உலகக் கோப்பையும் கவாஸ்கரும்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதன் தரத்தில் உச்சத்திலிருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில், 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நடத்தப்பட்டது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இப்போது போல் டெஸ்ட் போட்டி, 50 ஓவர் ஒரு நாள் தொடர், டி 20 என தனித் தனியாக அணியை தேர்வு செய்தது கிடையாது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. அதுவும் டெஸ்ட் பாணியிலேயே முதல் உலகத் தொடர் அமைந்திருந்தது. ஒவ்வொரு அணியும் தலா 60 ஓவர்கள் விளையாட வேண்டும். இந்த உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்பு கிட்டத்தட்ட 18 சர்வதேச ஒருநாள் போட்டியே நடைபெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்கள் எதுவும் அன்றைக்கு கிடையாது. இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், ஜி. ஆர். விஸ்வநாத் இருவர் மட்டுமே உலக அளவில் அறியப்பட்ட வீரர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட் ராகவன் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். முதன் முதலாக உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணி, கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் மிகப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அந்நாட்டு அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. முதலில் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சாளர் கர்சன் கவ்ரி 16 ஓவர்களில் 83 ரன்கள் வாரி வழங்கினார்.
அடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை நோகடித்த அவர்,174 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் எடுத்தார். இதுவே அவரது வாழ்நாளில் மிக மட்டமான ஆட்டமாகும். ஆனாலும், அவரை கடைசி வரைக்கும் அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் சரணடைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது.கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களை அடித்து கம்பீர நடை போட்டார். அதேசமயம், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 13 ஆண்டுகள் கோலோச்சி 27 அரைச்சதங்களை அடித்தும் அவரால் 100 ரன்களை அடிக்க முடியாதது பெரும் குறையாகவே இருந்தது. அதனை, 1987 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் அதுவும் தனது கடைசி ஆட்டத்தில் 88 பந்துகளில் முதல் கன்னி சதத்தை எடுத்து ஓய்வு பெற்றார்.
மகுடம் சூடிய கருப்பு தங்கங்கள்!
முதல் உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளே பலம் பொருந்திய அணிகளாகும். நியூசிலாந்து, பாகிஸ் தான், இந்தியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா(கென்யா, தான்சானியா, உகாண்டா, ஜாம்பியா நாடுகளின் கிளப் வீரர்கள் அடங்கியது) ஆகிய அணிகள் அடுத்த வரிசையில் இருந்தன. எதிர்பார்த்ததை போன்று அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து உள்ளிட்ட பலம் பொருந்திய அந்த நான்கு அணிகளும் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா அணியும் நியூசிலாந்தை ஊதித் தள்ளிய மேற் கிந்திய தீவுகள் அணியும் பலப் பரீட்சை நடத்தின. லார்ட்ஸ் மைதானம் ரசிகர்களின் வெள்ளத்தில் களை கட்டியது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதல் உலகக்கோப்பைக்கு முத்தமிட்டு வெற்றி மகுடம் சூடியது. இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் கிளைவ் லாய்ட் அடித்த பந்துகள் நாலாபுறமும் சீறிப் பாய்ந்தன. பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினார். 82 பந்துகளில் 102 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
புதுவரவுகள்!
1979ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது உலக கோப்பைக்கான இந்திய அணியில் கபில்தேவ், வெங்சங்கர், மொகிந்தர் அமர்நாத் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். முதல் உலகக் கோப்பைக்குப் பிறகு மேலும் பலம் அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் கார்டன் கிரீனிட்ஜ், விவியன் ரிச்சர்ட்ஸ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், இலங்கை அணியில் துலிப் மெண்டிஸ், சிதாத் வெட்டு மனி, ராய் டயஸ், ரஞ்சன் மதுகல்ல என ஒவ்வொரு அணியிலும் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்தனர்.முதல் உலகக் கோப்பை நடந்த அதே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்சின் கம்பீரமும் நளினமும் பொருந்திய ஆட்டத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிப்பதற்கு தூணாக நின்று கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.