தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி யுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரு கிறது. செவ்வாயன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,901 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதில் 809 பேர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் செவ்வாயன்று கொரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தலைநகர் சென் னையிலும் அண்டை மாவட்டங்களான செங் கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,308 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,025 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையிலேயே உள்ளது.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே தமிழ கத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிக அளவில் குணமடைந்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை யில் ஒரே நாளில் 12 பேர் பலியாகி உள்ள நிலை யில் தமிழகத்தில் உயிரிழப்பு மிக மிகக் குறைவாக 0.80சதவீதம்தான் என்று அவர் புள்ளிவிபரக் கணக்கை எடுத்து நீட்டியுள்ளார்.
நான்குகட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பல்வேறு தளர்வுகள் செய்யப் பட்டுள்ளன. அதில் சில தளர்வுகள் தேவையா னவை என்றபோதும், தொற்று பரவுவதற்கு மக்க ளையே குற்றம்சாட்டும் வகையில்தான் முதல் வரின் பேச்சும், அரசின் நடவடிக்கைகளும் அமைந் துள்ளன. தனிமனித இடைவெளியை பின்பற்றுங் கள், கைகளைக் கழுவுங்கள், முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதால் மட்டும் நோய்த்தொற்றை தடுத்துவிட முடியாது.
பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப் பட வேண்டும், குறிப்பாக வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருப வர்களுக்கு முழுமையான சோதனை செய்யப் படவேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.
கொரோனா சிகிச்சையில் அரசு மருத்துவ மனைகள் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலை யில் பெரும்பாலான தனியார் மருத்துவமனை கள் விலகியே நிற்கின்றன. தனியார் மருத்துவ மனைகளும் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் வரம்பின்றி கொள்ளையடிப்பதை அனுமதிக்கக் கூடாது. நோய்த்தொற்று அதிகரிக் கக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணராமல் வெறும் வாய் வார்த்தைகளால் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாது.