வேலூர், ஏப்.9-
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் (2019-20) கூடுதலாக இரு மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்புக்கும் தலா 6 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2005-ஆம் ஆண்டு 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்பட்டது. அத்துடன், செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்பம், எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன், மருத்துவ உதவியாளர், ரேடியாலஜி அண்ட் இமாஜின் ஆகிய பிரிவுகளில் பட்டயப் படிப்புகளும், ஓராண்டு அறுவை சிகிச்சை அறை உதவியாளர், ஆர்த்தோ டெக்னீஷியன் ஆகிய பிற சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. இவற்றுடன் எம்.டி. ஜெனரல் மெடிசின் 10 இடங்கள், எம்.எஸ்.ஜெனரல் சர்ஜரி 9 இடங்கள், எம்.டி. அனஸ்தீசியா 4 இடங்கள் ஆகியவற்றுடன் மருத்துவ மேற்படிப்புகளும் உள்ளன. இந்நிலையில், பட்டயப்படிப்புகளாக இருந்த மருத்துவ உதவியாளர், ரேடியாலஜி அண்ட் இமாஜின், எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன் ஆகிய படிப்புகள் பி.எஸ்சி இளநிலை பாராமெடிக்கல் படிப்புகளாக மாற்றப்பட்டும், கூடுதலாக பி.எஸ்சி ஆபரேஷன் அண்ட் அனஸ்தீசியா டெக்னீஷியன் படிப்பு தொடங்கப்பட்டும் கடந்த ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது.இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2019-20) எம்.டி. குழந்தைகள் நலம், எம்.எஸ். மகப்பேறியல் மருத்துவம் ஆகிய மருத்துவ மேற்படிப்புகள் தலா 6 இடங்களுடன் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளதாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2020-21) எம்.எஸ் ஆர்த்தோபீடிக் படிப்பு 6 இடங்களுடன் தொடங்கப் பட்டும், 4 இடங்களாக உள்ள எம்.டி. அனஸ்தீசியா படிப்பில் 5 சீட்டுகள் அதிகரித்து 9 இடங்களுடனும் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.