tamilnadu

img

திறந்த வேகத்தில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்

வியாபாரிகள் கொண்டாட்டம்; விவசாயிகள் நஷ்டம்

திண்டுக்கல், மார்ச்.9 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை விளாம்பட்டி நெல் கொள்முதல் நிலையம் காலதாமதமாக திறக்கப்பட்டு விரைவாக மூடப்பட்டது. இதனால் விவசாயிகளின் நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்து லாபமடைந்தனர். விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.  நிலக்கோட்டை வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு  ஒரு மாதம் ஆகிவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய வட்டங்களில் விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமநாயக்கன்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, பால சமுத்திரம் ஆகிய ஆறு மையங்களில் நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. விளாம்பட்டியில் 642 மெட்ரிக் டன், மட்டப்பாறையில் 546 மெட்ரிக் டன், ராமநாயக்கன்பட்டியில் 60 மெட்ரிக் டன்,  ஆத்தூரில் 83 மெட்ரிக் டன் நெல்லும்  கொள்முதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே விளாம்பட்டி, மட்டப்பாறை நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன.  இது குறித்து விவசாயி  எம்.காசிமாயன் கூறியதாவது:-  ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று மனுக்கொடுதது போராட்டம் நடத்தினல்  தான் அரசு திறக்கும். தஞ்சாவூர் மாவட்டம் போன்று நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இந்த முறை அறுவடை நடைபெற்ற நிலையிலி மிகவும் தாமதமாக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் நான்கில் ஒரு பங்கு நெல்லை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.  இதனால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டமடைந்தனர். விவசாயிகளிடம் 40 கிலோ கொண்ட நெல் சிப்பத்திற்கு ரூ.30 லஞ்சமாகப் பெற்றுள்ளனர். லாரி வாடகை செலவுக்காக என்று விவசாயிகளிடம் பெற்றுள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இவ்வாறு வசூல் வேட்டை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றார்.   (ந.நி.)