tamilnadu

img

சோசலிசத்தோடும், மதுரோவுடனும் நாங்கள்!

காரகஸ், மே. 3-ஏகாதிபத்தியத்தின் நிரந்தர அச்சுறுத்தல்களுக்கு சற்றும் அடிபணியாமல் வெனிசுலா மக்கள் மேதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். முதல்நாள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்த வெனிசுலா நாட்டின் மக்கள் இத்தனை ஆவேசத்துடன் தெருக்களில் இறங்கியது கண்டு மேற்கத்திய ஊடகங்கள் அச்சமடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கலவர முயற்சிகள் குறித்தும், அதை எதிர்கொள்ளும் தங்களது மகத்துவம் குறித்தும் வெனிசுலாவின் தொழிலாளி வர்க்கம் எழுப்பிய முழக்கங்களை உலகமே கேட்டது. அது ‘நாங்கள் சோசலிசத்தை பாதுகாப்போம், நாங்கள் மதுரோவுக்கு துணை நிற்போம்’. என்கிற ஆவேசக்குரல். ஹியூகோ சாவேசின் பொலிவாரியன் புரட்சிப்பாதையில் நாட்டை வழிநடத்தும் இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் காரகஸில் அணிதிரண்டனர். மிராப்ளோரஸ் அரண்மனை முன்பு அவர்கள் முழக்கம் எழுப்பியும், பாட்டுகள் பாடியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மேதினத்தை கொண்டாடினர். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உள்ளிட்ட தலைவர்கள் அந்த பேரணியை வாழ்த்தினர்.  

உலக ஊடகங்கள் மதுரோவின் ஆட்சியை மோசமானதாக சித்தரிக்க முயன்று வருகின்றன.

அதற்கேற்ப, அங்குள்ள எதிர்க்கட்சி அராஜகமான முறையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், அவற்றை வெனிசுலா அரசு திறமையாக எதிர்கொண்டு வருகிறது. இது ஊடகங்கள் இட்டுக்கட்டும் செய்திகளுக்கு மாறானது என பிரேசில் தொழிலாளர் அமைப்பின் தலைவர் வால்டர் போமர் தெரிவித்தார்.முன்னதாக வியாழனன்று அமெரிக்க கைக் கூலியான எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவாய்டோ ராணுவத்தில் உள்ள சில நபர்களின் உதவியுடன் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்றார். ஆனால், அது வெற்றிபெறவில்லை. இதைத் தொடர்ந்து குவாய்டோவின் ஆதரவாளர்கள் காரகசில் அணிதிரண்டனர். மேதின விழாவிலும் எதிர்க்கட்சி கலவரக்காரர்கள் அராஜக முயற்சிகள் மேற்கொண்டதோடு தொடர்ந்து வன்முறைகளைத் தூண்டினர். பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் மேதின பேரணிகள் நடத்திய தொழிலாளர்களுக்கு எதிராகவும் அராஜக முயற்சிகனில் இறங்கினர். எனினும் அவை அனைத்தையும் மக்கள் முறியடித்தனர்.