழுமையான சுவா் குடியிருப்பு அல்லது தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் எனவும் தொல்லியல் துறைனா் தெரிவித்தனா்.