புதுதில்லி:
அயோத்தி வழக்கில் மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமையான பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டில் இந்துத் துவ அமைப்பினரால் இடிக் கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. ராமஜென்ம பூமி - பாபர் மசூதி பிரச்சனைக்குக் காரணமான சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அந்த நிலத்தை சன்னி வக்புவாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப் பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறை யீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலை மையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ச் 8ஆம் தேதியன்று இந்த வழக்கு தொடர்பாக மத்தியஸ்த குழுவை அரசியல் சாசன அமர்வு அமைத்து உத்தர விட்டது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தி யஸ்த குழுவில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகி யோர் இடம்பெற்றனர். அயோத்திக்குச் சென்று இந்த குழு அனைத்துப் பிரி வினரிடம் ஆலோசனை நடத்தி 8 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்றும், பைசாபாத் நகரில் இது நடைபெறுமென்றும், அதுவரை ஊடகங்களில் இது பற்றிய விவரங்கள் வெளிவரக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியது.
மே 6ஆம் தேதியன்று இந்த குழு உச்சநீதிமன்றத் தில் இடைக்கால அறிக்கை யைச் சமர்ப்பித்தது. இந்த வழக்கின் மீதான விசார ணை வெள்ளியன்றும் உச்சநீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண் டும் என்று மத்தியஸ்த குழு கோரியது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
விசாரணையின்போது, உச்ச நீதிமன்றப் பதிவேட்டில் உள்ள ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளில் சந்தேகங்கள், எதிர்ப்புகள் இருந்தால் மனுதாரர்கள் தெரிவிக்கலாம் என்று அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது. நிர்மோஹி அகாரா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில் ஜெயின், மத்தியஸ்த குழுவின் செயல் பாடுகளில் சில சிக்கல்கள் உணரப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் மத்தியஸ்தகுழுவில் உள்ளவர்கள் எவரும் அவ்வாறு உணர வில்லை என நீதிபதிகள் அமர்வு பதிலளித்தது.
மத்தியஸ்த குழுவினர் நேர்மறையாக இருப்பதாகவும், அதனால் அவர்கள் கேட்ட கால அவகாசத்தைக் கொடுத்துள்ளோம் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.