tamilnadu

img

காத்திருப்பு போராட்டம் வெற்றி டேங்க் ஆபரேட்டர்களுக்கு காசோலை

உளுந்தூர்பேட்டை, செப்.5- திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தையடுத்து காசோலை வழங்கப்பட்டு பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், துப்புரவு மற்றும் தூய்மை காவலர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை, பணிக் கருவிகள், பண்டிகை நாட்கள் விடுமுறை, பணி நேர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் நடைபெறும் இடத்தில் உணவு சமைத்து தொடர்ந்து அங்கேயே நடைபெற்ற நிலையில் மாலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிலுவையில் இருந்த பொங்கல் போனஸ் தொகைக்கான காசோலை தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கான ஊதிய பாக்கி நிலுவைத் தொகைக்கான காசோலை அங்கேயே இரவு 7 மணியளவில் வழங்கப்பட்டது. இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் ஜி.சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் ஏ.முனுசாமி, பொருளாளர் கே.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.குமார் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ஜெ.ஜெயக்குமார், தையல் சங்க மாவட்டச் செயலாளர் பி. ஸ்டாலின், ஜி.தாமோதரன், ஐ.ஷேக்சலாவுதீன், கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.