tamilnadu

img

முதல்வரின் 110 விதி அறிவிப்பினால் விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை ஏ.லாசர் கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை நோயிலிருந்து பாதுகாத்திடவும், முழு அடைப்பின் மூலம் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காகவும் ரூ.3780 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளார். அதை யார் யாருக்கு எப்படி தமிழக அரசு வழங்கப் போகிறது என்ற விபரத்தை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடு செய்து கொரோனாவில் ஏற்படும் கடுமையான நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்று முடிவு செய்ததில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடுகட்ட இந்த அரசு ஒதுக்கிய நிதி நிலைமையை எதிர்கொள்ளவோ பிரச்சனைகளை தீர்க்கவோ எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. பேசுவதை பெரிதாக பேசிவிட்டு, செய்வதை மிகக் குறைவாக செய்வது எந்த வகையிலும் பொருத்தமானதும் இல்லை; நியாயமானதும் இல்லை.

 தமிழக மக்கள் தொகையில் பாதியளவு கூட இல்லாத கேரள அரசு, அங்கே கொரோனாவை எதிர்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 7 கோடி மக்கள் இருக்கின்றனர். இதற்கு தமிழக அரசு ரூ.3780 கோடியை ஒதுக்கியிருப்பது எந்தவகையில் நியாயமாகும். அதிலும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உழைப்பாளிகள். இவர்களுக்கு வருவாய் கிட்டக் கூடிய நூறு நாள் வேலைத்திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே முடக்கிவிட்டது. 500 தொழிலாளிகள் உள்ள ஊரில் 50 பேருக்கு மட்டுமே வேலை வழங்கி வருகின்றனர். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியை மனித உழைப்புக்கு தராமல் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளுக்கும். காண்ட்ராக்ட் பணிகளுக்கும் வழங்கி வருகின்றனர். இது கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், செய்த கொஞ்சநாள் வேலைக்கும் மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், கொரோனா காரணமாக நோய் பரவலை தடுக்க வேலைக்கு போக வேண்டாம் என்று அரசே அறிவித்துள்ளது. இதை நியாயமென்று ஒருவகையில் ஏற்று கொண்டால், வேலையும் கிடைக்காது, வருவாயும் கிடைக்காது. அப்படியென்றால் கிடைத்து வந்த கொஞ்சநஞ்ச வேலையும் முற்றாக இல்லாத சூழலில் ஏற்கெனவே செய்த வேலைகளுக்கும் மூன்று மாத சம்பளம் கொடுக்கப்படாத நிலையில், 95 லட்சம் தொழிலாளிகள் என்ன செய்வார்கள். தமிழக அரசு 110 விதியின் கீழ் இந்த தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்தில் நூறு வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மட்டும் இரண்டு நாள் ஊதியத்தை கொரோனா உதவி தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இரண்டு நாள் ஊதியம் என்றால் சட்டக் கூலி எங்கேயும் அமலாகவில்லை.(ரூ.229) சராசரியாக ரூ.150 தான் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது.

அப்படியென்றால் வெறும் ரூ.300 தான் கிடைக்கும். அதுவும் மார்ச் மாதத்தில் வேலைக்கு சென்றவர்களுக்கு மட்டும்தான். தமிழ்நாட்டில் 95 லட்சம் விவசாயத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்றால், மார்ச் மாதத்தில் 5 லட்சம் தொழிலாளிகளுக்கு கூட வேலை வழங்கவில்லை. அப்படியென்றால் 90 லட்சம் பேர்கள் வேலை செய்யாத பட்டியலில் இருக்கிறார்கள். மீதமுள்ள 5 லட்சம் பேருக்குத்தான் ரூ.300 உதவி கிடைக்கும். இதை வைத்து என்ன செய்ய முடியும்? பச்சக் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய்தான் வாங்கி தர முடியும். ஒரு கேலிக்கூத்தான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியதோடு, 90 லட்சம் பேர்களுக்கும் எந்த உதவியும் இல்லை என்ற நிலை எடுத்திருப்பது ஒரு அவமானகரமான முடிவாகும். இது தொழிலாளிகளுக்கு எந்தவகையிலும் நியாயம் வழங்கியதாக இருக்காது.