லக்னோ, ஏப்.17- உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. அத்துடன், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ள அந்த கட்சி, 38 வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்து, பாஜக-வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில் ‘ராஜ்பர்’ எனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கும் இந்த கட்சி, ‘பூர்வாஞ்சல்’ எனும் தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இதன் தலைவராக ஓம் பிரகாஷ் ராஜ்பர் இருந்து வருகிறார்.இந்த கட்சி, கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், பாஜக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றிபெற்றது. இதன்காரணமாக அக்கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.எனினும், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். பல விஷயங்களில் பாஜக-வை நேரடியாகவே அவர் தாக்கினார்.
இந்நிலையில்தான், மக்களவைக்கான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டுள்ள ஓம் பிரகாஷ் ராஜ், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.“எங்கள் சின்னத்தில் போட்டியிடக் கேட்ட 2 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக வழங்க மறுத்து விட்டது. தாமரைச் சின்னத்தில் போட்டியிடுமாறு நிர்ப்பந்தம் அளிக்கிறது. எனவே, நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மற்றும் உத்தரப்பிரதேச பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மேனகா காந்தி மற்றும் மனோஜ் சின்கா, ரீட்டா பகுகுணா ஜோஷி உள்ளிட்ட பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் 38 தொகுதிகளுக்கான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் வேட்பாளர்களையும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அறிவித்துள்ளார்.வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பாக தனது அமைச்சர் பதவியை ஓம் பிரகாஷ் ராஜ்பர் ராஜினாமா செய்து விட்டார்.சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தளம் கூட்டணியால், உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே பாஜக பலவீனமடைந்திருக்கும் நிலையில், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் தற்போது வெளியேறி இருப்பது, பாஜகவுக்கு மேலும் ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது. அதேநேரம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இது சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.