tamilnadu

img

ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பறித்துவிட்டது டிஸ்னி....

வாஷிங்டன்: 
உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு நிறுவனமான 'வால்ட்டிஸ்னி'க்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பல்வேறு சொகுசு விடுதிகளும் பொழுது போக்கு பூங்காக்களும் உள்ளன. அவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி ஆசியா நாடுகளிலும் பாதிப்பு உள்ளதால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பூங்காக்களும் விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, தனது ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது டிஸ்னி நிறுவனம். இதன் மூலம், டிஸ்னி நிறுவனத்துக்கு, 500 மில்லியன் டாலர்கள் (3,829 கோடி ரூபாய்) மிச்சமாகும்.

சம்பளம் தரப்படாத பணியாளர்களுக்கு, மருத்துவ உதவிகள் வழங்குவதாகவும்; அமெரிக்காவில் வாழ்பவர்கள், அமெரிக்க அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற உதவுவதாகவும் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 'இக்கட்டான சூழலில் தொழிலாளர்களைக் கைவிடக் கூடாது. அவர்களுக்கு சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும்' எனத் தெரிவித்து வருகின்றனர்.

டிஸ்னி 2019-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 41.4 பில்லியன் இயக்க வருமானத்தை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளத்தைப் பறித்துக் கொண்ட டிஸ்னி,  ஆன்லைன் இணைய தளமான டிஸ்னி பிளஸ் தொடங்கப்பட்டு ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.