tamilnadu

img

அரசியலுக்காகவே தனது சாதியை பி.சி. என்று மோடி மாற்றினார்

லக்னோ:

தேர்தல் வெற்றிக்காக, ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மைக்காலமாக சாதிவெறியையும் தூண்டிவிட்டு வருகிறார். 

தன்னைத் திருடன் என்று கூறியதன் மூலம், தான் பிறந்த ‘மோடி’ சமுதாயத்தையே ‘திருடர்கள்’ என்று ராகுல் காந்தி கூறிவிட்டதாக, பிரதமர் நரேந்திர மோடி கொளுத்திப் போட்டது, காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிர்ச்சி நீங்கும் முன்பாகவே, உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரும், தன்னைச் சாதியைச் சொல்லி திட்டிவிட்டதாக மற்றொரு நாடகத்தை அரங்கேற்றினார்.


“நாட்டு மக்கள் எனது சாதி என்னவென்றே தெரியாமல் இருந்தனர்; ஆனால், மாயாவதியும், அகிலேஷூம் என் சாதியை மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டனர்; அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததை பெருமையாகவே கருதுகிறேன்” என்று பச்சாதாபம் தேடினார்.

ஆனால், மோடியின் இந்த பொய்ப்பிரச்சாரத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் சாதி குறித்து யாரும் பேசவில்லை; மோடிதான் அவராகவே அரசியலுக்காக அவரது சாதியை இழுத்து விடுவதாக மாயாவதி கூறியுள்ளார்.


“தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன் என்கிறார் மோடி; அது உண்மையல்ல; தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று கூறினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக, மோடி அவராகவே, தனக்குள்ள ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, தான் சார்ந்த சாதிப்பிரிவை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துக் கொண்டார்; முலாயம் சிங், அகிலேஷ் போல மோடி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர் கிடையாது; எனவே, சாதியை வைத்து அரசியல் செய்வது பிரதமர் மோடிதான்” என்றும் மாயாவதி விமர்சித்துள்ளார்.