tamilnadu

img

எதிரொலி... - மதுக்கூர் இராமலிங்கம்

வாயை  மூடிக் கொண்ட டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனிமேல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கப் போவதில்லை என்று வெறுத்துப்போய் கூறிவிட்டார். கொரோனா பாதிப்பிலும் பலியிலும் அமெரிக்கா தான் இன்றைக்கு முதலிடம் வகித்துக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்வதற்குப் பதிலாக உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.சபை, ஈரான், சீனா என வெட்டி வம்பு இழுத்துக்கொண்டிருக்கும் டிரம்ப், தன்னுடைய நாட்டில் மாநில ஆளுநர்களுடனும் வாய்ச்சண்டை வளர்த்து வருகிறார்.

பெரிய மருத்துவசிகாமணி போல அவ்வப்போது சில ஆலோசனைகளையே தன் பேட்டிகளில் வழங்கி வந்தார் டிரம்ப். கிருமி நாசினியை ஊசி மூலம் அனைவரது உடலும் செலுத்தினால் என்ன. புற ஊதாக் கதிர்களை அனைவரது உடலிலும் செலுத்தினால் என்ன என்றெல்லாம் கேள்வியெழுப்பினார். ஏற்கனவே வெந்து நொந்து போயிருக்கும் அமெரிக்க மக்கள் டிரம்பை வறுத்தெடுத்துவிட்டனர். நான் வேடிக்கையாகத்தான் அமெரிக்கர்களுக்குச் சொன்னேன். அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு நகைச்சுவை உணர்வே அற்றுப்போய்விட்டது என அலுத்துக்கொண்டார். 

மேலும், அமெரிக்க ஊடகங்கள் உண்மையான செய்திகளை தர ஆர்வம் காட்டுவதில்லை; என் வாயைக் கிண்டி வடை சுடுவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்று குமுறியுள்ளார் டிரம்ப். இப்படியே உளறிக் கொண்டிருந்தால் வரும் தேர்தலில் தேற முடியாது என்று எச்சரிக்கப்பட்டதால் தான் டிரம்ப் தற்காலிகமாக வாய்க்கு பூட்டுப் போட்டிருப்பதாக அங்குள்ள பத்திரிகைகள் கூறுகின்றன.

அம்மா உணவகமா?  அதிமுக உணவகமா?

தமிழ்நாட்டில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு என்ன வழி என்று கேட்டால் ஆளுங்கட்சியினர் கூறும் ஒரே பதில் அது தான் அம்மா உணவகம் நடத்துகிறோமே என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஏழு லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் பசியாற்றப்படுவதாக கூறுகின்றனர். நல்லது. மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் தான் அம்மா உணவகத்தை நடத்துகின்றன. கிராமப்புறங்களில் அம்மா உணவகம் இல்லை. அங்குள்ள மக்கள் என்ன செய்வது. நகர்புறத்திலும் கூட அத்தனை பேருக்கும் அம்மா உணவகம் மூலம் உணவளிக்க முடியுமா?

இதுவொருபுறமிருக்க... அம்மா உணவகத்திற்கு அதிமுகவினர் மட்டும் தான் உதவிசெய்ய வேண்டுமாம். எதிர்க்கட்சிகள் பண உதவியோ, பொருளுதவியோ செய்யக்கூடாதாம். அம்மா உணவகத்தை அதிமுக நடத்தினால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. அரசுக் கட்டடத்தில், உள்ளாட்சி அமைப்பு நிதியில் நடப்பதை ஆளுங்கட்சியினர் தங்கள் சொந்த ஹோட்டல் போல கருதுவது நியாயமில்லை. 

மறுபுறத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்களையும் காவல்துறை மூலம் தடுக்கிறது ஆளுங்கட்சி. அப்போதுதான் அம்மா உணவகத்தின் மகத்துவம் விளங்குமாம். அனைவரது நன்கொடையைப் பெற்று அம்மா உணவகத்தை நடத்துவதே பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து ஆளுங்கட்சியினர் “சாப்பிடுகிற இடமாக” அம்மா உணவகம் மாறிவிடக்கூடாது.

இருப்பவர்களிடமிருந்து  எடுத்தால் என்ன?

கொரோனாவுக்கு கூடுதல் நிதி திரட்ட மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கம் அர்த்தப்பூர்வமாக ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதற்கான அறிக்கை பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டுள்ளது. வசதிமிக்கவர்களுக்கு அதாவது, ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வரிக்குறைப்பு செய்யப்பட்டது. இதை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தலாம்.

ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கும் மேலுள்ள கோடீஸ்வரர்களிடம் மீண்டும் செல்வ வரி வசூலிக்கலாம். இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வருமானத்திற்கு இரண்டு சதவீதமும், ரூ.10 கோடிக்கும் அதிகமான வருவாய்க்கு ஐந்து சதவீதம் சர்சார்ஜாகவும் வசூலிக்கப் படுகிறது. இதை உயர்த்தலாம் என்று யோசனை கூறியுள்ளனர். இதுபோன்ற கருத்துக்களைத்தான் இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

ஆனால், மோடி அரசு இந்த யோசனைகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை கூடுதலாக்கலாமா, சுங்கக் கட்டணத்தை கூடுதலாக்கலாமா, ரேபிட் டெஸ்ட் கருவிகள் உட்பட அனைத்திற்கும் ஜிஎஸ்டி போடலாமா என்றுதான் யோசிப்பார்களே தவிர, பணக்காரர்களுக்கு ஒரு பைசா இழப்பு ஏற்பட சம்மதிக்க மாட்டார்கள். அப்படியென்றால் ஏழைகளுக்கு என்னதான் செய்வார்கள்? அவ்வப்போது முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு ஆறுதல் கூறுவார்கள்!