tamilnadu

img

காங்கிரசை கூட்டணி சேர்க்காததால்  10 தொகுதிகள் பறிபோனது!

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட திட்டம் வகுக்கப்பட்டு வந்தது.

ஆனால், மாயாவதியும், அகிலேசும் சேர்ந்து திடீரென காங்கிரசை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டனர். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் சேர்ந்தாலே பாஜக-வை தோற்கடித்து விடலாம்; அப்படியிருக்க, காங்கிரசை கூட்டணியில் சேர்த்து அந்தக் கட்சிக்கு எதற்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கணக்குப் போட்டனர். அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியை மட்டுமே இணைத்துக் கொண்டனர்.

ஆனால், இந்தக் கூட்டணி எதிர்பார்த்தபடி வெற்றியைப் பெற முடியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்களும், சமாஜ்வாதிக்கு 5 இடங்களும் மட்டுமே தற்போது கிடைத்துள்ளன.இந்நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் காங்கிரசும் இணைந்திருந்தால், தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. குறைத்து கணக்கிட்டாலும் 10 முதல் 15 தொகுதிகளை இந்த கூட்டணி கூடுதலாக வென்றிருக்கும் என்பது வாக்குகளை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
ஏனென்றால், காங்கிரஸ் பிரித்த வாக்குகளால் மட்டும் பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய 10 தொகுதிகளை பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி இழந்துள்ளது. காங்கிரஸ் பிரித்த வாக்குகளே பாஜக வெற்றி பெறுவதற்கும் உதவியுள்ளது.
மேற்கண்ட 10 தொகுதிகளில், காங்கிரஸ் பெற்ற வாக்குகளையும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி பெற்ற வாக்குகளையும் கூட்டினால், அது பாஜக பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும்.

பாரபங்கி தொகுதியில் பாஜக வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுஜ் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 வாக்குகளை பெற்றுள்ளார். 
பதான் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 18 ஆயிரம் ஆகும். ஆனால், இங்கு காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணி தனித்துப் போட்டியிட்டு, 51 ஆயிரத்து 947 வாக்குகளை அள்ளியிருக்கிறார்.

பாந்தா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷியாம சரண் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இருவருக்கும் வித்தியாசம் 49 ஆயிரம் வாக்குகள். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் பெற்ற வாக்குகள் மட்டும் 75 ஆயிரத்து 438. இதேபோன்றுதான் பல தொகுதிகளில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி தோற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றதை, பாஜக தனக்கு சாதமாக்கி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஒட்டுமொத்தமாக 49.56 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 38.62 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. வாக்கு வித்தியாசம் சுமார் 10 சதவிகிதம் ஆகும். இதற்கிடையே காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 6.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.